வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை!

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும், 23 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதும் மிகப் பெரிய மாற்றத்தின் அறிகுறி என்று யாராவது நினைத்தால் அது தவறு.
Updated on
2 min read

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதும், 23 சதவீத வாக்குகளைப் பெற்றிருப்பதும் மிகப் பெரிய மாற்றத்தின் அறிகுறி என்று யாராவது நினைத்தால் அது தவறு. இதனால் காஷ்மீரத்தில் நிலவும் தீவிரவாதப் போக்கு மாறும் என்றோ, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிடத் தயாராகி விட்டனர் என்றோ கருதிவிட முடியாது.

87 பேரைக் கொண்ட ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும், பாஜக 25 இடங்களையும், தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் 12 இடங்களையும் ஏனைய உதிரிக் கட்சிகள் ஏழு இடங்களையும் பெற்றிருக்கின்றன. மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு காங்கிரஸ் ஏற்கெனவே நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்து விட்டது. ஏழு சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் மக்கள் ஜனநாயகக் கட்சியும் காங்கிரஸூம் இணைந்து ஆட்சி அமைத்தால் வியப்படைவதற்கில்லை.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பெருவாரியாக இந்துக்கள் வாழும் ஜம்மு, முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு, பௌத்தர்கள் வசிக்கும் லடாக் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டது. இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்மு பகுதியிலுள்ள 37 இடங்களில் 25 இடங்களை பாஜக வென்றிருப்பதால்தான் அது இரண்டாவது பெரிய கட்சியாகி இருக்கிறது. எனினும், இதே ஜம்மு பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 12 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

காஷ்மீர் பள்ளத்தாக்கை எடுத்துக் கொண்டால் 25 இடங்களில் மக்கள் ஜனநாயகக் கட்சியும், 12 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சியும், 4 இடங்களில் காங்கிரஸூம் வெற்றி பெற்றிருக்கின்றன. அங்கு பாஜக ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. பாஜக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் முஸ்லிம் வேட்பாளர்கள் பலரைக் களமிறக்கிப் பரபரப்பாகப் பிரசாரம் செய்தும்கூட வெறும் 2.2 சதவீத வாக்குகள்தான் பெற்றிருக்கிறது.

அதேபோல, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற லடாக் பகுதியில், பாஜகவால் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை என்பது மட்டுமல்ல, இங்கு மொத்தமுள்ள நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. ஜம்முவில் பாஜக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் தேசிய மாநாடுக் கட்சியும், லடாக்கில் காங்கிரஸ் என்று தெளிவான அரசியல் சார்பை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

87 தொகுதிகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 46 இடங்கள், ஜம்முவில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியிலுள்ள 12 இடங்கள் ஆகியவற்றைச் சேர்த்து 58 தொகுதிகளில், 44 தொகுதிகளைக் கைப்பற்றிவிட முடியும் என்று நினைத்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. ஆனால், 28 இடங்களுடன் அதிக இடங்களை வென்ற கட்சியாக இருப்பது வெற்றிதான்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் தடம் பதித்து முஸ்லிம்களின் ஆதரவுடன் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கலாம் என்கிற பாஜகவின் கனவு தகர்ந்திருக்கிறது. ஆனால், 23 சதவீத வாக்குகளுடன் 25 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உயர்ந்திருக்கிறது என்கிற அளவில் பாஜகவுக்கு வெற்றியே. மக்கள் ஜனநாயகக் கட்சி (22.7%), தேசிய மாநாட்டுக் கட்சி (20.8%), காங்கிரஸ் (18%) ஆகியவற்றைவிட பாஜகவின் வாக்கு விகிதம் அதிகம் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

படுதோல்வி அடையும் என்று எதிர்பார்த்த தேசிய மாநாட்டுக் கட்சி, ஆட்சியை இழந்திருக்கிறதே தவிர, செல்வாக்கை முழுமையாக இழந்துவிடவில்லை. 20.8 சதவீத வாக்குகள் பெற்று 15 இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள பல தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி வேட்பாளர்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

காங்கிரஸூம் சரி, வெற்றி பெற்ற தொகுதிகள் 12 தான் என்றாலும்கூட 18 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சியாகத் தொடர்கிறது. ஜம்மு பகுதியிலுள்ள முஸ்லிம்கள் மத்தியில் காங்கிரஸூக்கு கணிசமாகவே செல்வாக்கு இருப்பது தெரிகிறது.

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்குவதற்கு, முறையாகத் தேர்தல்கள் நடத்தப்படாததுதான் காரணம். இப்போது சட்டப்பேரவைத் தேர்தல் முறையாக நடந்திருக்கிறது. மக்கள் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறி வாக்களித்திருக்கிறார்கள். அவர்களது நம்பிக்கை குலைந்து விடாமல் அனைத்துக் கட்சிகளும் நிலையான ஆட்சி அமையவும், காஷ்மீரத்தில் ஜனநாயகம் வேரூன்றவும் ஒத்துழைக்க வேண்டியதே இன்றைய தேவை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com