சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.6,000 கோடி வட்டியில்லாக் கடன் அளிப்பதென மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது முழுக்க முழுக்க கரும்பு விவசாயிகளுக்குத் தரப்படாமல் உள்ள நிலுவைத் தொகைக்காக மட்டுமே!
÷இந்தத் தொகையை சர்க்கரை ஆலைகள் வேறு இனங்களுக்குச் செலவிடும் என்கிற விவசாய அமைப்புகளின் அச்சம் அடிப்படை இல்லாதது. இந்தத் தொகை நேரடியாகக் கரும்பு விவசாயியின் ஜன் தன் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
÷ஆனால், இந்த அறிவிப்பால் அனைத்து விவசாயிகளும் பயன் அடைவார்களா என்றால், அது சாத்தியமில்லை. ஏனென்றால், இந்தியாவில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளுக்கு அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ள நிலுவைத் தொகையின் அளவு ரூ.21,000 கோடி.
÷மேலும், மத்திய அரசின் நிபந்தனைப்படி, ஜூன் 30-க்குள் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையில் 50% வழங்கியுள்ள சர்க்கரை ஆலைகளுக்கு மட்டுமே மத்திய அரசின் இந்த நிதியுதவி கிடைக்கும். மற்ற ஆலைகளுக்குக் கிடைக்காது. ஆக, அனைத்து ஆலைகளுக்கும் இந்த ரூ.6,000 கோடியில் இருந்து நிதியுதவி கிடைக்காது என்பதால், அனைத்துக் கரும்பு விவசாயிகளுக்கும் இந்த நிதியுதவி பயனளிக்காது.
÷தற்போது, மத்திய அரசு வழங்கும் வட்டியில்லாக் கடன் என்பதற்குப் பொருள் என்ன? இந்த ரூ.6,000 கோடிக்கு ஓராண்டு வட்டித் தொகை ரூ.600 கோடியை அரசே ஏற்கும் என்பதுதான். இதேபோன்று, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் மத்திய அரசு ரூ.6,600 கோடி வட்டியில்லாக் கடன் வழங்கியது.
÷சர்க்கரை ஆலைகள் ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது ஒரு குறை சொல்வதும் மத்திய அரசும் அவர்களுக்கு ஆதரவாகச் சில சலுகைகள் அறிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. சில ஆண்டுகளில் ஏற்றுமதி வரிக் குறைப்பில் சலுகை கிடைக்கும். சில ஆண்டுகளில் வட்டியில்லாக் கடன். சில ஆண்டுகளில் இந்த ஆலைகளில் தேங்கிக் கிடக்கும் சர்க்கரையை மத்திய அரசு சந்தை விலையில் கொள்முதல் செய்ய ஆவன செய்யும். இப்படியாக சர்க்கரை ஆலைகளின் கோரிக்கைகளை ஏதாவது ஒருவகையில் நிறைவேற்றுவது மத்திய அரசின் வழக்கமாகிவிட்டது.
÷நிகழாண்டில் மத்திய அரசு கரும்புக்கு நிர்ணயித்த விலை ஒரு டன்னுக்கு ரூ.2,350. இதற்கு மேலும் கூடுதலாக மாநில அரசுகள் ஆதரவு விலை தருகின்றன. இதில் மிக அதிகமாக ஆதரவு விலை தரும் மாநிலம் உத்தரப் பிரதேசம். தமிழ்நாட்டைப் பொருத்தவரை ரூ.300 (டன்னுக்கு) நிர்ணயிக்கப்பட்டது. இது தவிர, லாரி வாடகை தருவதாக சர்க்கரை ஆலைகள் கூறுகின்றன.
