பறிமுதல் மட்டுமே தீர்வு!

சகாரா பரிவார் நிறுவனத்துக்கு நீதிமன்றம் அளித்த வாய்ப்புகளும் காட்டிய கருணையும் மற்ற எந்த நிறுவனத்துக்கும் கிடைத்திருக்காது.
Updated on
2 min read

சகாரா பரிவார் நிறுவனத்துக்கு நீதிமன்றம் அளித்த வாய்ப்புகளும் காட்டிய கருணையும் மற்ற எந்த நிறுவனத்துக்கும் கிடைத்திருக்காது. ஆனாலும் அத்தனை வாய்ப்புகளையும் தவற விட்ட சகாரா நிறுவனம், தற்போது நீதிமன்றத்திடம் மண்டியிட்டுச் சொல்கிறது, "நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்கிறோம்' என்று.

சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராயை நீதிமன்றக் காவலிலிருந்து விடுவித்து போலீஸ் காவலில் மாற்ற வேண்டும் என்கிறார்கள். இதற்கு சகாரா நிறுவனம் சொல்லும் காரணம், நிறுவனத் தலைவரை அணுகுவது மிகவும் கடினமாக இருக்கிறது என்பதுதான்.

முதலீட்டாளர்கள் பணம் ரூ.20,000 கோடியில் கணிசமான அளவை வைப்புத்தொகையாக செலுத்துகிறோம் என்று, முதலீட்டைத் திருப்பி செலுத்த புதிய பார்முலாவையும் முன்வைத்திருக்கிறார்கள். இந்த விவரங்களை செபி-யிடம் தெரிவித்து அனுமதி பெறுங்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

செபி-யின் முறையான அனுமதியின்றி மக்களிடம் பெற்ற முதலீட்டுப் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்றுதான் இதற்கு முன்பும் நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆனால் இதுவரையிலும் அந்த உத்தரவை சகாரா செயல்படுத்தவில்லை. திருப்பி கொடுத்தாகி விட்டது என்றனர். ஆனால் முதலீடு செய்தவர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டதில், உண்மையான முகவரி மிகமிகக் குறைவு. இந்நிலையில் இந்த நிறுவனம் எந்த முதலீட்டாளருக்கு பணத்தைத் திருப்பியளிக்கப் போகிறது?

2010 டிசம்பரில் சகாரா நிறுவனத்தின் மீது செபி நடவடிக்கை எடுத்தது. முதலீட்டாளர்களிடம் பணம் பெறுவதில் எந்தவிதமான அனுமதியையும் சகாரா பெற்றிருக்கவில்லை என்று குற்றம் சாட்டியது. அடுத்த இரண்டாவது வாரத்தில், (2011, ஜனவரி 17 வாக்கில்) ரிசர்வ் வங்கி ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டது. சகாரா பரிவார், சகாரா இந்தியா பரிவார் என்ற பெயர்களில் முதலீட்டுக்காக பொது மக்களிடம் பணம் திரட்டுவதாகத் தெரிகிறது. இதில் முதலீடு செய்வோர் இந்த நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியில் அங்கீகாரம் பெற்றவையா என்பதை அறிந்து கொண்டு அதன் பிறகு முதலீடு செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை செய்தது.

சகாரா நிறுவனத்தின் துணை நிறுவனங்களாகிய சகாரா இந்தியா பைனான்ஸியல் கார்ப்பரேஷன் லிட்., சகாரா இந்தியா கார்ப் இன்வெஸ்ட்மென்ட் லிட்., சகாரா இந்தியா இன்ஃப்ராஸ்டக்சுரல் டெவலப்மென்ட் லிட். ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே ரிசர்வ் வங்கியில் பெயர் பதிவு செய்திருந்தன. இவற்றில் முதல் நிறுவனம் வசூலித்

திருந்த முதலீடுகள் அனைத்தையும் படிப்படியாக திருப்பித்தந்துவிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. மற்ற இரு நிறுவனங்களுக்கும் மக்களிடம் முதலீடு பெற அனுமதியே கிடையாது.

இந்நிலையில் எதற்காக எச்சரிக்கை, பொது அறிவிப்பு எல்லாமும்? அன்றைய தினமே, அங்கீகாரம் பெறாமல் மக்களிடம் முதலீடு திரட்டிய குற்றத்துக்காக கைது செய்து, அதுவரை வசூலித்த பணத்தைத் திருப்பியளிக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகள்தான் இவர்கள் இத்தனைக்காலம் வெளியே நடமாட உதவியது.

செபி, ரிசர்வ் வங்கி ஆகியவை எச்சரிக்கை விடுத்த பிறகும் ஒரு நிறுவனத்தில் மக்கள் ரூ.20,000 கோடியை டெபாஸிட் செய்வார்கள் என்பதும், ஏற்கெனவே டெபாஸிட் செய்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்கவில்லை என்பதுமே போதுமானது - இந்த நிறுவனத்தில் டெபாஸிட் செய்தவர்களின் பெயர் முகவரி அனைத்தும் போலி

யானவை என்பதற்கு. இவர்கள் பல லாரிகளில் ஏற்றி அனுப்பிய முகவரிகளை பல நூறுபேர் சோதித்துப் பார்த்துதான் இவை போலியான பெயர் முகவரி என்பது தெரிய வேண்டியதில்லை.

சகாராவில் செய்யப்பட்டிருக்கும் முதலீடுகள் பல அரசியல்வாதிகளின், குறிப்பாக ஆட்சியாளர்கள் பலரின், கருப்புப் பணம். லஞ்சப் பணத்தை பினாமி பெயர்களில் பத்திரப்படுத்த சுப்ரதா ராய் அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் என்பதை வெளிப்படையாகச் சொல்ல யாரும் தயாரில்லை. காரணம், பணம் அவர்கள் வாயை அடைத்து விடுகிறது. தவறுகள் செய்து பணம் சம்பாதித்து விட்டால், சம்பாதித்த பணம் அந்தத் தவறுகளை நியாயப்படுத்திவிடுகிறது என்பதுதான் இந்தியாவைப் பிடித்திருக்கும் அவலம்.

இந்த 20,000 கோடி ரூபாயையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தால், உரிய ஆவணங்களை குறிப்பிட்ட தேதிக்குள் கொண்டு வந்து கொடுத்து, தொகையை பெற்றுச் செல்லுமாறு பொது விளம்பரம் கொடுத்து

விடலாம். செபி, ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல் திரட்டப்பட்ட பணத்தை அரசு பறிமுதல் செய்வதே நியாயம்.

சகாரா குறிப்பிடும் முதலீட்டாளர்கள் மெய்யானவர்கள்தான் என்றால், அரசிடம் ஆதாரங்களைக் காட்டிப் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளட்டுமே, யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com