இந்தியாவைப் பொருத்தவரை, தனியார்மயம், சந்தைப் பொருளாதாரம், பொருளாதாரச் சீர்திருத்தம் ஆகியவை கூட்டாண்மை (கார்ப்பரேட்) நிறுவனங்களின் தடையற்ற கொள்ளைக்கு வழிகோலியிருக்கின்றன என்கிற குற்றச்சாட்டு உண்மைதான் என்பது சமீபத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கூட்டாண்மை நிறுவனங்கள் அரசின் ரகசியக் கோப்புகளைத் திருடிச் சென்று கொண்டிருந்தன என்றால், எந்த அளவுக்கு சந்தைப் பொருளாதாரம் இந்திய அரசு நிர்வாகத்தை ஊழல்மயமாக்கி இருக்கிறது என்பது வெளிப்படை.
பெட்ரோலிய அமைச்சகத்தைச் சேர்ந்த சில கடைநிலை ஊழியர்கள், ஒரு பத்திரிகையாளர், சில அறிவுரையாளர்கள் (கன்சல்டென்ட்ஸ்), தனியார் எரிசக்தி நிறுவன அதிகாரிகள் என்று 12 பேர், காவல் துறையினரால் கைது செய்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் பெட்ரோலிய அமைச்சகத்தின் மிகவும் முக்கியமான கோப்புகள் பலவற்றையும் தொடர்ந்து களவாடிச் சென்று கொண்டிருந்தார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. இவர்களைப் போலவே, பல்வேறு கூட்டாண்மை நிறுவனங்களின் சார்பில் இன்னும் பலர் குழுக்களாக இயங்கி வருவதும், அமைச்சர்கள், உயரதிகாரிகள் எழுதி வைத்த குறிப்புகள் அடங்கிய கோப்புகளேகூட எந்தவிதத் தடையும் இல்லாமல் கூட்டாண்மை நிறுவனங்களின் பார்வைக்குக் கிடைத்து வந்திருப்பதும் இப்போது தெரியவந்திருக்கிறது.
எந்த அளவுக்கு மத்திய அரசின் முக்கியமான அமைச்சகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்து வருகின்றன என்பதை இந்தக் "கோப்பு ஊழல்' வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. முக்கியமான கோப்புகளை முறையாகப் பாதுகாக்கக்கூட மக்களின் பல கோடி ரூபாய் வரிப்பணத்தில் இயங்கும் இந்திய அரசு நிர்வாகத்தால் முடியவில்லை என்றால் அதைவிடத் தலைகுனிவான ஒன்று இருக்க முடியாது. கோப்புகளை காப்பகங்களிலும், உயர் அதிகாரிகளின் அறைகளிலும் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்புக் கேமராக்களை முடக்கி வைத்துத் திருட முடிந்திருக்கிறது என்றால், இதற்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய கூட்டமே சதியில் ஈடுபட்டிருந்திருக்க வேண்டும்.
கடைநிலை ஊழியர்களாகவும், அலுவலக ஏவலர்களாகவும் இருப்பவர்களால் ரகசியக் கோப்புகளைத் திருடி அறிவுரையாளர்களுக்கும், கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் விற்க முடிந்திருக்கிறது என்பது முழுமையான உண்மையாகிவிட முடியாது. எந்தக் கோப்புகள் முக்கியமானவை, குறிப்பிட்ட கூட்டாண்மை நிறுவனத்திற்குத் தேவைப்படும் குறிப்பு அல்லது தகவல் எந்தெந்தக் கோப்புகளில் காணப்படுகின்றன என்பதெல்லாம் கடைநிலை ஊழியர்களுக்குத் தெரிந்திருக்கவோ, அடையாளம் காணவோ முடிந்திருக்காது. இதில் விவரம் தெரிந்த அதிகாரிகளும் நிச்சயமாக சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பதில் ஐயமே வேண்டாம்.
கடந்த இருபது ஆண்டுகளாக, பல கூட்டாண்மை நிறுவனங்கள் அரசு எத்தகைய கொள்கை முடிவை எடுக்கிறது, எந்தவிதமான புதிய அணுகுமுறையைக் கையாள இருக்கிறது போன்ற தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடிந்ததால், தங்களுக்கு எதிரான முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடவும், முடிவுகளைத் தங்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கவும் முடிந்திருக்கிறது. இதில் பன்னாட்டு நிறுவனங்கள் தொடர்புடையதாக இருப்பதால், அவர்களால் டாலர்களை அள்ளி வீசவும், அரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணம், அவர்களது குழந்தைகளுக்கு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி வசதி என்று ஆசைகாட்டி மயக்க முடிந்திருக்கிறது.
சில பெட்ரோலிய அமைச்சக ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், ஏதோ சில கோப்புகள் களவு போயிருக்கின்றன என்று நாம் வாளாவிருந்துவிட முடியாது. ராணுவத் தளவாட உற்பத்தி உள்ளிட்ட தேசப் பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கியமான பல ரகசிய ஆவணங்கள் இதுபோலக் களவாடப்படவும், ரகசியங்கள் தெரிந்து கொள்ளப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்றால் அது எப்படிப்பட்ட ஆபத்து? எந்தவிதத் தவறும் நிகழ்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதால் எல்லாவற்றையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்க முற்படுவதும், இதுவரை கொடுக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த முற்படுவதும் இயல்பு. அதனால், அரசு நிர்வாகமே ஸ்தம்பித்துப் போய் எதுவுமே நடக்காமல் இருந்தால்? அதுவும் ஆபத்து.
நரேந்திர மோடி அரசு இந்தப் பிரச்னையின் முழு பாதிப்பையும் கண்டுபிடிக்க நினைக்கிறது என்று சொன்னால், ஒரு சில கடைநிலை ஊழியர்களையும், இடைத்தரகர்களையும், அறிவுரையாளர்களையும், கூட்டாண்மை நிறுவன அதிகாரிகளையும் மட்டும் விசாரிக்காமல், இதன் பின்னணியில் இருந்த கூட்டாண்மை நிறுவனத் தலைவர்கள், நிர்வாக இயக்குநர்களையும், சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் துணிந்து உள்படுத்த வேண்டும்.
இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கத் தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளிப்பதுதான் ஒரே வழி என்கிற பிரதமர் நரேந்திர மோடியின் கருத்து உண்மையிலும் உண்மை. அதேநேரத்தில் நிர்வாக ரகசியச் சட்டத்தை மேலும் பலப்படுத்தி, அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையே இல்லாத நிலைமை ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பது அதைவிட இன்றியமையாதது.
ரகசியக் கோப்புகளும், அரசு முடிவுகளும் களவாடப் படாமல் பாதுகாக்கப்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்தப்படுவது. தகவல் பெறும் உரிமைச் சட்டமும், ஊடகங்களுக்குத் தகவல் கிடைக்கும் வழிமுறைகளும், இந்த சம்பவத்தால் முடக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி கவனமாக இருப்பது மிக மிக அவசியம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி

ராஜஸ்தான் சட்டப் பேரவைக்கு தற்கொலைத் தாக்குதல் மிரட்டல்

நந்தா கலை, அறிவியல் கல்லூரிக்கு மத்திய அரசு ரூ.70 லட்சம் ஊக்க நிதி

கொங்கு வேளாளா் தொழில்நுட்ப அறக்கட்டளை சாா்பில் மாணவா்களுக்கு ரூ.5.7 கோடி கல்வி ஊக்கத்தொகை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

