நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்தபடியே தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் தொகுப்பு நிதியில் 5 சதவீதத்தைப் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. முதல் கட்டமாக, ஒரு சதவீதம் தொடங்கி, இந்த நிதியாண்டின் இறுதியில் 5 சதவீதம் வரை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்படவுள்ளது. பங்கு வர்த்தகம் மட்டுமல்லாது, பரஸ்பர நிதித் திட்டங்களிலும் இந்த முதலீடு செய்யப்படும் என்பதையும், இந்த அளவு படிப்படியாக உயரும் என்பதையும் நாம் இப்போதே கணிக்க முடியும்.
2013-14 நிதியாண்டில் மட்டும் அரசுக்குத் தொழிலாளர் வைப்புத் தொகை சந்தா மூலமாகக் கிடைத்த தொகை ரூ.94,762 கோடி. இதில் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் அளித்த வகையில் ரூ.43,500 கோடி செலவாகியுள்ளது. அதாவது, ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.50,000 கோடி மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்துக்கு கிடைக்கப்பெறுகிறது. இதுதவிர, தொழிலாளர்களால் கோரப்படாத, தொடரப்படாத வைப்புநிதி கணக்குகளில் தேங்கியிருக்கும் தொகை ரூ.32,000 கோடி.
இதை அரசு நிறுவனங்களில் முதலீடு செய்யாமல், பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய வேண்டிய தேவை வருங்கால வைப்புநிதி நிறுவனத்துக்கு ஏற்பட அரசு சொல்லும் காரணம் இதுதான்: தொழிலாளர்களின் வைப்புத் தொகைக்கு வட்டி அளித்தாக வேண்டும். தொழிலாளர்கள் 10 சதவீதம் வட்டி கேட்கிறார்கள். இந்த அளவு வங்கிகளுக்கே சாத்தியமில்லாதது. ஆகவே, இதே அளவு வட்டியைத் தர இயலாது. ஆனாலும், வைப்புநிதிக்கான வட்டி விகிதம் நிலையில்லாமல் இருப்பதால், இத்தகைய பங்கு வர்த்தகம் மூலம் ஈட்டும் வருவாயைக் கொண்டு தொழிலாளர்களுக்கு வட்டியை வழங்க முடியும்.
பங்கு வர்த்தகம் மற்றும் பரஸ்பர நிதித் திட்டங்கள் சந்தையை அடிப்படையாகக் கொண்டவை. சந்தைப் போக்கை நுட்பமாகக் கவனித்து முதலீடு செய்தால் மட்டுமே இதில் லாபம் கிடைக்கும். மத்திய தொழிலாளர் வைப்புநிதி நிறுவனம் ஓர் அரசு நிறுவனம். அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் இந்தப் பணத்தைத் தேவையில்லாத திட்டங்களுக்கு எளிதில் திருப்பி, அரசுக்கு நஷ்டத்தையும், தனியாருக்கு லாபத்தையும் வழங்குவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம்.
இந்த இழப்புகள் உடனடியாகத் தெரியத் தொடங்காது. ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகே இந்த இழப்புகளின் பாதிப்பு வெளிப்படையாகத் தெரியும். அதற்குள்ளாக ஆண்டுதோறும் குறைந்தது ரூ.5,000 கோடி என்றாலும் குறைந்தது ரூ.25,000 கோடி பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கும். அந்த நிலையில் திட்டத்திலிருந்து பின்வாங்குவதும் கடினம்.
இவ்வாறு, பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யும் திட்டத்தை ஓய்வூதியத் திட்ட உறுப்பினரே தன்னளவில் முடிவு செய்து முதலீடு செய்வதும், அதற்கான பலனை அவரே அடைவதுமான திட்டத்தையும்கூட முன்பு அறிவித்தார்கள். அது அறிவிப்பு நிலையிலேயே இருக்கிறது. இப்போது வைப்புத்தொகையின் தொகுப்பு நிதியை முதலீடு செய்ய இருக்கிறார்கள்.
இந்தியா முழுவதிலும் ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஏற்பட்டு, தொழிலாளர்கள் நிறுவனம் மாறுவதாலும் அல்லது அதே நிறுவனத்தில் சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு சேருவதாலும் அவர்களது வைப்புத்தொகை பல தொகுதிகளாக உள்ளது. இவற்றை ஒன்றாகச் சேர்க்கப் பெரும்பாடு பட வேண்டியதாக இருந்தது. அதற்காக இப்போது பொது கணக்கு எண் (யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர்) திட்டத்தை வைப்புநிதி நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. இதற்காகப் பாராட்ட வேண்டிய சூழ்நிலையில், இத்தகைய பிற்போக்கான முடிவும் மேற்கொள்ளப்படுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் காலத்தில், தொழிலாளர் வைப்புநிதி ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 என்று நிர்ணயிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், ஏப்ரல் மாதம் முதல் இந்தத் திட்டம் தொடரவில்லையே ஏன்?
செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள வைப்புத்தொகை நாடு முழுவதும் ரூ.4,000 கோடி அளவுக்கு உள்ளது. அவற்றை வசூலிப்பதில் ஏன் தீவிரம் காட்டுவதில்லை?
அயல்பணி ஒப்பந்த முறை வந்த பிறகு உழைப்பைத் தருபவர் - உழைப்பைப் பெறுபவர் என்ற நிலை முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்டது. இத்தகைய நேர்வுகளில் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதியை உருவாக்கவும், இதில் உழைப்பைப் பெறுபவரிடம் சமமான சந்தாவைப் பெறுவதும் எவ்வாறு என்பதற்கான புதிய வழிகாட்டுதல்கள் தேவையாக இருக்கின்றன.
இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், பங்கு வர்த்தகத்தில் போய் விழுவானேன்!?
தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டம் தொடங்கப்பட்டதன் நோக்கமே, தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது அவர்களுக்கு வாழ்க்கைக்கு போதிய நிதி கிடைக்க வேண்டும் என்பதுதான். அவர்களது பாதுகாப்பான எதிர்காலம் கருதித்தான். ஆனால் பங்கு வர்த்தகம், தனியார் நிறுவனங்களில் முதலீடு என்பது அந்த நோக்கத்துக்கு எதிரானதாக அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

