புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பலமும் பலவீனமும்!

உலகச் சந்தையில் மோட்டார் வாகன உற்பத்தியில் இந்தியா கணிசமான பங்கு வகிக்கிறது. சமீபத்திய புள்ளிவிவரப்படி, உலகில் ஆறாவது பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நாடாக இந்தியா திகழ்கிறது.

News image
Updated On :25 மார்ச் 2014, 8:13 pm

ஆசிரியர்

உலகச் சந்தையில் மோட்டார் வாகன உற்பத்தியில் இந்தியா கணிசமான பங்கு வகிக்கிறது. சமீபத்திய புள்ளிவிவரப்படி, உலகில் ஆறாவது பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நாடாக இந்தியா திகழ்கிறது. ஆண்டொன்றுக்கு 39 லட்சம் மோட்டார் வாகனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் கார்கள் மட்டுமே 18.07 லட்சம்.

இந்திய மோட்டார் வாகன உற்பத்தியில் ஏறத்தாழ 35 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை தமிழகத்தில்தான் தயாராகிறது என்பதும், 2016ஆம் ஆண்டில் தமிழகத்தின் மோட்டார் வாகன உற்பத்தி 30 லட்சத்தைத் தொடக்கூடும் என்பதும் மகிழ்ச்சி அளிக்கும் தகவல்களே. மோட்டார் வாகன உற்பத்தியால், தொழிலாளர்கள் பலர் வேலைவாய்ப்புப் பெறுவது மட்டுமல்ல, இந்தத் தொழிற்சாலை

களைச் சார்ந்து பல சிறிய உதிரிப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களும் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றன. 2011இன் புள்ளிவிவரப்படி, 3,695 மோட்டார் வாகன உதிரிப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன.

இந்திய மோட்டார் வாகன சரித்திரம் பற்றி ஒரு சிறு குறிப்பு. இந்திய சாலைகளில் 1897இல்தான் முதன்முதலில் கார் ஓடத் தொடங்கியது. 1930 வரை குறைந்த அளவில் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 1940இல் கொல்கத்தாவில் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸின் உதவியுடனும், 1944இல் மும்பையில் பிரிமியர் நிறுவனம் இத்தாலிய பியட் நிறுவனத்தின் கூட்டுடனும் மோட்டார் கார்களைத் தயாரிக்கத் தொடங்கின.

இப்போது, அநேகமாக உலகளாவிய மோட்டார் வாகன நிறுவனங்கள் அனைத்துமே இந்தியச் சந்தையையும் சாலைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. நாம் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த காலம்போய், 2012 நிதியாண்டு புள்ளிவிவரப்படி அந்த ஆண்டு ஏறத்தாழ 30 லட்சம் வாகனங்களை நாம் ஏற்றுமதி செய்திருக்கிறோம். இந்த நிதியாண்டில் நமது ஏற்றுமதி மதிப்பு 65,000 கோடி ரூபாய்க்கு மேல் எட்டும் என்று தெரிகிறது.

இந்த அருமை பெருமைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க, உலகச் சந்தையில் இந்திய கார்களின் தரம் பற்றிய சர்ச்சை எழுந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. புதிய கார்கள் மதிப்பீட்டுத் திட்டம் (நியூ கார் அசஸ்மெண்ட் ப்ரோக்ராம்) என்பது ஐரோப்பிய தனியார் கார் தர நிர்ணய அமைப்பு. புதிதாக எந்தவொரு மோட்டார் வாகனம், குறிப்பாக, கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், இந்த நிறுவனம்

அந்தக் கார் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது, வலுவானது என்பதை எல்லாம் பரிசோதித்துத் தர நிர்ணயம் செய்து வருகிறது.

இந்தியாவில் தயாராகும் கார்களையும் இந்த நிறுவனம் மதிப்பீட்டுக்கு உட்படுத்தியது. ஐ.நா. சபை நிர்ணயித்திருக்கும் அடிப்படைப் பாதுகாப்புகளும், உலகளாவிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய கார்கள் மதிப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படை இலக்குகளும் அவற்றில் இருக்கின்றனவா என்கிற இரண்டு அம்சங்களின் அடிப்படையில்தான் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் இந்திய வரைமுறைகளுக்கு உட்பட்டதாக இருந்தாலும், மிக அதிக விற்பனையாகும் கார்களும் சரி, இந்தியாவில் தயாரிக்கப்படும் மிக அதிக விலையுள்ள கார்களும் சரி, பாதுகாப்பானவை அல்ல என்பதுதான் இந்த நிறுவனத்தின் மதிப்பீடு. இத்தனைக்கும் இந்தச் சோதனைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லா கார்களுமே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கார்கள்.

கடந்த இருபது ஆண்டுகளாக இந்தியாவில் கார் உற்பத்தி நடந்து வருகிறது என்பதும், கார் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் பெருவாரியான நிறுவனங்களும் சர்வதேச நிறுவனங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உறுதிப்படுத்தும், பல பாதுகாப்பு அம்சங்களை இவர்கள் இந்தியாவில் கார்கள் தயாரிக்கும்போது கடைப்பிடிப்பதில்லை என்பதைத்தான் இந்தச் சோதனை நிரூபிக்கிறது.

இந்திய மோட்டார் வாகன சட்டதிட்டங்களுக்கு ஏற்றபடி வாகன உற்பத்தி இருக்கிறது என்பது உண்மையாக இருக்கலாம். அப்படி இருந்தால், அரசு சட்டதிட்டங்களை மாற்றி சர்வதேசத் தரத்தையும், பாதுகாப்பையும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு உறுதிப்படுத்தியாக வேண்டும்.

கார் உற்பத்தி அதிகரித்திருப்பதற்காக நாம் மகிழ்ச்சி அடைவதுடன் நின்றுவிடலாகாது. ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் கவனம் அதிகரித்தாக வேண்டும். வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அபாய மணி ஒலித்திருக்கிறது. விழித்துக் கொண்டாக வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.