இந்தியாவைத் தொடர்ந்து இப்போது இலங்கையும் மக்களாட்சியின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தி இருக்கிறது. இலங்கையின் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது என்று கூறிவிட முடியாது. சிறுபான்மையினரின் ஆதரவு மைத்ரிபாலா சிறீசேனாவுக்குக் கிடைக்கும் என்றபோதே அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி விட்டது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ் இந்துக்கள் வாழும் பிரதேசமான வடக்கு மாகாணத்திலும், திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரா மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ் இஸ்லாமியர்கள் வசிக்கும் கிழக்கு மாகாணத்திலும் ராஜபட்சவிற்கு எதிரான அலை காணப்பட்டபோதே, தேர்தல் முடிவுகள் மைத்ரிபாலா சிறீசேனாவுக்கு சாதகமாகக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
மகிந்த ராஜபட்சவும், மைத்ரிபாலா சிறீசேனாவும் மத்திய, தென் இலங்கைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் பெரும்பாலான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள். சிங்களர்களின் வாக்கு பிளவுபட்டதும், ராஜபட்சவின் சர்வாதிகாரக் குடும்ப ஆட்சி பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தி இருந்ததும், வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சிறுபான்மைத் தமிழர்களின் வாக்குகள் சிறீசேனாவுக்கு கணிசமாக விழுந்ததும் தேர்தல் முடிவுகளை ராஜபட்சவுக்கு எதிராக மாற்றியிருக்கிறது.
நியாயமாக, 2005-இல் நடந்த அதிபர் தேர்தலிலேயே ராஜபட்ச தோல்வியைத் தழுவி இருக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், அப்போதைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவியதற்கு விடுதலைப் புலிகள் விடுத்த தேர்தல் புறக்கணிப்புத்தான் காரணமாக அமைந்தது. தமிழர்கள் வாக்களிக்காததால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மகிந்த ராஜபட்ச அதிபரானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களின் இன்றைய அவலத்திற்கும் அதுதான் காரணமாக அமைந்தது.
மகிந்த ராஜபட்சவிற்கும், அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எதிர்க்கட்சியினரின் பொது வேட்பாளரான மைத்ரிபாலா சிறீசேனாவுக்கும் கொள்கை அளவில் பெரிய வேறுபாடு இல்லை. மகிந்த ராஜபட்சவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கி கிராமப்புற சிங்களர்களின் ஆதரவால் அமைந்தது. ராஜபட்சவின் அமைச்சரவையிலிருந்து விலகி மைத்ரிபாலா சிறீசேனா அந்த வாக்கு வங்கியில் பிளவு ஏற்படுத்தினார் என்பது மட்டுமல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவனர் தலைவர் பண்டாரநாயகவின் மகளும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்க சிறீசேனாவுக்கு ஆதரவு அளித்ததும் மாற்றத்திற்கு வழிகோலியது.
இலங்கை மக்களின் பேராதரவுடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மைத்ரிபாலா சிறீசேனா, தனது வாக்குறுதிப்படி தனக்கு ஆதரவு அளித்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கி இருக்கிறார். மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பது, தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்திலிருந்து ராணுவத்தைத் திரும்பப் பெறுவது ஆகிய சிறுபான்மை மக்களின் இரண்டு முக்கியக் கோரிக்கைகளையும் தேர்தலுக்கு முன்பாகவே ஏற்றுக்கொள்ளாத சிறீசேனா இப்போது ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை. ஆனால், பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்றிருப்பதால், ராஜபட்ச ஆட்சியில் இருந்த அளவுக்கு தமிழர்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
மைத்ரிபாலா சிறீசேனா தனது தேர்தல் வாக்குறுதியில் முன்வைத்த முக்கியமான அறிவிப்பு, பதவிக்கு வந்த நூறு நாள்களில் ராஜபட்சவால் கொண்டு வரப்பட்ட அதிபரின் சர்வாதிகார ஆட்சி முறையை அகற்றி, காவல் துறை, நீதித் துறை, நிர்வாகம் போன்றவை சுதந்திரமாக இயங்கும் நாடாளுமன்ற ஜனநாயக முறையை நிறுவுவது என்பது.
அதுமட்டுமல்லாமல், அதிபர் பதவிக்கு இரண்டு தடவைக்கு மேல் ஒருவர் போட்டியிடக்கூடாது என்கிற விதிமுறையை மீண்டும் கொண்டு வருவதாகவும் கூறியிருந்தார்.
1994-இல் முதல் முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது சந்திரிகா குமாரதுங்கவும், அதிபர் முறையை அகற்றி நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இலங்கை மாற்றப்படும் என்று அறிவித்தார். ஆனால், பதவியில் அமர்ந்ததும் மறந்து விட்டார். அதிபர் பதவியில் இருக்கும் அதிகாரக் குவிப்பு, அந்த நாற்காலியில் அமரும் எவரையும் அதைக் கைவிட சம்மதிக்காது. சிறீசேனா என்ன செய்வார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்நாட்டுப் போரில் நடந்த மனித உரிமை மீறலுக்கு சர்வதேச விசாரணை நடத்தப்படுமா என்பது சந்தேகம்தான். உள்நாட்டுப் போரின் கடைசி இரண்டு வாரங்களில் ராணுவ அமைச்சராக இருந்தவர் மைத்ரிபாலா சிறீசேனாதான் எனும்போது, எப்படி அது சாத்தியம்?
மைத்ரிபாலா சிறீசேனா, ரணில் விக்ரமசிங்க ஆட்சியில், சீனாவுடனான இலங்கையின் நெருக்கம் கணிசமாகக் குறைந்து, இந்தியாவுடனான உறவு வலுப்படும் என்று நம்பலாம். இந்தச் சூழலைப் பயன்படுத்தி இந்திய அரசு வடக்கு மாகாணத்திற்கு அதிகாரங்களைப் பெற்றுத் தந்தால், உள்நாட்டுப் போரில் நமது செயல்பாட்டுக்குப் பிராயச்சித்தம் தேடலாம்.
அதிபராகப் பதவியேற்றுள்ள மைத்ரிபாலா சிறீசேனாவுக்கு இன்னொரு பொறுப்பும் உண்டு. எலியும் பூனையுமான, ரணில் விக்ரமசிங்கயின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சந்திரிகாவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொண்டாக வேண்டும்.
இலங்கை நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குத் திரும்பாதவரை பிரச்னைகள் தொடரத்தான் செய்யும். சிறீசேனா என்ன செய்யப் போகிறார் பார்க்கலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ

விமானப்படை விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு விதிகளுக்கு புறம்பாக கட்டுப்பாடு

தோ்தல் பணியில் உயிரிழந்த எஸ்எஸ்ஐ உடல் அரசு மரியாதையுடன் தகனம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொகுதிகளுக்கு 22 முதல் 26 சுற்றுகளில் முடிவுகள்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

