மாற்றம் அவசியம்!
இந்திய ரயில்வே புனரமைப்புக்காக விவேக் தேவ்ராய் தலைமையிலான குழு தனது அறிக்கையை அளித்த நாள் முதலாகவே ரயில்வே பணியாளர், ஊழியர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ரயில்வே துறையைத் தனியார்மயமாக்கும் இந்த அறிக்கையை மத்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கை.
ரயில்வே பணியாளர்களை நியமனம் செய்யும் எட்டு விதமான பிரிவுகளைக் களைந்துவிட்டு, "ரயில்வே தொழில்நுட்பப் பிரிவு', "ரயில் இயக்கும் பிரிவு' என இரண்டாகப் பிரித்து பணி நியமனத்தைத் தகுதி அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். தற்போது ஊழியர்களுக்குள்ள பொறுப்புகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பதும் தேவ்ராய் குழுவின் பரிந்துரைகளில் சில.
ரயில்வேயின் சி, டி பிரிவுகளில் மட்டும் அடுத்த நான்கு ஆண்டுகளில் 2.25 லட்சம் ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர். இந்த நேரத்தில் டெக்னிக்கல், லாஜிஸ்டிக் என்று இரு பிரிவுகளில் வேலை நியமனத் தேர்வு நடத்தி ஆள்களைத் தேர்வு செய்யச் சொல்வதும், ரயில்வே அமைச்சகத்திடமிருந்து ரயில்வேயை பிரித்து அரசியலுக்கு அப்பாற்பட்டதாக அதை மாற்றப் பரிந்துரைப்பதும் தொழிற்சங்கங்களைக் கோபப்படுத்தி இருக்கிறது.
விவேக் தேவ்ராய் குழு அறிவித்துள்ள பரிந்துரைகள் அனைத்தையும் மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றாலும், அந்தக் குழுவின் அறிக்கையின் பெரும் பகுதியை அப்படியே நிறைவேற்றினால் மட்டுமே ரயில்வே பிழைக்கும் என்பதுதான் கசப்பான உண்மை.
"தெற்கு ரயில்வே போன்று இந்தியாவில் 16 ரயில்வே மண்டலங்கள் உள்ளன. இவற்றை ஏன் புது தில்லியிலிருந்து ரயில்வே அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்? ஒவ்வொரு மண்டலத்துக்கும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொடுங்கள். ரயில் சேவை, வருவாய் குறித்து அவர்களே முடிவெடுக்கட்டும்' என்கிறது குழு.
ரயில்வே பட்ஜெட் தேவையில்லை என்கிறது இக்குழு. எம்.பி.க்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரயில்களை வருவாய் இல்லாத வழித்தடத்தில் விடுவதும், எதிர்க்கட்சிகளைத் திருப்திப்படுத்த பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்கவுமான அரசியல்தன்மை தேவையில்லை. இந்திய ரயில்வே ஒழுங்காற்று ஆணையத்தை தன்னாட்சி அதிகாரத்துடன் அமைத்தால் போதும். ரயில்வே அமைச்சகம் கொள்கை முடிவு எடுக்கட்டும். ஆணையம் அதை அமல்படுத்தும் என்கிறது குழு.
ரயில் பவனிலிருந்து பிரித்து, ரயில்வே ஒழுங்காற்று ஆணையத்துக்கு அதிகாரம் சென்றுவிடுமானால், அந்த அமைச்சகத்துக்கு என்ன வேலை என்று கேட்டால், அந்த அமைச்சகமே தேவையில்லை, அதனை மத்திய போக்குவரத்துத் துறையுடன் இணைத்துவிடலாம் என்கிறார் விவேக் தேவ்ராய்.
