அண்ணல் காந்தியடிகள் 1942-ஆம் ஆண்டு தொடங்கிய அற வழியிலான போராட்டம், இன்று உலகம் முழுவதும் நியாயமான உரிமைக்காகப் போராடும் பல்வேறு தேசத்து மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. 2010 டிசம்பரில் மத்திய கிழக்கு ஆசியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும், பல நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம், இப்போது உலகம் முழுமைக்கும் பரவத் தொடங்கி விட்டது.
"அரேபிய வசந்தம்' என்று வர்ணிக்கப்பட்ட அந்தப் போராட்டத்தின் விளைவாக, துனிஷியா, எகிப்து, லிபியா, ஏமன் ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சிரியா, அல்ஜீரியா, இராக், ஜோர்டான், சூடான் போன்ற நாடுகளில் போராட்டங்கள் வெடித்து, நீறுபூத்த நெருப்பாய் புகைந்து கொண்டிருக்கின்றன. 82 நாடுகளின் 950 நகரங்களில் கடந்த நான்கு ஆண்டுகள் இதுபோன்ற அறவழிப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள், முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைவதும், தெருவில் கூடிப் போராடுவதும், காந்திய வழியில் முற்றுகைப் போராட்டம் நடத்தித் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துவதும், அசைக்க முடியாத அரசுகளையும் அகற்றியிருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, ஆயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள் குடைகளைப் பிடித்துக் கொண்டு தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். குடும்பம் குடும்பமாக தெருவில் வந்து அமர்ந்து, அமைதியாகப் போராட முற்பட்டிருக்கிறார்கள். அவர்களது நியாயமான கோரிக்கையை ஏற்க முடியாமல் திணறுகிறது சீனா.
உலகத்திலேயே அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உடைய ஆறாவது நாடாகத் திகழ்கிறது ஹாங்காங். சீனாவுக்கு வரும் 33% அன்னிய முதலீடு ஹாங்காங் மூலம்தான் கிடைக்கிறது. மிகப்பெரிய நிதி மையமாக மாறியிருக்கிறது ஹாங்காங்.
1997 வரை பிரிட்டிஷாரின் ஆளுகையில் இருந்த ஹாங்காங், 99 வருட ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், சீனாவிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. அதுவரை பிரிட்டிஷ் காலனியாக இருந்தாலும்கூட சுதந்திர நாடாக இருந்த ஹாங்காங்கை, கம்யூனிச நாடான சீனாவிடம் ஒப்படைப்பதை அந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை. சர்வதேச உடன்படிக்கை மூலம் பணப் பரிமாற்றம் நடப்பதுபோல, அதிகாரப் பரிமாற்றம் நடத்தப்பட்டது. சமீபத்தில் ஸ்காட்லாந்துக்குத் தரப்பட்ட சுதந்திரம் ஹாங்காங்குக்குத் தரப்படவில்லை.
புதிய "ஒரு நாடு, இரண்டு கொள்கை' ஒப்பந்தப்படி, சீனாவின் கம்யூனிச சட்ட திட்டங்களிலிருந்து ஹாங்காங்குக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஹாங்காங் எப்போதும் போல அடுத்த 50 ஆண்டுகளுக்கு தனது விதித்தளர்வாக்கப் பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கலாம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேபோல, 2017-ஆம் ஆண்டுக்குள் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட்டு, ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது 1997-இல் சீனாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு வாக்குறுதி.
இப்போது சீனாவின் தேர்தல் திட்டத்தில் புதிதாக ஒரு கருத்து வலியுறுத்தப்படுகிறது. பெய்ஜிங்குடன் நட்புறவில் இருக்கும், சீன அரசால் அங்கீகரிக்கப்படும் நபர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதுதான் அந்த அறிவிப்பு. 2017-இல் நாங்கள் விரும்பும் ஒருவரைத் தலைமை நிர்வாகியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிற ஹாங்காங் மக்களின் 20 ஆண்டு கால எதிர்பார்ப்பில் மண்ணைப் போடுகிறது இந்த அறிவிப்பு. சுதந்திரமான தேர்தல் கிடையாது என்கிற அறிவிப்புதான் ஹாங்காங் மக்களைத் தெருவில் இறங்கிப் போராட வைத்திருக்கிறது.
ஹாங்காங்கின் மையப் பகுதியான "சென்ட்ரல்', மக்கள் வெள்ளத்தால் முற்றுகையிடப்பட்டிருக்கிறது. கண்ணீர்ப்புகை வீச்சு, மிளகுத் தூள் திவலைப் பீச்சு (ஸ்பிரே), தண்ணீர் அடித்தல் என்று போராட்டக்காரர்களைக் கலைந்து போகச் செய்யும் முயற்சிகளை சீன அரசு மேற்கொள்கிறது. இணையதளத் தொடர்புகளைத் துண்டித்து, சமூக வலைதளங்கள் மூலம் போராட்டம் பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் வெளியுலகுக்குத் தெரிவதைத் தடுக்க முற்பட்டிருக்கிறது.
இதுவரை காவல் துறையினர் மட்டும்தான் போராளிகளைத் தடுத்து நிறுத்தவும் தாக்கவும் பயன்படுத்தப்படுகின்றனர்.
1989-இல் தியானன்மென் சதுக்கத்தில் நிகழ்த்தியதுபோல ஹாங்காங்கிலும் ஆயிரக்கணக்கானவர்களைச் சுட்டுத் தள்ளி, சுதந்திரத்தின் குரல்வளையை சீன அரசு நெரித்து விடுமோ என்கிற அச்சம் உலகெங்கும் எழும்புகிறது.
காந்திய அறவழியில் சுதந்திரத்திற்காகப் போராடும் ஹாங்காங் மக்களுக்கு "தினமணி' ஆதரவுக் குரல் எழுப்புகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் தொடர்வது அரசியலமைப்பின் மீதான தாக்குதல்: காங்கிரஸ்

மாஸ்க் கொண்டாட்டம் பற்றி பேசிய சுழல்பந்து இரட்டையர்கள் அகீல் ஹொசைன், நூர் அகமது!
இதுதான் புரமோஷனா? புலம்பும் தனுஷ் ரசிகர்கள்!
ஹூக்ளி நதியில் பிரதமர் மோடி படகுப் பயணம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

