இன்னுமொரு தேர்தல், அவ்வளவே!

அதிபர் தேர்தலுக்குத் தயாராகிறது இலங்கை. இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது என்கிற விதிமுறை நீக்கப்பட்டு, அந்த விதிமுறையை மாற்றியவரே மூன்றாம் முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியுமிடுகிறார்.
Updated on
2 min read

அதிபர் தேர்தலுக்குத் தயாராகிறது இலங்கை. இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது என்கிற விதிமுறை நீக்கப்பட்டு, அந்த விதிமுறையை மாற்றியவரே மூன்றாம் முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியுமிடுகிறார். 2010 நவம்பர் 19-ஆம் தேதி பதவியேற்ற அதிபர் ராஜபட்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசின் ஆறு ஆண்டுப் பதவிக்காலம் இன்னும் முடியவில்லை. ஆனாலும்கூட, அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தி தான் மீண்டும் போட்டியிட வழிவகை செய்துவிட்ட மகிழ்ச்சியில், முன்கூட்டியே தேர்தலுக்குத் தயாராகி விட்டிருக்கிறார் அதிபர் ராஜபட்ச.

தேர்தல் களத்தில் 19 பேர் இருக்கிறார்கள் என்றாலும், போட்டி என்னவோ ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மகிந்த ராஜபட்சவுக்கும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மைத்ரிபாலா ஸ்ரீசேனாவுக்கும் இடையில்தான். முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும்கூட அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஸ்ரீசேனாவின் வெளியேற்றம் மகிந்த ராஜபட்சவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவை ஏற்படுத்தி, அதிபரின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

திடீரென்று அதிபர் ராஜபட்சவுக்கு எதிராகத் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் மைத்ரிபாலா ஸ்ரீசேனா கடந்த மாதம் வரை, ராஜபட்ச அரசின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர். இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோதும், இனப் படுகொலை தொடர்ந்தபோதும் அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு ஆதரவாக இருந்தவர். அவர் திடீரென்று அமைச்சரவையிலிருந்து விலகி, அதிபர் ராஜபட்சவுக்கு எதிராகக் களமிறங்கி இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ராஜபட்ச அரசிலிருந்து ஆறு அமைச்சர்கள் பதவி விலகி மைத்ரிபாலா ஸ்ரீசேனாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய முற்பட்டிருப்பது அதைவிட வியப்பாக இருக்கிறது. தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வேறு யாரையும் நிறுத்திவிடாமல் இருப்பதற்காக மைத்ரிபாலா ஸ்ரீசேனாவை அதிபர் மகிந்த ராஜபட்ச களத்தில் இறக்கி இருக்கிறார் என்று சந்தேகிப்பவர்களும் உண்டு.

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது பெரும்பான்மையினரான சிங்களர்கள் வசிக்கும் வடமேற்கு, மேற்கு, மத்திய, தென் இலங்கைப் பகுதிகள்தானே தவிர, தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு மாவட்டங்கள் அல்ல. சிங்களர்களின் வாக்குகள் மூன்று, நான்கு வேட்பாளர்களுக்கு இடையில் பிளவுபடும்போதுதான், வடக்கு மாகாண வாக்குகளும், தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் கிழக்கு மாகாண வாக்குகளும் நிர்ணாயகமாக மாறுகின்றன. அதிபர் ராஜபட்சவுக்கும், மைத்ரிபாலா ஸ்ரீசேனாவுக்கும் இடையில் மட்டும்தான் போட்டி என்றால், அதிபர் தேர்தலில் வெற்றிபெற சிங்கள மக்களின் பேராதரவு பெற்றிருந்தாலே போதும்.

2009-இல் நடந்த உள்நாட்டுப் போரில் ராணுவத்தினரின் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை நடத்தப்படும் என்றும், மாகாண அரசுக்கு கூடுதல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் அதிபர் மகிந்த ராஜபட்ச வாக்குறுதி அளித்திருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செய்யாமல் விட்டதை இப்போது தேர்தல் வாக்குறுதியாக அவர் அளிக்க முற்பட்டிருப்பதுதான் வேடிக்கை.

அதிபர் ராஜபட்சவின் சர்வாதிகாரப் போக்கு, குடும்ப அரசியல், தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பதவியும், பொறுப்பும் தருவது, அதிகரித்துவிட்ட ஊழலும், முறைகேடுகளும் ஆகியவை மக்கள் மத்தியில் பரவலாக அதிருப்தியையும், ஆட்சியின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமன்றி, சிங்களர்கள் மத்தியில் அதிபர் ராஜபட்ச தமிழர்களுக்குப் பல சலுகைகள் அளித்து வருகிறார் என்கிற தவறான கருத்து பரவி இருக்கிறது. இந்தியாவிலிருந்து வடக்கு மாகாணங்களின் புனர் நிர்மாணத்திற்கு அளிக்கப்பட்ட நிதியுதவியால், தமிழர்கள் வாழும் பகுதிகள் தங்களுடைய பகுதிகளைவிடவும் நவீனமயமாகிவிடும், கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுவிடும் என்கிற அச்சம் சிங்கள மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இதையெல்லாம் தனக்குச் சாதகமாக மாற்றி வருகிறார் மைத்ரிபாலா ஸ்ரீசேனா.

இதனால்தான், அதிபர் ராஜபட்சவின் பார்வையும், பாசமும் சிறுபான்மைத் தமிழர்கள், முஸ்லிம்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. ஆனால், வடக்கு மாகாணத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, கிழக்கு மாகாண இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் சரி, அதிபர் ராஜபட்சவின் நேசக்கரத்தை சட்டை செய்யத் தயாராக இல்லை. முந்தைய அதிபர் தேர்தலில் ராஜபட்சவை எதிர்த்து நின்ற சரத் பொன்சேகாவை ஆதரித்தது போலவே, இந்தத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபாலா ஸ்ரீசேனாவை ஆதரிக்க முன்வந்துள்ளது.

சமீபத்தில், அதிபர் ராஜபட்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி விலகியது. அந்தக் கட்சியின் தலைவரும், சட்டத் துறை அமைச்சருமான ரவூஃப் ஹகீம் பதவி விலகி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபாலா ஸ்ரீசேனாவுக்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.

வரும் எட்டாம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ராஜபட்ச வெற்றி பெற்றாலும், ஸ்ரீசேனா வெற்றி பெற்றாலும், அதனால் இலங்கை அரசின் தமிழ்ச் சிறுபான்மையினர் பற்றிய அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இலங்கையில் அதிபர் முறை அகற்றப்பட்டு, இந்தியாவைப்போல நாடாளுமன்ற ஜனநாயகம் ஏற்படாதவரை, எண்ணிக்கை பெரும்பான்மை வைத்ததுதான் சட்டமாகத் தொடரும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com