தவறுக்கு துணைபோவதா?

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த மருத்துவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இதுவரை 26 பேர் இறந்துள்ளனர்.
Updated on
2 min read

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த மருத்துவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இதுவரை 26 பேர் இறந்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சுமார் 300 நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசு நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் தாற்காலிகமாகக் கைவிடப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி 28ஆம் தேதி, கான்பூரில் உள்ள கணேஷ் ஷங்கர் வித்யாலயா நினைவு மருத்துவக் கல்லூரியின் பயிற்சி மருத்துவர் விடுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்காக, காவல் கண்காணிப்பாளர் யஷாஷ்வி யாதவ், சமாஜவாதி கட்சி சட்டப் பேரவை உறுப்

பினர் இர்பான் சோலங்கி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கைது செய்யப்பட்ட 24 பயிற்சி மருத்துவர்கள் மீதான வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் தொடங்கியது இந்தப்க்ஷ் போராட்டம்.

இந்த வேலை நிறுத்தத்துக்கு காரணம் பயிற்சி மருத்துவர்கள் அதிக ஊதியம் கேட்பதல்ல; பணியைச் செய்யவிடாமல் யாராவது தடுத்தார்கள் என்பதல்ல; பயிற்சி மருத்துவர்களுக்கு போதிய வசதி இல்லை என்பதல்ல; வெறும் தெருச்சண்டை!÷

கான்பூரில் ஒரு பயிற்சி மருத்துவர் ஓட்டி வந்த கார் மீது பின்னால் வந்த ஒரு முதியவரின் வாகனம் இடித்தது. அவரோடு பயிற்சி மருத்

துவர் தகராறு செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ச.பே.உ. இர்பான் சோலங்கி நியாயம் பேச களத்தில் இறங்குகிறார். இப்போது தகராறு ச.பே.உ.வுக்கும் பயிற்சி மருத்துவர் மற்றும் அவரது நண்பர்களுக்குமாக மாறுகிறது.

ச.பே.உ.வின் கார் கண்ணாடி (எப்படியோ) உடைக்கிறது. ச.பே.உ. தனக்கு தலையில் மூன்று தையல் போடும் அளவுக்கு காயம் ஏற்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார். அன்று இரவு ச.பே.உ.வை தாக்கிய பயிற்சி மருத்துவர்களை கைது செய்ய விடுதிக்குள் போலீஸ் நுழைந்தபோது, பெருந்தகராறு. அடிதடி. களேபரம். மார்ச் 1ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் தொடங்குகிறது.

சக ஊழியர், சக மாணவர், சக தொழிலாளி, சக அலுவலர் பாதிக்கப்படக் கூடாது என்று ஒன்றுபடுவது பாராட்டுக்குரியதுதான். ஆனால், அந்த நபருக்கு ஏற்பட்ட பிரச்னை சொந்த விவகாரமா அல்லது தொழில் சார்ந்த விவகாரமா என்று பார்த்துவிட்டு பிரச்னையில் தலையிடுவதுதானே முறை!

ஒரு பயிற்சி மருத்துவருக்கும் ச.பே.உ.வுக்குமான தெருச்சண்டையில், தோழமை உணர்வுடன் பயிற்சி மருத்துவர்கள் ஒன்றுபட்டு நின்றதால், அதன் தொடர் விளைவுகளை எதிர்கொள்ள முடியாதபோது, மாவட்டம் முழுவதிலும், மாநிலம் முழுவதிலும் உள்ள சக பயிற்சி மருத்துவர்களை துணைக்கு அழைத்து போராட்டம் நடத்து

வதைக் காட்டிலும், அந்தத் தெருச்சண்டையில் தலையிடாமல் பிரச்னையை தெருவிலேயே விட்டுவிட்டு வந்திருக்கலாமே!

இந்த நிலைமை பயிற்சி மருத்துவர் விவகாரத்தில் மட்டுமல்ல. நாடு முழுவதுமே இதுபோன்ற பல போராட்டங்கள் ஒரு சிலரின் மிகச் சாதாரண, தனிப்பட்ட தகராறில் தொடங்கி, பெரிதாக்கப்படுகின்றன.

நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறும் ஒரு வழக்குரைஞரின் கார் மீது ஒரு போலீஸ் ஜீப் உரசியதால் இருவரும் தீயாய் பேசிக்கொள்கிறார்கள்; பேச்சு தடிக்கிறது. போலீûஸ கடுமையாகப் பேசி, தாக்கியதாக வழக்கு பதிவானதும், வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வழக்குரைஞர்கள் சங்கம் களத்தில் இறங்குகிறது. நீதிமன்றப் பணிகள் முற்றிலும் முடங்குகின்றன.

ஒரு பேருந்தில் ஒரு மாணவனுக்கும் ஒரு நடத்துநருக்கும் ஏற்படும் தகராறு மாணவ சமுதாயத்துக்கு ஏற்பட்ட களங்கமாக மாற்றப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் அனைவரையும் தெருவில் இழுத்துவந்து நிறுத்துகிறது. போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. காவல்துறை, மாவட்ட அதிகாரிகள், போக்குவரத்து சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய கட்டாயத்தில் முடிகிறது. இதற்கிடையே மாணவர் மீது தடியடி, கல்லூரி மூடல், விடுதியிலிருந்து மாணவர்கள் வெளியேற்றம் எல்லாமும் நடந்துவிடுகிறது.

எந்த விவகாரம் தனிப்பட்ட பிரச்னை, எது பொதுப் பிரச்னை அல்லது தொழில் சார்ந்த பிரச்னை என்பது குறித்து போராட்டத்துக்கு ஆதரவு தரும் அமைப்புகள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். தனிப்பட்ட இருவருடைய தகராறில் எல்லாரையும் உள்ளே இழுக்கும் முயற்சிக்குத் துணை போதல் கூடாது. அதனால் பாதிக்கப்படுவது அவர்கள் அல்ல. ஒட்டுமொத்த நகர அல்லது மாவட்ட அல்லது அம்மாநில மக்களே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com