÷இவ்வாறு அறிவிக்கப்பட்ட தொகையில் மத்திய அரசு அறிவித்த கரும்பு விலை மட்டுமே விவசாயிகளுக்கு உடனடியாக அளிக்கப்படுகிறது. இதிலும்கூட ஒவ்வோர் ஆலையும் ஒருவிதக் காரணத்தைக் கூறி, சில நூறு ரூபாயைப் பிடித்தம் செய்துவிடுகின்றன. மாநில அரசுகள் அறிவித்த கூடுதல் ஆதரவு விலையை வழங்காமல் நிலுவையில் வைக்கின்றன. மாநில அரசு வழங்கவில்லை என்று சில நேரம் சொல்வார்கள். மாநில அரசு வழங்கியிருந்தால் சந்தையில் சர்க்கரை விலை குறைந்து நட்டம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்வார்கள். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, இந்த சிறு தொகையை ஒவ்வொரு விவசாயிக்கும் நிறுத்தி வைப்பார்கள். இதன் அளவுதான் இன்று ரூ.21,000 கோடி!
÷இந்தியாவில் சுமார் 600 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 2.8 கோடி டன் சர்க்கரை உற்பத்தியாகிறது. இந்தியாவின் உள்நாட்டுத் தேவை சுமார் 2.4 கோடி டன். இவர்களது உற்பத்தியில் குறிப்பிட்ட பகுதியை அரசு நிர்ணயிக்கும் விலையில் அரசுக்கு கொடுக்க வேண்டும். இந்த சர்க்கரை பொது விநியோகத்துக்குச் செல்கிறது. மீதமுள்ள சர்க்கரையை இவர்கள் பொதுச் சந்தையில் விற்றுக் கொள்ளலாம்.
÷ஒவ்வொரு மாதமும் ஒவ்வோர் ஆலையும் எந்த அளவுக்கு சர்க்கரையைப் பொதுச் சந்தையில் விற்கலாம் என்கிற நிபந்தனைகள் முன்பு இருந்தன. ரங்கராஜன் குழு பரிந்துரைக்குப் பின்னர் இந்த நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுவிட்டன. இறக்குமதி சர்க்கரைக்கு சுங்க வரியை உயர்த்தியிருக்கிறார்கள். இந்த நிலையில், பொதுச் சந்தையில் சர்க்கரையை விற்று, காசாக்க சர்க்கரை ஆலைகளுக்குத் தடை ஏதும் இல்லை. ஒவ்வோர் ஆலையும் இருப்பில் உள்ள சர்க்கரையைப் பொதுச் சந்தையில் விற்றுக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையைக் கொடுத்தால் என்ன என்று உச்சநீதிமன்றம் கூடக் கேள்வி எழுப்பியது.
ஆனால், சர்க்கரை ஆலைகள் பொதுச் சந்தையில் தங்களுக்கு ஏற்புடைய விலை கிடைக்கும் வரை சர்க்கரையை விற்காமல் தேக்கி வைக்கின்றன. அது ஒரு வியாபார உத்தி. வேண்டுமானால் அரசே பொதுச் சந்தை விலைக்கு எடுத்துக் கொள்ளட்டுமே என்று பதில் கோரிக்கையும் வைக்கின்றன சர்க்கரை ஆலைகள். கரும்பு விவசாயிக்கு பாக்கி வைத்துள்ள ஆலைகள் நட்டத்தில் இயங்குவதாகப் பொருளா என்றால் அப்படியும் இல்லை.
÷கரும்புப் பிழிவின்போது, 30 விதமான துணைப் பொருள்கள் கிடைக்கின்றன. ஒரு டன் கரும்பு பிழியப்பட்டால், 100 கிலோ சர்க்கரை கிடைக்கிறது. அதன் சக்கை மூலம் 150 யூனிட் மின்சாரம் கிடைக்கிறது. 35 லிட்டர் எரிசாராயம் (ஆல்கஹால்) கிடைக்கிறது. மொத்தத்தில் ஒரு டன் கரும்புப் பிழிவில் ரூ.30,000 மதிப்புள்ள பொருள்கள் கிடைக்கின்றன.
÷வெறும் எரிசாராய விற்பனையில் 75:25 (விவசாயிக்கு கால் பங்கு தொகை) அளித்தாலும் விவசாயி மகிழ்ச்சி அடைவான். விவசாயி அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே சர்க்கரை ஆலைகளின் செல்வத்தைத் தேய்க்கும் படை. இதை ஏன் சர்க்கரை ஆலை அதிபர்கள் உணர்வதில்லை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.