அரசின் வருவாயில் கணிசமான பகுதி மானியங்களுக்காகச் செலவிடப்படுகிறது. 2004-இல் ரூ.43,653 கோடியாக இருந்த மத்திய அரசின் மானியங்களுக்கான செலவு, 2014-இல் ரூ.2.5 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி தொடங்கி பல்வேறு கடனுதவிகளுக்குச் செலுத்தப்படும் வட்டித் தொகைக்கு அடுத்தபடியாக, அரசின் செலவினங்களில் இடம்பிடிப்பது மானியங்கள்தான்.
பொதுஜனத்தைக் கவர மானியங்கள் வழங்கப்படுகின்றன என்பது பொருளாதார நிபுணர்களின் பார்வை. அடித்தட்டு மக்களின் அவலத்தைப் போக்கவும், அவர்களுக்கும் சில அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்துவதற்கும்தான் மானியம். வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மனிதர்களை சந்தை விலையில் அரிசி, கோதுமையை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுவது இந்தியாவைப் போன்ற ஒரு தேசத்தில் எப்படி சாத்தியம்? இதை அமெரிக்கப் பல்
கலைக்கழகங்களில் பொருளாதாரமும் நிர்வாக இயலும் படித்துவிட்டு, வர்த்தக நிறுவனங்களுக்குக் கையாளப்பட வேண்டிய நிதிநிர்வாக உத்திகளை அரசு நிர்வாகத்திற்கும் பொருத்திப் பார்ப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாததில் வியப்பில்லைதான்.
மானியங்களுக்கே வரி வருவாயில் பெரும்பகுதி செலவிடப்படுவதால் வளர்ச்சிப் பணிகளுக்குப் போதுமான பணம் இல்லை என்பது உண்மை. அரசின் வருவாயை அதிகரிக்க அதிக வரிகள் போடுவது என்பது வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதுடன், மக்களின் அதிருப்தியையும் அரசுக்குத் தேடித்தந்துவிடும் என்பது அதைவிட உண்மை. அதனால், மிக அதிகமான மானியம் வழங்கப்படும் உணவு மற்றும் பெட்ரோல், டீசலின் மானியப் பயனாளிகளைக் குறைப்பது என்பதில் அரசு முனைப்பாக இருக்கிறது.
போலி நபர்களின் பெயர்களில் மானியப் பொருள்கள் கள்ளச் சந்தைக்கு போகக் கூடாது என்பதற்காகத்தான் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கில் மானியத்தை நேரடியாக வழங்குவது போன்ற முயற்சிகளில் அரசு ஈடுபட்டிருக்கிறது. அதைப் புரிந்துகொள்ளும் வேளையில், அரசிடமும் அரசின் நிதி நிர்வாகத்தில் இருப்பவர்களிடமும் சில கேள்விகளை எழுப்பத் தோன்றுகிறது.
பெட்ரோலியப் பொருள்களின் விலையைச் சந்தையே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று கூறி, அதன் மீதான கட்டுப்பாட்டை முந்தைய மன்மோகன் சிங் அரசு சில வருடங்களுக்கு முன்பு விலக்கிக் கொண்டது. அதையே இப்போதைய நரேந்திர மோடி அரசும் பின்பற்றுகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஏற்ப, பொதுமக்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல், டீசலின் விலையும் நிர்ணயிக்கப்படும் என்பதுதான் இந்த நடைமுறையின் அடிப்படை.
கடந்த 2014 ஜூன் மாதம் முதல் இப்போதுவரையில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 55 விழுக்காடு குறைந்திருக்கிறது. நியாயமாக இந்த விலைக்குறைவு பொதுமக்களுக்கு விற்கப்படும் பெட்ரோல், டீசலில் குறைக்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. அவ்வப்போது விலைக் குறைப்பு என்கிற பெயரில் 50 காசுகளும் ஒன்றிரண்டு ரூபாய்களும் மட்டும்தான் பெட்ரோலிய நிறுவனங்களால் குறைக்கப்படுகின்றனவே தவிர, சர்வதேசச் சந்தையில் ஏற்படும் விலைக் குறைவின் முழுப்பயனும் பொதுமக்களுக்குத் தரப்படுவதில்லை.
கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை பெட்ரோலியப் பொருள்கள் மீதான கலால் வரியை நான்கு முறை உயர்த்திவிட்டிருக்கிறது அரசு. அதன் மூலம் கச்சா எண்ணெயின் விலை குறைவில் பெரும்பகுதி அரசுக்கும், கண்துடைப்பாகக் கொஞ்சம் பொதுமக்களுக்கும் தரப்படுகிறது. இதுவும்கூட, அவ்வப்போது நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களைக் குறிவைத்து வழங்கப்படுகிறதோ என்றுகூட சந்தேகமாக இருக்கிறது.
இதற்கிடையில், பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். தேசத்தின் நலன் கருதி வசதி படைத்தவர்கள் அவர்களாகவே முன்வந்து மானியம் பெறுவதை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அது. அமைச்சரின் கோரிக்கைக்கு இதுவரை இந்தியா முழுவதிலுமிருந்து 27,000 பயனாளிகள் இசைவு தந்திருக்கிறார்கள்.
இப்போது அமைச்சர் பிரதான் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதுதொடர்பாகக் கடிதம் எழுத இருப்பதாகக் கூறியிருக்கிறார். 776 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நிறுத்துவானேன்? இந்தியாவிலுள்ள 30 மாநில முதல்வர்கள், அவர்களது அமைச்சரவை சகாக்கள், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள், 4,896 சட்டப்பேரவை உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான சட்ட மேலவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அரசு சலுகையையோ, மானியத்தையோ எதிர்பார்க்காமல் சமையல் எரிவாயு உருளைகளை ஏன் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளக்கூடாது?
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டொன்றுக்கு 50,000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதாவது, நாளொன்றுக்கு 136 யூனிட்டுகள். ஆண்டொன்றுக்கு 1,50,000 தொலைபேசி அழைப்புகள் இலவசம். அதாவது, ஒரு மணி நேரத்திற்கு 16 அழைப்புகள். இதுதவிர, இன்னும் பல பல வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இத்தனைக்கும் பெருவாரியான, அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களில் 70% க்கும் அதிகமானவர்கள் அவர்களது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் சொத்து விவரப்படி கோடீஸ்வரர்கள்!
பொதுமக்களுக்குத் தரப்படும் மானியங்களைக் குறைப்பதில் முனைப்பு காட்டும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகளை குறைத்துக் கொண்டு முன்னுதாரணமாக இருப்பதை விட்டுவிட்டு ஏமாந்த பொதுஜனத்தை குறிவைக்கிறார்களே, இதற்குப் பெயர்தான் மக்களாட்சியோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோணம் பொறியியல் கல்லூரியில் பூட்டி சீல் வைப்பு: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சேவைக் குறைபாட்டால் தாய், குழந்தை உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் அபராதம்

திருநங்கையைத் திருமணம் செய்ததாக கிண்டல் செய்தவா் வெட்டிக் கொலை
ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

