எல்லாமே ஏடாகூடம்!

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மசோதா மற்றும் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு அளவை அதிகரிக்கும் மசோதா இரண்டுக்குமான அவசரச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஒப்புதல் கொடுத்துள்ளார்.
Updated on
2 min read

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மசோதா மற்றும் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு அளவை அதிகரிக்கும் மசோதா இரண்டுக்குமான அவசரச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஒப்புதல் கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்படாமல் இவ்வாறு அவசரச் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவது ஜனநாயக முறையல்ல என்று எதிர்க்கட்சிகள் கூக்குரலெழுப்புவது போலித்தனமான செய்கை. வேண்டுமென்றே நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரை நடைபெறாமல் செய்து, இந்த இரண்டு மசோதாக்களையும் நிறைவேறாமல் செய்தது அவர்களேதான் எனும்போது, அரசைக் குறைகூறுவது என்ன நியாயம்?

இந்த இரு மசோதாக்களும் அவையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்க வேண்டிய முக்கியமான மசோதாக்கள். இரண்டுமே ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் பாதிக்கக்கூடியவை. ஆனால், இதை விவாதிப்பதைவிடவும், மிகச் சாதாரணமான விஷயங்களுக்காக அவை நேரம் வீணடிக்கப்பட்டது என்பது எதிர்க்கட்சிகளின் பொறுப்பற்றத்தனத்தைதான் காட்டுகிறது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்திருப்பதால், அந்த ஒதுக்கீடுகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இறக்குமதி செய்ய முடியும் என்றாலும், அவற்றின் விலை தற்போது சர்தேச அளவில் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்கி வந்து, மின்உற்பத்தி செய்து, குறைந்த விலையில் மின்சாரத்தை மக்களுக்கு வழங்கினால் மின்வாரியங்களுக்கு மிகப்பெரும் நட்டம் ஏற்படும். ஏற்கெனவே மின்நிறுவனங்கள் அனைத்தும் பெரும் நட்டத்தில் இருக்கும்போது இது சாத்தியமே இல்லை. ஆகவே இந்தியா

விலேயே கிடைக்கும் நிலக்கரியை நாம் பயன்படுத்தவும் அதற்காக நிலக்கரிச் சுரங்க வயல்களை ஒதுக்கீடு செய்யவும் வேண்டும். இது மிக அவசரத் தேவை. ஆனால் இதைக் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை.

தற்போது இந்தியா முழுவதிலும் 293 கோடி யூனிட் மின்சாரம் பற்றாக்குறை நிலவுகிறது. இப்போதே நிலக்கரி ஒதுக்கீடு செய்து, நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி அடுத்த மாதத்தில் தொடங்காவிட்டால், அடுத்த ஆண்டு கோடை தொடங்கும்போது, மின்தட்டுப்பாடு இரட்டிப்பாகும் அபாயம் உள்ளது. அதைப் பொறுப்புடன் உணர்ந்து தங்கள் அமளியை குறைத்துக்கொண்டு, குறைந்தபட்சம் நிலக்கரி ஒதுக்கீடு மசோதாவை மட்டுமாகிலும் எதிர்க்கட்சிகள் நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

காப்பீட்டுத் துறையில் நேரடி அன்னிய முதலீட்டு அளவை 26% லிருந்து 49%-க்கு உயர்த்தும் மசோதா ஒவ்வொரு இந்தியருக்கும் மிகவும் முக்கியமானது. ஏனெனில், இந்த முதலீட்டு அளவை உயர்த்துவதன் மூலம் இந்தியாவுக்கு சுமார் 8 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு கிடைக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், அவர்களது முதலீட்டின் பெரும் பகுதி மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகத்தான் இருக்கப் போகிறது. இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், தனிநபர் சார்ந்ததாக மட்டுமின்றி, அரசு திட்டங்கள் சார்ந்த காப்பீட்டு திட்டங்களும் அவர்களிடம்தான் போகும் என்

பதில் சந்தேகம் இல்லை. அரசு அலுவலர்கள், ஏழைகள், பணக்காரர்கள் எல்லாருடைய மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு மாறும்போது, பிரீமியத் தொகை மூலம் இந்த அன்னியக் காப்பீட்டு நிறுவனங்கள் அடையப்போவது கொள்ளை லாபமாக இருக்கும்.

இந்த முதலீட்டு அளவை உயர்த்துவது அவசியத் தேவை என்றால், இதற்கான கடிவாளங்கள் என்ன என்பது குறித்து மத்திய அரசிடம் விவாதித்து, அவர்களிடமே விவரங்களைப் பெற வேண்டிய எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் இதற்கான வாய்ப்பையே ஏற்படுத்தவில்லை. இப்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கக்கூடாது என்று சொல்வதால் என்ன பயன்?

எதிர்க்கட்சியாக இருந்தபோது பாஜக என்ன செய்ததோ, அதையே இப்போது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் செய்கின்றன என்பது உண்மை. அப்போது, பாஜகவின் பொறுப்பற்றதனத்தைக் கண்டித்த காங்கிரஸ் இப்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டாமா என்பதுதான் கேள்வி.

நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். ஆனால் அங்கே கூச்சல் போடுகிறார்கள். வெளியே கண்டனக் கூச்சல் போட வேண்டும். ஆனால் அங்கே விவாதிக்கிறார்கள். நமது இந்தியத் திருநாட்டில் எல்லாம் தலைகீழாக நடக்கிறது, என்ன செய்ய?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com