நான்காவது முறையாக நிதீஷ் குமார் பிகார் முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றிருக்கிறார். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பாணியில், கடந்த மே மாதம் மக்களவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தான் பதவி விலகியது மிகப்பெரிய தவறாகிவிட்டது என்று தன்னிலை விளக்கம் அளித்திருக்கிறார்.
மிகவும் தாழ்த்தப்பட்ட "மகாதலித்' சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராகப் பதவியில் அமர்த்தி அரசியல் ஆதாயம் தேட முடியும் என்று தான் தப்புக் கணக்குப் போட்டுவிட்டதாகச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் நிதீஷ் குமார்.
கடந்த 2010 சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால்தான் பெரும் வெற்றி காண முடிந்தது. இந்த முறை கூட்டணியிலிருந்து பா.ஜ.க. விலகிவிட்ட நிலையில், "மகாதலித்' சமுதாயத்தின் வாக்கு வங்கியின் துணையுடன் வெற்றி பெறலாம் என்கிற நிதீஷ் குமாரின் கனவை, பதவி விலகிய முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தகர்த்து விட்டிருக்கிறார். அனேகமாக, ஏற்கெனவே ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வின் கூட்டணியில் ஜிதன் ராம் மாஞ்சி இணைந்து கொள்ளக்கூடும்.
தற்போது 233 இடங்களைக் கொண்டுள்ள பிகார் சட்டப்பேரவையில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு 110 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (24), காங்கிரஸ் (5) இரண்டுமே ஆதரவு அளிக்கும் நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பதில் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எந்தவிதப் பிரச்னையும் இருக்க வாய்ப்பில்லை.
விரைவிலேயே ராஷ்ட்ரீய ஜனதா தளமும், காங்கிரஸூம் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டு நிதீஷ் குமார் கூட்டணி அமைச்சரவையை அறிவிக்கக்கூடும் என்று தெரிகிறது. அவர்களுக்காகத் தனது அமைச்சரவையில் 12 இடங்களை நிரப்பாமல் வைத்திருக்கிறார் முதல்வர் நிதீஷ் குமார்.
நிதீஷ் குமாரின் 22 பேர் கொண்ட அமைச்சரவையில், கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி நிதீஷ் குமாருக்கு ஆதரவாக மாஞ்சி அமைச்சரவையிலிருந்து விலகிய 20 அமைச்சர்களும், ஜிதன் ராம் மாஞ்சியால் நீக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். கடைசி நிமிடம் வரை தன்னைத் துணை முதல்வராக அறிவிக்க வேண்டும் என்று அடம் பிடித்த ரமாய் ராம், ஒரு வழியாக சமாதானம் செய்யப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். "மகாதலித்' சமுதாயத்தைச்சேர்ந்த ரமாய் ராம், ஜிதன் ராம் மாஞ்சியால் துணை முதல்வர் பதவி தருவதாக வாக்களிக்கப்பட்டிருந்தவர்.
பதவி விலகும் முடிவை மாஞ்சி முன்னதாகவே எடுத்திருக்க வேண்டும். பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 87 பேரின் ஆதரவு இருந்தாலும் தனக்கு மேலும் 30 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதைத் தொடக்கத்திலேயே மாஞ்சி உணர்ந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், இத்தனை நாள்களாக பத்திரிகைகளின் பரபரப்பு செய்திகளுக்கும், ஊகங்களுக்கும் இடம் ஏற்பட்டிருக்காது. கடந்த பத்து நாள்களாக ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாற்றப்பட்டிருக்காது.
இந்த கேலிக்கூத்தில் இரண்டு கேள்விகள் கேட்கப்படாமலேயே நாடகம் முடிந்துவிட்டது.
முதல் கேள்வி, மக்களவைத் தேர்தலில் தோல்விக்குப் பொறுப்பேற்று, முதல்வர் பதவியிலிருந்து விலகி, மாஞ்சிக்கு அப்பதவியைத் தந்தார் நிதீஷ் குமார். இப்போது எந்த வகையில் அவர் புதிய தேர்தல் வெற்றிகளைப் பெற்றுவிட்டார், மீண்டும் பதவியை கோருவதற்கு? மாஞ்சி நல்ல முதல்வராக செயல்படவில்லை என்றால், அவர் செய்த ஊழல் உண்டா?
இரண்டாவது கேள்வி, இந்த விவகாரத்தில் மாஞ்சி முன்வைத்த பிரச்னைக்கு மூலகாரணமான குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதா என்பதைப் பற்றி யாருமே பேசவில்லையே, ஏன்?
மாஞ்சி சொன்னது இதுதான்: நான் 34 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆனால் பணக்காரன் அல்ல. முதல் இரண்டு மாதங்கள் நிதீஷ் சொன்னதை மட்டுமே செய்தேன். அவருடைய ரப்பர் ஸ்டாம்ப் என்று சொல்லும் அளவுக்கு நடந்துகொண்டேன். கருவூலப் பணத்தைக் கொள்ளையடிக்கும் இடைத்தரகர்களுக்கு நான் முட்டுக்கட்டை போட்டேன். அதில்தான் கருத்து முரண்பாடு வந்தது. "யார் அந்த இடைத்தரகர்கள்?, எந்தெந்த திட்டத்தில் எவ்வளவு மக்கள் பணம் வீணானது?' என்று யாருமே அவரைத் துருவிக் கேட்கவில்லை. அவரும் விளக்கமாகச் சொல்லத் துணியவில்லை.
மாஞ்சியின் பிடிவாதம் நேர்மையானதாக இருந்திருந்தால், அவர் ஒட்டுமொத்த உண்மையையும் மக்கள் மன்றத்தில் முன்வைத்திருக்க வேண்டும். தன்னை உருவாக்கிய, தன்னை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்த நிதீஷ் குமாருடன் கருத்து முரண்பாடு ஏற்பட மிக முக்கியமான காரணம், "தான் அவரை விஞ்சிவிடுவேன் என்ற ஆதங்கமா? அல்லது அவரை அம்பலப்படுத்திவிடுவேன் என்ற அச்சமா?' என்பதை அவர் வெளிப்படையாக ஏன் விவாதமாக்கவில்லை?
"நான் தலித் என்ற ஒரே காரணத்தால், பாஞ்சாலியைத் துகிலுரிந்ததுபோல, என்னைத் தலைகுனிவுக்கு ஆளாக்கிவிட்டார் நிதீஷ் குமார்' என்று குற்றம் சாட்டுகிறார் ஜிதன் ராம் மாஞ்சி. "நிதீஷ் குமார், மாஞ்சியை பரதனாகத்தான் நினைத்திருந்தார், அவர் ஏமாற்றிவிட்டார்' என்கின்றனர் நிதீஷ் குமாரின் ஆதரவாளர்கள். இந்த இதிகாச கதாபாத்திர வர்ணனையில், மாஞ்சியை சிகண்டியாக சித்திரிக்கின்றனர் பா.ஜ.க.வினர்.
ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்பட்டிருக்கிறது. அப்பாவி வாக்காளரின் கதாபாத்திரம் இந்த நாடகத்தில் விதூஷகன்தான் என்பதும் தெரிகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

