இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை தற்போது ஆண்டுக்கு 16 கோடியாக உள்ளது. இது இன்னும் ஆறு ஆண்டுகளில் 30 கோடியாக உயரப்போகிறது. ஆகவே அன்னிய நேரடி முதலீட்டை இந்தியாவில் கொட்டுவதற்கு வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.
இரு மாதங்களுக்கு முன்பு டாடா நிறுவனமும் சிங்கப்பூர் சர்வதேச விமான நிறுவனமும் (எஸ்ஐஏ) இணைந்து டாடா - எஸ்ஐஏ விமானசேவையைத் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன. இதில் டாடா 51 சதவீத முதலீடும், எஸ்ஐஏ 49 சதவீத முதலீடும் செய்கின்றன. இதற்காக 49 மில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்கிறது சிங்கப்பூர் விமான நிறுவனம்.
இது ஒரு தொடக்கம்தான். இன்னும் பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளன. அண்மையில் மலேசிய விமான நிறுவனம் மலிண்டோ ஏர்வேஸ் தனது சேவையை இந்தியாவின் பல நகர்களுக்கும் விரிவு படுத்துகிறது.
விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், நாடு முழுவதும் சிறுநகரங்களை இணைக்கும் 100 விமான நிலையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு சிறுவிமான நிலையமும் 2000 மீட்டர் நீள ஓடுபாதை, 150 பயணிகள் காத்திருக்க, காவல்துறை, குடிபெயர்வு அதிகாரிகள் சோதனைகள் செய்ய போதுமான இடவசதி கொண்டிருப்பதோடு, விமான நிலைய வளாகத்தில் 125 கார்கள் நிறுத்த இடவசதி பெற்றிருக்கும். இந்த விமான நிலையங்கள் யாருடைய பொறுப்பில் இருக்கும்? நிச்சயமாக அரசு-தனியார் பங்கேற்புதான் (பிபிபி).
சென்னை சர்வதேச விமான நிலையத்தை நவீனப்படுத்த ரூ.2015 கோடி தேவை என்கின்ற நிலையில், சிறு விமான நிலையங்களை புதிதாக அமைக்க எந்த அளவுக்கு பணம் தேவை என்று கணிப்பது எளிது. இதற்கான செலவுகளை ஈடுகட்ட ரூ.1000 கோடி அரசுப் பத்திரங்கள் வரிச் சலுகையுடன் விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இந்த முதலீடுகள் போதாது. ஆகவே இந்த செலவுகளை அரசு முழுமையாக ஏற்கப்போவதில்லை என்பது உறுதி. ஆகவே இந்த சிறுவிமான நிலையங்கள் அனைத்துமே அரசு-தனியார் பங்கேற்பில் மட்டுமே நடக்கும்.
அரசு-தனியார் பங்கேற்புதான் விமானத் துறையை ஆளப்போகிறது. கிடைக்கும் லாபத்தில் அரசுக்கு 40% கிடைக்கும். மேலும் அரசுக்கு பொறுப்பேற்புச் சுமை கிடையாது. ஆகவே, நிர்வாகத்தைத் தனியார்மயமாக்கி, லாபத்தில் கொஞ்சம் கிடைத்தாலும் நட்டம் அடையாமல் இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு மத்திய அரசு வந்துவிட்டது.
இத்தகைய பராமரிப்பு மற்றும் நிர்வகிப்பு பணியையும், புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணியையும் எடுத்துக்கொள்ளப்போகும் நிறுவனங்கள் எவை? அண்மையில் மாலத்தீவில் விமான நிலையம் அமைத்து, மிக அதிகமாக லாபம் சம்பாதிக்க முற்பட்டபோது ஒப்பந்தைத்தை முறித்துக்கொண்டு அந்நாடு வெளியேற்றிய ஜிஎம்ஆர் உள்ளிட்ட நிறுவனங்கள்தான் அரசு தனியார் பங்கேற்பில் ஈடுபடப்போகின்றன.
அரசு-தனியார் பங்கேற்பு நடைமுறைக்கு வரும்போது, நுழைவுக் கட்டணம், பயணிகளின் கூடுதல் சுமைக்கான கட்டணம், பராமரிப்பு கட்டணம் என பல்வேறு விதங்களில் பயணிகளிடமிருந்தே பணத்தைக் கறந்துவிடுவார்கள். உள்நாட்டு பயணிகள், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் என தனித்தனி கட்டணங்கள் அமைத்து வசூலித்துவிடுவார்கள் என்பது உறுதி. இதற்காக பயணிகளிடம் முணுமுணுப்பு இருக்கிறது. ஆனால் எதிர்ப்பு இல்லை.
இப்போதெல்லாம் சிறப்பான சேவைக்கு அதிக பணம் தருவது நியாயம்தான் என்ற மனநிலை மக்களிடம் உருவாகிவிட்டது. (உருவாக்கிவிட்டார்கள்?) நல்ல உணவு என்றால் இரண்டு மடங்கு கட்டணம் என்றாலும் செலவழிக்கிறார்கள். சொகுசு பயணம் என்றால், அரசுப் பேருந்தைவிட இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த தயாராக இருக்கிறார்கள். இந்த மனநிலைதான் தனியார் மயத்துக்கு இனிப்பானது.
என்ன செய்வது, நமது சுயநல அரசியல்வாதிகளும், பொறுப்பில்லாத அரசு ஊழியர்களும் இந்தியாவை தனியாருக்கு அடகு வைத்துவிடுகிறார்கள். இவர்களது செயல்பாடுகளின் மீதான வெறுப்பு, மக்களை தனியார்மயத்தை வரவேற்க வைத்துவிட்டிருக்கிறது. திசை திரும்பி தவறான பாதையில் பயணிக்கிறோம். எங்கே போய் முடியுமோ, யார் கண்டது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.