குற்றவாளிக்கும் நீதி!

சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்திருக்கும் தீர்ப்பு, மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பான கருத்தாக்கத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
Updated on
2 min read

சந்தன மரக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை பிறப்பித்திருக்கும் தீர்ப்பு, மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பான கருத்தாக்கத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களும் பல ஆண்டுகளுக்குப் பிறகே நிராகரிக்கப்பட்டுள்ளதால், அவர்களும் தூக்கிலிடப்படுவதிலிருந்து தப்புவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் முடிவு எடுப்பதற்கு காலவரையறை எதுவும் அரசியல் சட்டத்தில் நிர்ணயிக்கப்படவில்லை. இது அவர்களுக்கு அளிக்கப்பட்ட தனி உரிமையாகக் கருத முடியாது என்றும், இது விஷயத்தில் அவர்கள் விரைவாகச் செயல்பட வேண்டும் என்பதற்காகவே கால வரையறை எதையும் நமது அரசியல் சட்டத்தை வகுத்தவர்கள் நிர்ணயிக்கவில்லை என்றும், அரசு நிர்வாகத் தலைமை விரைவாகச் செயல்படாவிட்டால், அதில் தலையிட்டு அரசியல் சட்டத்தின் மாட்சிமையை நிலைநாட்ட வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதிகள், சிறையில் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்ற சில வழிகாட்டு நெறிமுறைகளையும் இந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதிகளின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்படுவதற்கு முன்பாகவே அவர்களை தனிமைச் சிறையில் அடைத்து வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தூக்கு தண்டனை கைதிக்கு, அவரைத் தூக்கிலிடுவதற்கு 14 நாள்களுக்கு முன்பாக தகவல் தெரிவிக்க வேண்டும்; கடைசியாக ஒருமுறை அவர் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று நிபந்தனைகளை விதித்துள்ள உச்சநீதிமன்றம், ஒரு கருணை மனு எத்தனை நாள்களுக்குள் ஏற்கப்பட அல்லது நிராகரிக்கப்பட வேண்டும் என்ற வரையறையையும் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஆயுள் தண்டனையாகக் குறைத்த போதிலும், இந்த கைதிகள் குறிப்பிட்ட ஆண்டுகள் சிறையில் கழித்திருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றோ, அல்லது சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும் என்றோ இந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தவில்லை.

ஒரு கைதி தனிமைச் சிறையில் இருக்கும்போது, உளவியல் சிக்கலுக்கு ஆளாக நேரும் என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், குறிப்பிட்ட மாதங்களுக்கு மேலாக தண்டனை அனுபவிக்கும் கைதிகள் தங்கள் மனைவியரை தனிமையில் சந்திக்க (இஞசஒமஎஅக யஐநஐப) அனுமதிப்பது குறித்து எந்தவித கருத்தையும் வலியுறுத்தவில்லை. இவையெல்லாம் இந்தத் தீர்ப்பில் காணப்படும் குறைபாடுகள்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் விஷயத்தில் அரசு நிர்வாகத் தலைமை இனி விரைவாகச் செயல்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதற்காக, கருணை மனுக்களை முறையாக ஆய்வு செய்யாமல் அவசர கதியில் முடிவு எடுக்கும் போக்கு ஏற்பட்டால், அது மேலும் குழப்பத்தை விளைவிக்கும் என்பதையும் உணர்ந்து அரசு நிர்வாகத் தலைமை செயல்பட வேண்டும்.

மரண தண்டனை விதிக்கப்படுபவர்களின் கருணை மனுக்கள் மீது அரசு நிர்வாகத் தலைமை உரிய காலத்துக்குள் முடிவு எடுக்காமல் தாமதம் செய்யுமானால், அவர்கள் தூக்கிலிருந்து தப்பிவிடுவதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவது போல உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. இதனால், இத்தகைய வழக்குகளை புலன் விசாரணை செய்யும் போலீஸார் மற்றும் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நமது அரசியலமைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைவதற்கான அபாயமும் உள்ளது. அதேபோல, அரசியல் செல்வாக்கு படைத்த தூக்கு தண்டனைக் குற்றவாளிகளின் கருணை மனுவின்மீது முடிவெடுக்காமல் அவர்களைக் காப்பாற்றவும் வழிகோலப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க

வேண்டும்.

மரண தண்டனை வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது விவாதிக்கப்பட வேண்டிய பிரச்னை. குற்றவாளியே ஆனாலும் அவருக்கு அநீதி இழைக்கப்படக் கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தின் அக்கறையைப் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com