/

விதிகளை அறிந்து வாகனம் ஓட்டுவோம்

அண்மையில் ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு இடைத்தரகர் 5 நபர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, அவர்களை அழைத்து வந்திருந்தார்.

Updated On :25 ஜூன் 2014, 7:47 pm

அண்மையில் ஒரு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஒரு இடைத்தரகர் 5 நபர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக, அவர்களை அழைத்து வந்திருந்தார். போக்குவரத்து ஆய்வாளர், உரிமம் பெற வந்தவர்களிடம், சாலையில் வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து விதிகளை கூறும் குறியீடுகள் நான்கைந்து கூறுங்கள் எனக் கேட்டார்.

கட்டில் படம் போட்டிருந்தால் அருகில் மருத்துவமனை இருக்கிறது என அர்த்தம், மாணவன் படம் போட்டிருந்தால் பள்ளிப் பகுதி என அர்த்தம் என்ற விவரத்தைக் கூட அவர்களில் ஒருவருக்குக்கூட சொல்லத் தெரியவில்லை. பதில் எதுவும் கூறாமல் நின்று கொண்டிருந்தனர். ஆய்வாளர், இடைத் தரகரை பார்த்தார். அவரோ பார்த்துப் போடுங்கள் சார் என்றார். ஆய்வாளர் பதில் எதுவும் பேசாமல், அறைக்கு அழைத்துச் சென்றார்.

இப்படி அடிப்படை சாலை விதிகள் கூட தெரியாதவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று விடுகிறார்கள். இதனால்தான் போக்குவரத்து விதிகள் தெரியாமலும், தெரிந்தாலும் மதிக்காமலும் பலர் உள்ளனர். இது போன்றவர்களால்தான் சாலை விபத்துகள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது.

தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளைக் கொண்டு செல்வதற்கும், மாலை திரும்பி வருவதற்கும் பெண்கள் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களில் 80 சதம் பேர் ஓட்டுநர் உரிமம் பெறாமல் இருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ஊரில் ஒரு மகளிர் கல்லூரி வாசலில், போக்குவரத்து காவல் துறையினர் மாணவிகளிடம் ஓட்டுநர் உரிமம் உள்ளதா என சோதனை செய்தனர். சோதனையில் பெரும்பாலானோர் ஓட்டுநர் உரிமம் பெற வில்லை எனத் தெரிய வந்தது.

இதையடுத்து, போக்குவரத்து காவல்துறையினர், கல்லூரி நிர்வாகத்திடம் கூறி, மாணவிகளுக்கு சரியான கட்டணம் பெற்றுக் கொண்டு உரிமம் பெற்றுக் கொடுத்தார்கள். இப்படி எத்தனை ஊர்களில் போக்குவரத்து காவல் துறையினர் செயல்படுகிறார்கள் என்பது கேள்விக்குறியே.

பெரும்பாலான பெண்கள் இரு சக்கர வாகனம் ஓட்டும்போது, திரும்பும்முன் இன்டிகேட்டரை உபயோகிப்பதில்லை. இதனால் விபத்து ஏற்படுகிறது.

தற்போது ஆண்களும் பரவலாக ஓட்டுநர் உரிமம் பெறுவதில்லை. அவர்களும் போக்குவரத்து விதிகளின் படி நடப்பதில்லை. இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைமை இதுவென்றால், 4 சக்கர வாகன ஓட்டிகள்கூட சிலர் திரும்பும்போது இன்டிக்கேட்டரை பயன்படுத்துவதில்லை.

அத்துமீறுவது என்பது தமிழர்களின் ரத்தத்தில் ஊறி விட்டது போலும். போலீஸார் இல்லை என்றால் ஒரு வழிப் பாதையை பயன்படுத்துவது, அதிக ஒலியுடன் கூடிய ஹாரனை உபயோகிப்பது என வாகன ஓட்டிகளிடமும் நிறைய பொறுப்பின்மை உள்ளது.

அவ்வப்போது போலீஸார் சோதனை நடத்துகிறார்கள். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்துகிறார்கள். எனினும், சாலைப் போக்குவரத்து விதிகள் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.

ஒவ்வோர் ஆண்டும் ஒரு சடங்காக சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. நாங்களும் பாதுகாப்பு வாரம் நடத்தினோம் என காவல் துறையினர் பத்திரிகை மூலம் பதிவு செய்து விடுகிறார்கள். இதனால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைப்பதில்லை.

தற்போது 18 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி மாணவ - மாணவிகள் இரு சக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்து வருகிறது. பெற்றோர்களே இதனை ஊக்குவிப்பதால், காவல் துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

அண்மையில் சிவகாசியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேர் ஒரே மொபெட்டில் சென்றுள்ளனர். அப்போது, பின்னால் வந்த லாரி மோதி ஒரு மாணவர் உயிரிழந்து விட்டார். மற்ற இரு மாணவர்கள் காயமடைந்தனர். இந்த செய்தி மிகவும் வருத்தத்திற்குரியது.

இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்தான். இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்து விடுகிறார்கள். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்த பின்னரே முறைப்படி உரிமம் பெற்று இரு சக்கர வாகனம் வாங்கித்தர வேண்டும். அத்துடன் வாகனங்களை ஓட்டவும் அனுமதிக்க வேண்டும்.

அதேபோல், வாகனம் ஓட்டும் பெண்கள் சாலை விதிகளை தெரிந்து கொண்டு வாகனம் ஓட்ட வேண்டும். பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றால், அவர்களை கூப்பிட்டு காவல் துறையினர் கண்டிக்க வேண்டும்.

இனியாவது நாம் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா உலகம் படைப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.