அச்சப்படத் தேவையில்லை!

நைரோபியில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பு அமைச்சு உறுப்புநாடுகள் மாநாட்டில், கல்வி வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கையை இந்தியா ஏற்கக்கூடாது என்று இடதுசாரிகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அண்மையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும்கூட, இதை அனுமதித்தால் சேவை என்பதிலிருந்து மாறி, கல்வி வணிகமாக மாறிவிடும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
Updated on
2 min read

நைரோபியில் நடைபெறும் உலக வர்த்தக அமைப்பு அமைச்சு உறுப்புநாடுகள் மாநாட்டில், கல்வி வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கையை இந்தியா ஏற்கக்கூடாது என்று இடதுசாரிகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. அண்மையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும்கூட, இதை அனுமதித்தால் சேவை என்பதிலிருந்து மாறி, கல்வி வணிகமாக மாறிவிடும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 இந்தியாவில் வெளிநாட்டு கல்லூரிகளை அனுமதிக்கும் மசோதா, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு வந்த இரு முறையும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நிலைக்குழு பரிந்துரைக்கும் அனுப்பப்பட்டது. ஆனால் 2ஜி ஊழல் வழக்கு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற விவகாரங்கள் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்துக்கொண்டதால் அந்த மசோதா, நிலைக்குழுவின் திருத்தங்களுடன் மீண்டும் அவையில் வைக்கப்படும் வாய்ப்பு உருவாகவில்லை.
 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்குள் வந்தால், அரசு தனது மானியத்தை அவர்களுக்கும் வழங்கும் என்றும், உயர் கல்வியின் கட்டணம் அதிகரிக்கும் என்றும், இடஒதுக்கீடு முறை முற்றிலும் மறுக்கப்படும் என்றும் பல அரசியல் கட்சிகளும் பலவிதமாக கூறினாலும், இந்த விவகாரத்தில் இந்தியாவின் முன்னிலைப் பல்கலைக்கழகங்கள் எதுவும் தங்கள் தொழிலுக்கு ஆபத்து என்று சொல்லவில்லை. இத்தகைய முடிவுக்கு சொல்லும்படியான எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
 இப்போதும்கூட, இந்தியாவில் தனியார் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டம் வழங்கும் ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 137. இந்திய அரசு விதித்துள்ள ஒரே நிபந்தனை, இந்தப் பல்கலைக்கழகங்கள் உலகத் தரப் பட்டியலில் 300-க்குள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே. இவர்கள் வழங்கும் படிப்புகள் பெரும்பாலும் மேலாண்மைக் கல்வி, அல்லது சேவைப் பிரிவுகளான ஓட்டல், சமையல் போன்ற படிப்புகள்தான்.
 இந்தியாவில் உயர்கல்வி வணிகமயமாகிவிட்டது என்பதும், உலகத் தரமான பல்கலைக்கழகங்களில் 200-இல் ஒன்றாக இந்தியப் பல்கலைக்கழகங்கள் இல்லை என்பதும் இன்றைய இந்தியாவின் பிரச்னை. அதே நேரத்தில், இந்தியாவில் தரமான உயர்கல்வி கிடைக்கும் என்கின்ற பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக வரும் விண்ணப்பங்களுக்கும் அந்தப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் இடங்களின் எண்ணிக்கைக்கும் மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது.
 உதாரணமாக, தில்லி பல்கலைக்கழகத்தில் ஆண்டுக்கு 2.85 லட்சம் விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால், அவர்களால் ஆண்டுக்கு 54,000 மாணவர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள முடியும். மிகவும் தரமான பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும் இதுதான் நிலைமை. ஆகவே தரமான கல்வி வெளிநாடுகளில் கிடைக்கும் என்றால், அங்கே போய் படிக்கவே மாணவர்கள் ஆசைப்படுகிறார்கள். அமெரிக்காவில் ஓர் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் மிகச் சிறந்த கல்லூரியில் ரூ.25 லட்சம் வரை.
 இந்திய உள்துறை தகவல்படி, வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கும் அதிகம். ஆங்கில மொழி பேசும் நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்குத்தான் அதிக அளவில் இந்திய மாணவர்கள் செல்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 17% அதிகரித்து வருகிறது.
 அதேபோன்று, இந்தியாவில் கல்விச் செலவு குறைவு என்பதால், மருத்துவச் சிகிச்சைக்காக இந்தியா வருவதைப் போலவே கல்வி பயில இந்தியா வரும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டு 66,885.
 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் நிறுவனங்களைத் தொடங்கினால், அவர்கள் தங்கள் கட்டணத்தை இந்தியாவில் தனியார் பல்கலைக்கழகங்கள் நிர்ணயித்துள்ளதைக் காட்டிலும் அதிகமாக நிர்ணயிப்பார்கள். ஆனால், அந்தத் தொகை, ஓர் இந்திய மாணவர் வெளிநாடு சென்று படிப்பதைவிடப் பல மடங்கு குறைவாக இருக்கும். அதேசமயம், இந்தப் பல்கலைக்கழகங்களில் சேரும் ஆசிய மாணவர்கள் இந்தியாவுக்கு வருவதும் அதிகரிக்கும். அந்த வகையில் இந்தியாவுக்கு ஆண்டுக்கு 11 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் கிடைக்கும் என்று கணக்கிடப்படுகிறது.
 வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவும் பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அகில இந்திய தொழில்நுட்பக் குழுமத்தின் கீழ் செயல்பட விரும்பவில்லை. இத்தகைய பல்கலைக்கழகங்கள் இந்திய மண்ணில் செயல்படத் தனிவிதிமுறைகள் வகுக்கும் பொறுப்பு "நீதி ஆயோக்'கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவும், உலகு தழுவிய நடைமுறைகள் சிலவற்றை எடுத்துக்கொண்டு, இந்தியாவுக்கு ஏற்றதான நெறிமுறைகளை உருவாக்க முற்பட்டுள்ளது.
 உலக நாடுகள், குறிப்பாக, மேலை நாடுகள் கல்வி என்றால் என்ன என்று தெரியாமல் இருந்த காலத்திலேயே தக்ஷசிலா, நாளந்தா போன்ற பல்கலைக்கழகங்களை நிறுவிய நாடு இந்தியா. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைப் பார்த்து அச்சப்படும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பது வேதனையாக இருக்கிறது.÷
 காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வந்தால், யுஜிசி மாற்றப்படும், ஏ.ஐ.சி.டி.இ. மாறிவிடும், உயர் கல்விக்கட்டணம் உயரும், இடஒதுக்கீடு மறுக்கப்படும் என்பதெல்லாம் அர்த்தமற்றவை. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் குறிவைக்கும் மாணவர்கள் நடுத்தர வர்க்கத்தினர் அல்ல. நமது பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங்கும்வரை, யாரைப் பார்த்தும் அச்சப்படத் தேவையில்லை.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com