மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், 2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையையும், ஜூலை மாதம் வரையிலான செலவுத் திட்டத்தையும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்திருக்கிறார். இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையில் முக்கியமான அறிவிப்புகளைச் செய்யவோ, மாற்றங்களைச் செய்யவோ முடியாது என்பதால், சில மேலோட்டமான அறிவிப்புகளையும், சலுகைகளையும், ஒதுக்கீடுகளையும் செய்ததுடன் நிறுத்திக் கொண்டிருக்கிறார். அவர் இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் என்பதைவிட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சாதனைகளை பட்டியலிட முற்பட்டார் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும்.
ஒருபுறம், ஆரோக்கியமான நிதிநிலைமை இருப்பதுபோன்ற தோற்றத்தை நிதியமைச்சர் ஏற்படுத்த முற்பட்டாலும், அவர் தாக்கல் செய்த புள்ளிவிவரங்கள் அதை உறுதிப்படுத்துவதாக இல்லை. சுமார் ரூ.35,000 கோடி மானியத்தை ஒதுக்கிவைத்த நிலையிலும்கூட, திட்டமிலா செலவின ஒதுக்கீடு அதிகமாகி இருக்கிறது. அடுத்த (2014-15) நிதியாண்டுக்கான திட்ட செலவினம் ரூ.5,55,322 கோடி என்றால், திட்டமிலா செலவினம் ரூ.12,07,802 கோடி. இதில் ரூ. 1,15,000 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. திட்டமிலா செலவினங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிப்பது என்பது ஆரோக்கியமான நிதி நிர்வாகத்துக்கு அழகல்ல. அடுத்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறையை 4.1 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருக்கும் நிலையில், வளர்ச்சிக்கு வழிகோலும் திட்ட ஒதுக்கீட்டைக் குறைப்பது சரியான நடவடிக்கை அல்ல.
நிதிப்பற்றாக்குறை மொத்த உற்பத்தி மதிப்பில் 4.6 விழுக்காடாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும், தான் எதிர்பார்த்த 4.8 விழுக்காட்டைவிட இது குறைவு என்பதும் நிதியமைச்சர் பெருமைப்பட்டுக் கொள்ளும் சாதனை. ஆனால், வருவாய் பற்றாக்குறை 3 விழுக்காடாக இருக்கிறதே, அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா?
நிதியமைச்சர் அடுத்த நிதியாண்டில் விலைவாசி ஏற்றம் 7 விழுக்காடாக இருக்கும் என்கிற அனுமானத்தில், ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 13 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். அதாவது, இந்தியப் பொருளாதாரம் 2014-15இல் 6 விழுக்காட்டுக்கு மேல் உயராது என்று சொல்லாமல் சொல்கிறார். 2013-14ஆம் நிதியாண்டுக்கான வரி வருவாய் எதிர்பார்த்ததைவிட ரூ.76,964 கோடி குறைவாக வசூலாகி இருக்கும் நிலையில், எந்த நம்பிக்கையில் அவர் அடுத்த நிதியாண்டின் மொத்த வரி வருவாய் 19 விழுக்காடு அதிகரிக்கும் என்று நினைக்கிறார் என்பது புரியவில்லை.
அரசு வளர்ச்சியை முடுக்கிவிட்டு, ஏராளமான வேலைவாய்ப்பை உருவாக்கி, அடுத்த நிதியாண்டில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும் என்று இடைக்கால நிதிநிலை அறிக்கை குறிப்பிடுகிறது. திட்ட செலவினங்களை அதிகரிக்காமல், இவையெல்லாம் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. 2013-14க்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அதே திட்ட செலவினம்தான் 2014-15க்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனும்போது, எந்த அடிப்படையில் நிதியமைச்சர் இந்த சாகசங்கள் நிகழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார்?
புதிதாக வரிகள் விதிக்கப்படாவிட்டாலும், சில சலுகைகள் - குறிப்பாக மோட்டார் வாகனத் துறையில் - அறிவிக்கப்பட்டிருக்கிறது. கலால் வரியிலும் சில சிறிய சலுகைகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடந்த 10 ஆண்டு ஆட்சியில் மிகப்பெரிய சாதனையாக 6.2 விழுக்காடு மொத்த உற்பத்தி மதிப்பு (ஜி.டி.பி.) வர்ணிக்கப்பட்டாலும், இந்தியப் பொருளாதாரம்
5 விழுக்காட்டைத் தாண்ட திணறுகிறது என்பதுதான் உண்மை.
2011 தேசிய உற்பத்திச் செயல்திட்டப்படி மொத்த உற்பத்தி மதிப்பில் 25 விழுக்காடு உள்நாட்டு உற்பத்தியின் பங்காக இருக்க வேண்டும் என்பதும், 10 கோடி பேருக்கு தொழில்துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதும் கானல் நீராகத்தான் இருக்கிறது எனும்போது, இந்த அரசின் சாதனைகள் எந்த அளவுக்குப் போலித்தனமானவை என்பது தெரிகிறது.
போகிற போக்கில் தனது கடைசி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து ஒரு சடங்கை நிறைவேற்றி இருக்கிறார் நிதியமைச்சர் ப. சிதம்பரம். ஐந்தாண்டுகளில் செய்ய முடியாததை இடைக்கால நிதிநிலை அறிக்கை மூலமாகவா செய்துவிட முடியும்?
மத்திய நிதிநிலை அறிக்கையை அதிக தடவை தாக்கல் செய்த தமிழர் என்ற வகையிலும் நாடாளுமன்றத்தில் திருக்குறளை மேற்கோள் காட்டுபவர் என்ற வகையிலும் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை பாராட்டியே ஆகவேண்டும். ஆனால் அவர் தாக்கல் செய்திருக்கும் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை பாராட்டும்படியாக இல்லையே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.