தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அதற்கு என்ன வழி?

பாலியல் குற்றங்கள் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கும் சில வழிகாட்டுதல்கள், நல்லெண்ணத்துடன் கூடியவைதான் என்றாலும், அவை எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப்படும் என்பது தெரியவில்லை.

Updated On :9 மே 2014, 8:22 pm

பாலியல் குற்றங்கள் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கும் சில வழிகாட்டுதல்கள், நல்லெண்ணத்துடன் கூடியவைதான் என்றாலும், அவை எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப்படும் என்பது தெரியவில்லை. பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை, குற்றம் நடந்தது பற்றி தெரியவந்த 24 மணி நேரத்திற்குள் பெண் நீதிபதி ஒருவர் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அவரது முன்னிலையில் மட்டுமே பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம். இந்திய குற்றவியல் சட்டத்தில் 376ஆவது பிரிவின்கீழ் பதிவு செய்யப்படும் பாலியல் தொடர்பான வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பு வழங்குவதற்கு இது உதவும் என்பது நீதிமன்றத்தின் தேர்ந்த முடிவு.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தைக் காவல்துறையினர் பதிவு செய்யத் தேவையில்லை என்கிற நீதிமன்றக் கருத்து நியாயமானது. பல சந்தர்ப்பங்களில், கடுமையான சிபாரிசுகள் காவல்துறையினரின் நோக்கத்தையே திசை திருப்பி, பாதிக்கப்பட்டவர்களின் தரப்பை பலவீனப்படுத்தும் வகையில் அவர்களை மிரட்டி வாக்குமூலம் வாங்கப்படுவதும் உண்டு. மேலதிகமான நேர்வுகளில், வழக்கு விசாரணைக்கு வரும்போது காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்துக்கு நேர் எதிரான வாக்குமூலத்தை பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கும் நிலை காணப்படுகிறது. மேலும், காவல்துறையினர் பெறும் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாது.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலம் பிர்பம்மில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை அதிகாரி பாதிக்கப்பட்டவரிடம் மூன்று முறை வாக்குமூலம் பெற்றிருக்கிறார். இது போன்ற வாக்குமூலம் எதிர்க்கட்சி வழக்குரைஞரால், குறுக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவரை மடக்கவும், வழக்கை திசைதிருப்பவும் பயன்படுத்தப்படுவது சகஜமாகிவிட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் வரவேற்புக்குரியதுதான், சந்தேகமே இல்லை.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர் காவல்துறையின் இம்சைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற அவல நிலை காணப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், பெண் நீதிபதியிடம் மட்டும்தான், தங்களுக்கு நேர்ந்த அவலங்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தைரியத்தை ஏற்படுத்தும்.

பெண் நீதிபதி முன்பு ஆஜர்படுத்துவது என்பது சரி, ஆனால் அது என்ன 24 மணி நேர காலக்கெடு?

2013ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தில், இதுபோல காலக்கெடு நிர்ணயிக்காமல், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மட்டுமே சொல்லப்பட்டது. அப்படி அரசு தீர்மானித்ததற்குக் காரணம் உண்டு.

இதுபோன்ற பாலியல் வன்கொடுமை நடக்கும்போது, பாதிக்கப்பட்டவர்களைச் சுற்றி உறவினர்களும், நண்பர்களும் ஆறுதல் கூறச் சூழ்ந்துகொள்வது இயற்கை. பாதிக்கப்பட்டவரைத் தேற்றுவதுதான் அவர்களது முனைப்பாக இருக்குமே தவிர, குற்றத்தைப் பதிவு செய்வதாகவோ, வாக்குமூலம் அளிக்க வைப்பதாகவோ இருக்காது. பாதிக்கப்பட்டவர்களும் குறைந்தது இரண்டு, மூன்று நாள்களாவது, அதற்கான மனோநிலையில் இருக்க மாட்டார்கள். தகவல் கிடைத்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவரை பெண் நீதிபதி முன்னால் ஆஜராக்கி அவரது முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்வது என்பது இயலாத காரியம் என்றேகூடச் சொல்லிவிடலாம்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இருக்கிறது என்பதால், ஏற்கெனவே அதிர்ச்சியில் உறைந்தும், அவமானத்தில் ஆழ்ந்தும் இருப்பவர்களைக் காவல்துறையினரின் வற்புறுத்தல் மேலும் காயப்படுத்துமே தவிர, அவர்களுக்கு ஆறுதலளிக்காது.

விரைவான விசாரணையும், நியாயமான தீர்ப்பும் விரைவு நீதிமன்றங்களாலோ, நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களாலோ மட்டுமே ஏற்பட்டுவிடாது. காவல்துறை சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படாதவரை, தடயங்களைச் சேகரிப்பதும், வழக்கில் வெற்றியை உறுதிப்படுத்துவதும் காக்கிச் சட்டைகளின் நாணயத்தையும், நேர்மையையும் சார்ந்ததாக இருக்குமே தவிர, இயல்பானதாக இருக்காது. குறிப்பாக, பாலியல் குற்றங்களில் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தனவான்கள் போன்றவர்களின் தலையீட்டைத் தவிர்க்கவே முடியாது என்கிற நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைப்பது, விசாரணை அதிகாரியின் நேர்மையை சார்ந்ததாக மட்டுமே இருக்கும். இந்த அவலம் அகற்றப்படுவதை காவல்துறை சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது மட்டுமே உறுதி செய்யும். அதற்கு என்ன வழி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.