ரயில்வே நிதியாதாரத்தில் 40 சதவீதத்தை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்குகிறது. இந்த நிதியானது மூலதனச் செலவாகப் பயன்படுத்த வழங்கப்படும் கடன். ஆனால், இதுதான் ரயில்வே வருவாய் ஏற்றத்தாழ்வுகளை ஈடு செய்கிறது. இது சரியல்ல. மத்திய அரசு கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்றால், மாறுபடும் கட்டணத்தை ரயில்வே துறைக்கு மானியமாக அளிக்கட்டுமே!
அதேபோன்று, புறநகர் ரயில்களையும் கட்டி அழாதீர்கள் என்கிறார். அவை மிகவும் குறைவான கட்டணத்தில் இயக்கப்படுகின்றன. அவற்றை அந்தந்த மாநில அரசும் ரயில்வே துறையும் கூட்டாக இயக்கலாம். இதன்மூலம், கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று மாநில அரசு விரும்பினால், மாறுபடும் தொகையை இருவருமே லாபத்தில் சமமாகக் கழித்துக் கொள்ளலாம் என்கிறார்.
அதேபோன்று, வரவு - செலவுக் கணக்கையும் தனித்தனியாக எழுத வேண்டும் என்கிறார். எந்தெந்த வழித்தடத்தில், திட்டத்தில் லாபம் கிடைத்தது அல்லது நட்டம் உண்டானது என்பதைத் தனியாகப் பிரித்துக் காட்ட வேண்டும். ஒட்டுமொத்தமாக கணக்கு எழுதக் கூடாது என்கிறது குழு.
ரயில்வே துறையை தனியார்மயம் ஆக்கவில்லை. தனியாரை அனுமதிக்கவே பரிந்துரைக்கிறோம் என்கிறது குழு. இதுவொன்றும் புதிதல்ல. "ஓன் யுவர் வேகன்' என்ற திட்டத்தை 1992}லேயே அறிமுகம் செய்தார்கள். "ஸ்பெஷல் ஃபிரைட் டிரெயின்' 2005-இல் அறிமுகமானது. "ஆட்டோமொபைல் ஃபிரைட் டிரெயின்' 2010-இல் அறிமுகமானது. ஆனால், இதற்கு தனியார் வரவில்லை. காரணம், ரயில் பாதையில் இவர்களது பெட்டிகள் செல்லும் நேரம் ஒதுக்குவதில் ரயில்வே முறையாகச் செயல்படவில்லை.
ரயில் பாதைக்கென தனியாக ஒரு பிரிவை உருவாக்கி, எந்தெந்த நேரத்தில் தனியார் ரயில், அது பயணிகள் ரயில் அல்லது சரக்கு ரயில் எதுவாக இருப்பினும், இயக்கப்படும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும். இதனால், ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்கிறது குழு. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.
புறநகர் ரயிலை எவ்வாறு மாநில அரசு பகிர்ந்து கொள்கிறதோ அதேபோல ஒவ்வொரு மாநிலத்திலும், பயணிகள் ரயிலையும் மாநில அரசு தனது சொந்தப் பொறுப்பில் இயக்க அனுமதித்தால் நல்லது. யாரோ ஒரு தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் மாநில அரசே நடத்துவது மேலானது. ரயில்வே மண்டலங்களையும்கூட மாநிலங்களுக்கு ஏற்ப பிரித்தால் இன்னும் நல்லதுதான். தனியார் பங்களிப்பைச் சேர்த்துக் கொள்வதிலும் தவறில்லை. மக்களின் தேவை தரமான சேவை, அவ்வளவே!
ரயில் சேவையிலும், நிர்வாகத்திலும் மாற்றமே கூடாது என்பது ஏற்புடையதல்ல. மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் ரயில்வேயின் சேவை மக்களின் நலனுக்காகத்தானே தவிர, ரயில்வே ஊழியர்
களின் நலனுக்கானதல்ல. இப்போதைய ரயில் சேவையில் குறைபாடுகள் மண்டிக் கிடக்கும் நிலையில் மாற்றங்களை முடக்க முயற்சிப்பதுதான் மக்கள் விரோதப் போக்கு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
