மதம் சார்ந்தது அல்ல யோகா!

ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
2 min read

ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. சபையில் 2014 செப்டம்பர் 27-ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்றியபோது, இந்தியத் தொன்மை மரபின் வழி உலகுக்குக் கிடைத்துள்ள பரிசு யோகா என்று குறிப்பிட்டு, யோகாசனம் மனிதனையும் இயற்கையையும் பிணைக்கிறது என்று அதன் பெருமையை எடுத்துரைத்தார். அதன் பிறகு, சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட 2014 டிசம்பரில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு 170 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
 இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, ஐ.நா. சபை இத்தகைய அறிவிப்பை செய்திருப்பதைக் கொண்டாடும் வகையில் புது தில்லியில் மிகப் பெரும் அளவில், சுமார் 35,000 பேர் ஒரே இடத்தில் கூடி யோகாசனம் செய்யப் போவதாக பிரதமர் மோடி அறிவித்து, அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன.
 ஜூன் 21-ஆம் தேதி புது தில்லியில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியிலும், நாடு முழுவதிலும் அந்த நாளில் நடத்தப்படவுள்ள யோகா நிகழ்வுகளிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனையாக மாறப் போகிறது. இந்த 35 நிமிட யோகாசன நிகழ்வில் இடம்பெற இருந்த சூரிய நமஸ்காரத்தை சிறுபான்மையினர் மீதான திணிப்பாகக் கூறி, பிரச்னையைப் பெரிதுபடுத்த முற்பட்டிருக்கிறார்கள்.
 யோகா ஹிந்து மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டு முஸ்லிம் அமைப்புகள் சிலவும், தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் அமைப்புகள் சிலவும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. சில பா.ஜ.க. பிரமுகர்களின் பொறுப்பற்ற, அதிகப்பிரசங்கித்தனமான பேச்சுகள் பிரச்னையைப் மேலும் பெரிதுபடுத்திவிட்டிருக்கிறது.
 சூரிய நமஸ்காரம் என்ற வார்த்தைதான் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் ஆட்சேபத்துக்குக் காரணம். இந்த ஆட்சேபத்தை அவர்கள் ஏற்கும் வகையில் விளக்க வேண்டியதை விடுத்து, சூரியனைப் பிடிக்காதவர்கள் சூரிய ஒளி படாத கடலுக்குள் ஒளிந்து கொள்ளட்டும் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் யோகி ஆதித்யநாத்தின் பொறுப்பற்ற பேச்சால், இப்போது சர்வதேச யோகா தினத்தன்று சூரிய நமஸ்காரம் தவிர்க்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
 ஏற்கெனவே நரேந்திர மோடியின் வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாமலும், பிரதமராக ஏற்றுக்கொள்ள முடியாமலும், அவருக்கு எதிராகப் பிரச்னையைக் கிளப்புவதற்குக் காரணம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த விவகாரம் வசதியாகப் போய்விட்டது. இந்தியாவின் மிகப் பெரிய பாரம்பரிய, பண்பாட்டுப் பெருமையை அது ஏதோ ஹிந்து மத நம்பிக்கை என்பது போல மாற்ற முற்பட்டிருப்பது மிகப் பெரிய துரதிருஷ்டம்.
 சூரிய நமஸ்காரம் என்பது பல்வேறு யோகாசனங்களின் 12 நிலைகள். இதைச் செய்பவர்கள் சூரியனை வழிபட்டாக வேண்டும் அல்லது வழிபாடு செய்பவர்களாக இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் கிடையாது. சூரிய நமஸ்காரம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, பணிதல் என்ற தலைப்பிட்டாலும் அதற்குப் பொருந்தும். ஏனென்றால், இந்த 12 நிலைகளும் ஒருவர் நின்ற நிலையிலிருந்து படிப்படியாகத் தரையில் விழுந்து, மீண்டும் எழுந்து நிற்கும் நிலைக்குத் திரும்புவதே. சூரிய நமஸ்காரம் என்பது ஹிந்து மத அடையாளமாகப் பார்க்கப்பட்டதால், இதை ஜூன் 21-ஆம் தேதி நிகழ்ச்சி நிரலிலிருந்து நீக்கிவிட்டார்கள். விருப்பமில்லாதவர்கள் பங்கேற்கத் தேவையில்லை என்ற அறிவிப்பும் செய்தாகிவிட்டது.
 யோகாசனம் வெறும் உடற்பயிற்சி என்பதே தவறு. உடற்பயிற்சி வெறும் தசைகளுக்கு மட்டுமே ஊக்கம் தரும். இதைச் செய்ய பல்லாயிரம் உடற்பயிற்சி மையங்கள் (ஃபிட்னெஸ் சென்டர்) உள்ளன. தசைகளை விரும்பியபடி யோகா மாற்றாது. நரம்பு மண்டலம், மூச்சு, மனம் இவற்றைச் சார்ந்ததாக யோகா இருக்கிறது. ஆகவேதான், உலகம் முழுவதிலும், மனஒருமைப்பாடு (கான்சென்ட்ரேஷன்) வேண்டுவோர் யோகாவைத் தேர்வு செய்கின்றனர். உலகம் முழுவதும் மதம் கடந்த ஒன்றாகவே யோகா பயிலப்படுகிறது. யோக என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு இணைதல், (உடலும் மனமும்) ஒன்றுபடல் என்று பொருள்.
 யோகாசனத்துக்கு இணையாக, மனம் மற்றும் உடலின் மின்காந்த மண்டலத்தை சமநிலை செய்யும் உடற்பயிற்சியாகவும், மன ஒருமைப்பாட்டுக்கு அடிப்படையாகவும் சீனர்களின் தாய்ச்-சி (TAI CHI)) உலகம் முழுவதும் பயிலப்படுகிறது. பௌத்தத் துறவிகள் சென்ற நாடுகள் அனைத்திலும் தாய்ச்-சி நடைமுறையில் உள்ளது. அதனை பௌத்த மதத்துடன் யாரும் தொடர்புபடுத்துவதில்லை.
 யோகாவை இந்தியாவுடையது என்று பார்க்காமல் ஹிந்து மதத்தைச் சார்ந்தது என்று கருதுவது மதச்சார்பின்மையின் வெளிப்பாடல்ல; மதத்தை மீறி சிந்திக்க முடியாததன் குறைபாடு. யோகா, தியானம், பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆயுர்வேதம் ஆகியவற்றை இந்தியப் பண்பாடும் நமது முன்னோர்களும் உலகுக்கு அளித்திருக்கும் கொடையாகக் கருதி ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, குறுகிய மதக் கண்ணோட்டத்துடன் அணுக முற்படுவது சரியல்ல.
 உலகளாவிய அளவில் இன்று யோகா ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு சில நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகளில் ஆயிரக்கணக்கான யோகா மையங்கள் செயல்படுகின்றன. கற்றுக் கொள்பவர்களில் பெரும்பாலோர் ஹிந்து மதத்தினர் அல்ல. சில ஆசனங்களின் தொகுப்புக்கு சூரிய நமஸ்காரம் என்ற பெயரிடப்பட்டதாலேயே அது ஹிந்து மதம் சார்ந்ததாக முடியாது. யோகாசனம் ஹிந்து மதத்துக்குச் சொந்தமல்ல. இந்தியாவுக்குச் சொந்தமானது. யோகா உடல்-மனம் சார்ந்தது. மதம் சார்ந்தது அல்ல!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com