ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டப் பேரவை முடக்கப்பட்டு, அங்கே ஆளுநர் ஆட்சி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடைக்கால அரசாக தொடர்ந்து வந்த ஒமர் அப்துல்லா அமைச்சரவை பதவி விலகியதால், அங்கு ஆளுநர் ஆட்சியை அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை. எந்த முடிவும் எடுக்க முடியாதபடி இடைக்கால அமைச்சரவை தொடர்வதால், நிர்வாகம் ஸ்தம்பித்து, வளர்ச்சிப் பணிகள் முடக்கப்படுகின்றன என்பதை உணர்ந்து பதவி விலகிய முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் பொறுப்புணர்வுக்குப் பாராட்டுகள்.
ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிவு எந்தவொரு கட்சிக்கும் சட்டப்பேரவையில் தனிப் பெரும்பான்மையைத் தராமல் போனது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்றாலும், பயங்கரவாதிகளின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை நிராகரித்து, பெருவாரியான மக்கள் திரண்டெழுந்து வாக்களித்தும்கூட, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நிலையான மக்களாட்சியை நிறுவ முடியாததற்கு அரசியல் கட்சிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
28 இடங்களில் வெற்றி பெற்று, அதிக இடங்களைக் கைப்பற்றிய மக்கள் ஜனநாயகக் கட்சி, காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், ஜம்முவில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலும் மட்டும்தான் வெற்றிபெற முடிந்ததே தவிர, இந்துக்கள் வாழும் ஜம்மு பகுதியிலோ, லடாக்கிலோ ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. அதேபோல, சட்டப் பேரவையில் 87 இடங்களில் 25 இடங்களைக் கைப்பற்றி இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும், காஷ்மீர் பள்ளத்தாக்கிலோ, லடாக்கிலோ ஓர் இடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் மக்கள் ஜனநாயகக் கட்சி இல்லாமலோ அல்லது பாரதிய ஜனதா கட்சி இல்லாமலோ ஆட்சி அமையுமானால், அது காஷ்மீர் பள்ளத்தாக்கு அல்லது ஜம்மு மக்கள் இருவரில் ஒரு பகுதியினரின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக அமையாது. அதிக இடங்களில் வெற்றி பெற்றும்கூட ஆட்சி அமைக்க முடியாத நிலையில் இருக்கும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிலைமைதான் மிகவும் தர்மசங்கடமானது.
15 உறுப்பினர்களைக் கொண்ட ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர முன்வந்திருக்கிறது. ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவுடன் ம.ஜ.க. ஆட்சி அமைக்கலாம். ஆனால், அப்படியொரு ஆட்சி அமையுமானால் அது காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுதான் அந்தக் கட்சியின் தயக்கத்திற்குக் காரணம்.
தமிழகத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் போல ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும். இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பது அல்லது ஒரு கட்சி இன்னொரு கட்சியின் ஆதரவைப் பெறுவது என்பது அரசியல் தற்கொலைக்குச் சமம்.
மேலும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியை அனுசரித்துப் போனால் மட்டுமே, மாநிலத்தின் வளர்ச்சிக்கு அது உறுதுணையாக இருக்கும் என்பதுடன், பிரச்னைகள் இல்லாமல் ஆட்சியில் தொடரவும் உதவியாக இருக்கும் என்பதை மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முப்தி முகமது சையீது நன்றாக அறிந்தவர். வி.பி. சிங் அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சராகவும், 2002 முதல் 2005 வரை காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து ஜம்மு - காஷ்மீர் முதல்வராகவும் இருந்த அனுபவசாலியான அரசியல்வாதி அவர்.
நியாயமாகப் பார்த்தால், மக்கள் ஜனநாயகக் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் இணைந்து கூட்டணி அரசு அமைப்பதுதான், ஜம்மு, காஷ்மீர் ஆகிய இரண்டு பகுதி மக்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் அரசாக இருக்க முடியும். அப்படியொரு ஆட்சி அமைவதில், கொள்கை ரீதியாகப் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370, ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டம் போன்றவற்றில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் பா.ஜ.க.வும் எதிரெதிரான கருத்து கொண்டவை.
வேடிக்கை என்னவென்றால், இந்தக் கொள்கை அளவிலான கருத்து வேறுபாடுகள், ம.ஜ.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணி அமைப்பதற்குத் தடையாக இல்லை என்பதுதான். சட்டப் பிரிவு 370 பற்றிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், சில குறிப்பிட்ட பகுதிகளில் ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரங்கள் அகற்றப்படும் என்றும் இரு தரப்பினர் மத்தியில் கருத்தொற்றுமை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
கூட்டணி அரசு அமைப்பதில் மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது, "யார் முதல்வர்?' என்கிற கேள்விதான். ஜம்மு பகுதியில் 25 இடங்களில் வெற்றி பெற்று, மிக அதிகமான வாக்கு விகிதமும் பெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி, முதல் மூன்று ஆண்டுகள் மக்கள் ஜனநாயகக் கட்சியும், அடுத்த மூன்று ஆண்டுகள் நாங்களும் முதலமைச்சர் பதவியை வகிப்போம் என்கிற நிபந்தனையை விதிக்கிறது. இதற்கு முன்பு இதேபோன்ற ஒப்பந்தத்துடன் காங்கிரஸூடன் இணைந்து ஆட்சி அமைத்த முப்தி முகமது சையீது இந்த முறையும் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அடுத்த ஆறு ஆண்டுகளுக்கும் தான்தான் முதல்வராக இருக்க வேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருக்கிறார்.
மக்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து, பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளை சட்டை செய்யாமல், வாக்குச்சாவடிக்குப் போய் தங்களது கடமையைச் செய்துவிட்டனர். ஆனால், அரசியல் தலைவர்களோ, பதவிப் போட்டியால் ஆட்சி அமைக்காமல் ஜனநாயகத்தைத் தடம்புரளச் செய்கிறார்கள். என்னே இந்த நகைமுரண்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.