நூடுல்ஸ் பாதுகாப்பற்ற உணவு என்று தடை செய்யப்பட்டது முதல், எல்லா உணவுப் பொருள்களின் மீதும் கவனம் செலுத்தப்படுகிறது. வெல்லம், தேயிலை, சமையல் எண்ணெய் என கலப்பட உணவுப் பொருள்களைக் கைப்பற்றி நடவடிக்கை எடுக்கும் செய்திகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில், மதுபானங்களின் தரத்தைக்கூட பரிசோதிக்க வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கில் மாநில அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது நீதிமன்றம். ஆனால், இதை எல்லாவற்றையும்விட உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று எது என்றால் அது குடிநீர்!
2001 ஏப்ரல் முதல் குடிநீர்த் தொழிலானது இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (பிஐஎஸ்) அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டு, உணவுப் பொருள் கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ், "போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்' என்பது "உணவு' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
1994-95ஆம் ஆண்டு போத்தல் குடிநீர் 850 கோடி பெட்டிகள் (ஒரு பெட்டிக்கு 24 போத்தல்) என்றால், 2006-07இல் 12,200 கோடி பெட்டிகளாக உயர்ந்து, தற்போது சுமார் 27,500 கோடி பெட்டிகள் விற்பனையாகின்றன என்று வணிகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அனுமதி பெற்றும், பெறாமலும் புழங்கும் குடிநீர் போத்தல் அளவு இதைவிட இரு மடங்காக இருக்கக் கூடும்.
ஒரு லிட்டர் போத்தல் குடிநீர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் "அம்மா' குடிநீர் மட்டும்தான் ரூ.10-க்கு கிடைக்கிறது. போத்தல் குடிநீருக்கான சுத்திகரிப்புச் செலவு ரூ.1.50 முதல் ரூ.2 வரை. போத்தலுக்கான செலவு ரூ.3 முதல் ரூ.3.50 வரை. மற்ற செலவுகள் அனைத்தும் விற்பனை கமிஷன், விளம்பரம், தொழிலாளர் ஊதியம், போக்குவரத்து ஆகியவற்றுக்கானது. அப்படியே எடுத்துக்கொண்டாலும் போத்தல் குடிநீரை இரட்டிப்பு விலைக்கு விற்று தயாரிப்பாளர்கள் லாபம் பார்க்கிறார்கள்.
நிலத்திலிருந்து உறிஞ்சி எடுக்கும் நீருக்கு எந்தவிதமான கட்டுப்பாடும், கட்டணமும் இல்லை. எத்தனை ஆயிரம் லிட்டர் போத்தல் குடிநீர் விற்பனை செய்கிறார்களோ அதே அளவுக்கான நிலத்தடி நீருக்காக உள்ளாட்சிக் கட்டணம் எதுவும் அவர்கள் செலுத்துவதில்லை. தோராயமாக மிகக் குறைந்த கட்டணத்தையே செலுத்துகின்றனர். இந்த நிறுவனங்கள் இலவசமாகவே நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன என்பதுதான் உண்மை.
அரை லிட்டர் பால் ரூ.22. ஆனால், ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.20. தண்ணீரை ஏறக்குறைய இலவசமாக உறிஞ்சியெடுத்து, பெயரளவில் சுத்திகரிப்பு செய்து விற்போரே இன்று அதிகமாக இருக்கின்றனர்.
இந்தியாவில் போத்தல் குடிநீர் உற்பத்தி பிரீமியம் நேச்சுரல் மினரல் வாட்டர், நேச்சுரல் மினரல் வாட்டர், பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் என்று மூன்று தரமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள நிறுவனங்கள் அனைத்துமே பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் என்கிற போத்தல் குடிநீர் விற்பனைக்குத்தான் உரிமம் பெற்றவை. போத்தல் குடிநீர் உணவு வகைப்பாட்டில் அடங்குவதால், இதன் தரம், இதில் இருக்க வேண்டிய பிஎச் (அமிலத்தன்மையை மதிப்பிடும் அளவு), பாக்டீரியாக்கள், கலந்துள்ள வேறு பொருள்கள் என எல்லாவற்றுக்கும் அளவை நிர்ணயித்திருக்கிறது இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம். ஆனால், சந்தையில் விற்பனையாகும் போத்தல் குடிநீர் முறையாகச் சோதிக்கப்படுகிறதா என்றால் கிடையாது.
கடந்த சில ஆண்டுகளாக வீடுகள், அலுவலகங்களுக்குத் தரப்படும் 20 லிட்டர் கேன் விற்பனை, போத்தல் குடிநீர் விற்பனையைவிடக் கூடுதலாகவும் லாபகரமாகவும் இருக்கிறது. இதன் விற்பனை ஆண்டுதோறும் 20% அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. 20 லிட்டர் கேன் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் உள்ளூர் நிறுவனங்கள் அரசியல் பின்னணி கொண்டவை. இவற்றின் தரம் முறையாகச் சோதிக்கப்படுவதில்லை. அவற்றை சுத்திகரிக்கப்பட்ட குடிநீராகக் கருதிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
வசதியுள்ள சில நிறுவனங்கள், சில கல்வி வளாகங்களும்கூட, தங்களுக்கான நீர் சுத்திகரிப்பு ஆலையை சிறிய அளவில் அமைத்து, தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்கின்றன. அவர்களும்கூட இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதியோடுதான் உற்பத்தி செய்தாக வேண்டும்.
இவை போதாதென்று, வீடுகளுக்கான மிகச் சிறிய அளவு குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகள் சுமார் 20-க்கும் மேற்பட்ட வணிக இலச்சினையுடன் சந்தையில் உள்ளன. இவற்றின் தொழில் வளர்ச்சியும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தச் சுத்திகரிப்புக் கருவிகளின் தொழில்நுட்பம் நிறுவனத்துக்கு நிறுவனம் வேறுபடுகிறது. இவை எத்தகைய வேதிப் பொருளால் ஆனவை, இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி, குடிநீர் அருந்தினால் உடலுக்கு என்ன தீங்கு ஏற்படும் என்பது குறித்த எந்தவிதமான தெளிவான ஆய்வுகளும் இல்லை.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று விற்பனை செய்யப்படும் இவை தூய்மையானவைதானா? இவற்றைத் தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் வேதிப் பொருள் என்ன? அதன் எச்சங்களுடன் அருந்தப்படும் நீரால் மனித உடலுக்கு என்ன பாதிப்பு? இது பாதுகாப்பான குடிநீர்தானா என்பதைக் கண்டறிவதில் எந்த அளவுக்கு உணவுக் கலப்படத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கவனம் செலுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறி. அதற்கு போதுமான ஆள் பலம், உணவுக் கலப்படத் தடுப்புப் பிரிவுக்கு இருக்கிறதா என்பதும் சந்தேகம்.
தவித்த வாய்க்குத் தண்ணீர் என்பதெல்லாம் பழங்கதை. பணம் கொடுத்தாலும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என்பதுதான் இன்றைய நிஜ நிலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண் ரயில் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை! மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்: பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!
காஜிப்பூர் பாலியல் வன்கொடுமை: விசாரணை கோரி ராகுல் வலியுறுத்தல்!

புலி வந்துவிட்டது... தில்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்த மிட்செல் ஸ்டார்க்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

