திருவள்ளுவர் பிறந்த நாளை அடுத்த ஆண்டு முதல் அனைத்து வடநாட்டுப் பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என்கிற மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் அறிவிப்பு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தவரான மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜயின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் இரானி.
இதுவரை எந்தவொரு கவிஞருக்கும் தரப்படாத மரியாதை நமது தெய்வப் புலவர் திருவள்ளுவருக்குத் தரப்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இனிமேல் சுதந்திர, குடியரசு, ஆசிரியர், குழந்தைகள் தினங்கள் கொண்டாடப்படுவதுபோலத் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி நிகழ்ந்தால் தமிழுக்கும், தமிழினத்திற்கும் அதைவிடப் பெருமை வேறு எதுவும் இருக்க முடியாது.
திருவள்ளுவர் தினத்தைத் தொடர்ந்து, மகாகவி பாரதியார் பிறந்த தினமும் தேசிய அளவில் கொண்டாடப்படுவதற்கான முயற்சிகளை அரசு எடுக்க இருப்பதாக அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார். மெத்த மகிழ்ச்சி. தெய்வப் புலவருக்கும், மகாகவிக்கும் சுதந்திர இந்தியாவில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதாவது அங்கீகாரம் கிடைத்திருக்கிறதே என்பது ஆறுதலளிக்கிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அரசின் சார்பில் திருக்குறளின் ஆங்கில மொழி பெயர்ப்பு விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். அது போதாது. ஆங்கில மொழி பெயர்ப்புடன், அந்தந்த மாநில மொழியிலும் இந்தியிலுமான மொழி பெயர்ப்புகளும் மாணவ - மாணவியருக்கு வழங்கப்பட்டால்தான், இந்த முயற்சிக்கு அர்த்தம் இருக்கும்.
இந்த அறிவிப்பு பாஜகவின் அரசியல் நாடகம் என்று விமர்சிப்பவர்களிடம் நாம் முன் வைக்கும் கேள்வி இதுதான். இந்தியா சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாகிறது. காங்கிரஸ், திமுக, அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தின் சார்பில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்றன. வேறு பல சிறிய கட்சிகள் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் ஓர் உறுப்பினருக்குக்கூடத் திருவள்ளுவர் தினம் தேசிய தினமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்றோ, பாரதியின் புகழ் பாரதம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என்றோ அக்கறை இல்லாமல் போனது ஏன்? வெட்கத்தில் தலைகுனிய வேண்டிய வேட்டி கட்டிய அந்தத் தமிழர்கள் இப்போது விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
திருவள்ளுவர் தினத்தைக் கல்வி நிலையங்களில் கொண்டாடுவதுடன் நின்றுவிடலாகாது. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை "தினமணி' நாளிதழ் நீண்ட காலமாக எழுப்பிக் கொண்டிருக்கிறது. பல இலக்கிய அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றிக் குரலெழுப்பி வருகின்றன. திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட்டு, அதன் மகத்துவம் பரவலாக அறியப்படுவது என்பது தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்ப்பதற்காக மட்டுமல்ல, உலகப் பொதுமறையின் வழிகாட்டுதலால் பாரத சமுதாயம் மேம்பட வேண்டும் என்பதற்காகவும்கூட!
திருவள்ளுவர் தினம் தேசிய தினமாகவும், திருக்குறள் தேசிய நூலாகவும் அறிவிக்கப்படுவதுடன் முடிந்து விடுவதல்ல நமது கோரிக்கை. இந்திய சரித்திரம் திருத்தி எழுதப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுப்பப்பட்டாக வேண்டும். இந்தியாவின் சரித்திரப் புத்தகங்களில் குப்தர்களுக்கும், மௌரியர்களுக்கும், மொகலாயர்களுக்கும், நவாபுகளுக்கும் தரப்படும் முக்கியத்துவம், தென்னாட்டுச் சக்கரவர்த்திகளான சேர, சோழ, பாண்டியர்களுக்குத் தரப்படுவதில்லை. கடை ஏழு வள்ளல்கள் பற்றிய குறிப்புக்கூட கிடையாது.
சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் சரி, வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் தியாகமும், கொடிகாத்த குமரனின் தீரமும் தகுந்த முறையில் பதிவு செய்யப்படவில்லை. காந்தியடிகளின் தண்டி யாத்திரைக்கு எள்ளளவும் குறைவில்லாத எழுச்சியை ஏற்படுத்திய மூதறிஞர் ராஜாஜியின் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் பற்றிய குறிப்பே பிற மாநில சரித்திரப் புத்தகங்களில் இல்லை.
தமிழகம் மட்டுமல்ல, தென் மாநிலங்கள் அனைத்துமே வரலாற்றில் போதிய முக்கியத்துவம் பெறாமல் இருக்கும் அவலம் களையப்பட்டாக வேண்டும். இதுவரை குனிந்து மட்டுமே பார்க்கப்பட்ட தென்னகத்தை வடக்கு நிமிர்ந்து பார்க்கத் தொடங்கியிருக்கிறது. கவிஞர் வைரமுத்து குறிப்பிட்டிருப்பதுபோல, "வடக்கு வாசல்' இப்போது திறந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத் தவறுகள் திருத்தப்பட வேண்டும். அதற்கு இதை முதல் வெற்றியாகக் கருதுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

