திரும்பிப் பார்த்தால்...

எந்தவோர் ஆண்டையும் திருப்புமுனை ஆண்டு என்றோ, குறிப்பிடும்படியாக எதுவும் இல்லாத ஆண்டு என்றோ தீர்மானித்துவிட முடியாது.
Updated on
2 min read

எந்தவோர் ஆண்டையும் திருப்புமுனை ஆண்டு என்றோ, குறிப்பிடும்படியாக எதுவும் இல்லாத ஆண்டு என்றோ தீர்மானித்துவிட முடியாது. தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகளும், அந்த ஆண்டில் நடந்த சம்பவங்களால் ஏற்பட்ட மாற்றங்களும்தான் ஓர் ஆண்டை எடைபோட அடிப்படையாக இருக்க முடியும்.

2014 மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி, நரேந்திர மோடி என்கிற புதியதொரு தலைமையை தேசிய அளவில் அறிமுகப்படுத்திய ஆண்டு என்பதும் இந்தியர் ஒருவருக்கு சமாதானத்திற்கான நோபல் விருதைப் பெற்றுத்தந்த ஆண்டு என்பதும், கடந்துபோன ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தனிப்பெரும்பான்மையுடன் ஓர் அரசை மத்திய ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். அதன் மூலம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நிலவி வந்த கூட்டணிக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நரேந்திர மோடியின் ஆண்டு 2014 என்று சொன்னாலும் அதில் தவறில்லை.

இந்த மாபெரும் மாற்றத்திற்கும், பாஜகவின் தேர்தல் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் ஏற்படுத்திய நம்பிக்கை. வளர்ச்சிப் பாதையில் இந்தியா என்கிற அவரது கோஷம்தான், பாஜக இப்படியொரு பெருவெற்றியை அடைவதற்குக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுவரை மாநில அளவில் மட்டுமே தனது நிர்வாகத் திறமையையும், செயல்பாட்டையும் நிரூபித்திருந்த நரேந்திர மோடியின் மீது நம்பிக்கை வைத்து தேசிய நிர்வாகத்தை அவரிடம் அளித்தனர் மக்கள் எனும்போது, அவர்களது எதிர்பார்ப்பு எந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

பதவிக்கு வந்து ஏழு மாதங்களாகிவிட்டன. நியூயார்க்கிலும், சிட்னியிலும் பிரதமர் நரேந்திர மோடியின் எழுச்சி உரைகள், இந்தியாவிலுள்ள சாமானியனுக்குக்கூட தேசபக்தியைக் கொழுந்துவிட்டு எரிய வைத்திருக்கின்றன. ஆனால், அவரது பல்வேறு வெளிநாட்டு விஜயங்கள் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தியதா என்றால், அப்படியொன்றும் இல்லை. முந்தைய மன்மோகன் சிங்கின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வெளிவிவகாரக் கொள்கையும், அணுகுமுறையும் நரேந்திர மோடி அரசால் வழிமொழியப்படுகின்றன, அவ்வளவே.

அதுவரை, நரேந்திர மோடியை மதவெறியராகவும், குஜராத் கலவரங்களுக்குக் காரணமானவராகவும் மட்டுமே பார்த்த வெளிநாட்டவர்களால் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறார். அதுவரைக்கும் அவருக்குத் தனிப்பட்ட வெற்றி. ஆனால், அதனால் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லையே? தேர்தல் பிரசாரத்தில் கடுமையாக விமர்சித்த சீனாவுடன் பிரதமர் நரேந்திர மோடி இப்போது நெருங்கிய நட்புப் பாராட்டுகிறார் என்பதுதான் மாற்றம்.

பொருளாதாரப் பிரச்னைகளிலும் சரி, "இந்தியாவில் தயாரிப்போம்' என்கிற முழக்கத்தை வெளியிட்டிருக்கிறாரே தவிர, அதற்குத் தகுந்தபடி பொருளாதார நடவடிக்கைகளில் பெரிய மாற்றமொன்றும் ஏற்பட்டு விடவில்லை. சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவில்லை. மூன்றாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாக நரேந்திர மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செயல்படுவதாகக் கூறப்படும் கேலிப்பேச்சில் அர்த்தம் இல்லாமல் இல்லை.

மக்களின் பேராதரவுடன் ஆட்சியிலமர்ந்தும், எதிர்க்கட்சிகளை அரவணைத்துச் சென்று நாடாளுமன்றத்தை நடத்த முடியவில்லை. நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது என்பது காரணமாகாது. நாடாளுமன்றத்தை நடத்துவதும், தனது மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதும் அரசின் கடமையே தவிர எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல என்று கடந்த ஆட்சியில் பாஜக முன்வைத்த அதே வாதத்தைத்தான் இப்போது எதிர்க்கட்சிகள் எதிரொலிக்கின்றன.

நரேந்திர மோடி அரசின் சாதனைகள் என்று சொன்னால், அது நிர்வாகத்தில் ஓரளவுக்கு வெளிப்படைத் தன்மையையும், வேகத்தையும் ஏற்படுத்தி இருப்பதைச் சொல்லலாம். மேலிடத்திலும், முக்கியமான திட்டங்களிலும் முறைகேடுகள் இல்லாமல் இருப்பதும், மத்திய அரசு அலுவலகங்களில் ஓரளவுக்கு சுறுசுறுப்பும், சுத்தமும் வந்திருப்பதும் அரசின் சாதனைகள்தான். இதைத் தவிர குறிப்பிடும்படியாக எந்தவொரு சாதனையும் இன்னும் செய்யப்படவில்லை என்பதை பிரதமரேகூட மறுக்க முடியாது.

வெளிநாடுகளிலும், வானொலியிலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும் தொடர்ந்து உரையாற்றும் பிரதமர், அவர் கட்டாயம் பேச வேண்டிய, விளக்கம் தர வேண்டிய நாடாளுமன்றத்தைக் தவிர்க்கிறார் என்பது தவறல்லவா? பிரதமர் பதிலளிக்க வேண்டிய இடம் பொதுக்கூட்ட மேடையல்ல, நாடாளுமன்றம். ஏன் தயங்குகிறார்?

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பிரச்னைக்கும் விவாதத்திற்கும் உள்ள விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம் என்பது பிரதமரின் சுதந்திர தின உரையின் முக்கிய அம்சம். அதை அவர் தனது கட்சிக்காரர்களுக்கு நினைவுபடுத்தினால் நல்லது.

2014 திருப்புமுனை ஆண்டா இல்லையா என்பதை 2015-இல் நரேந்திர மோடி அரசின் செயல்பாட்டின் அடிப்படையில்தான் எடைபோட முடியும். பிரதமர் நரேந்திர மோடியின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துவிடவில்லை. குலைத்துவிடாமல் காப்பாற்றுவது செயல்பாட்டில்தான் இருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com