எங்கும் சுதந்திரம் என்பதே போச்சு!

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 என்பது இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய கரும்புள்ளி.
Updated on
2 min read

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 என்பது இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய கரும்புள்ளி. இந்தச் சட்டப்படி, ஒருவர் கணினி மூலமாகவோ, வேறு ஏதாவது தகவல் தொடர்புக் கருவி மூலமாகவோ இன்னொருவருக்கு மனவேதனை தரக்கூடிய செய்தியை அனுப்பினால், புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படவும், அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படவும் செய்யலாம்.

அந்தச் சட்டம் முந்தைய மன்மோகன் சிங் அரசால் மேலும் கடுமையாக்கப்பட்டு 2009-இல் சட்டப் பிரிவு 66(அ) என்பது சேர்க்கப்பட்டது. இதன்படி இணையதளம், மின்னஞ்சல், குறுஞ்செய்தி, முகநூல் போன்ற எந்தவொரு சமூக வலைதளத்தினாலும், ஒருவரை மனவேதனைப்படுத்துகிற, பாதிக்கிற, தர்மசங்கடம் ஏற்படுத்துகிற செய்தியோ, கருத்தோ வெளியிடப்பட்டால், புகாரின் அடிப்படையில் கைது செய்யும் அதிகாரம் காவல் துறைக்கு வழங்கப்பட்டது.

இந்தச் சட்டப் பிரிவின் அடிப்படையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கைதுகள் நிகழ்ந்தன. முகநூலில் கருத்துத் தெரிவித்ததற்காகவே கைது செய்யப்பட்டு, காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம். சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்படும் கருத்துகள், மனதைப் புண்படுத்துகின்றன, பாதிக்கின்றன என்கிற போர்வையில் குற்றம் பதிவு செய்யப்படலாம் என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.

சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே இறந்தபோது மும்பை நகரமே ஸ்தம்பித்தது. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதைப் பற்றியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் ஷஹின் தாதா, ரினு சீனிவாசன் என்ற மாணவிகள் இருவர் தங்களது முக

நூலில் கருத்துப் பரிமாறிக் கொண்டனர். மகாராஷ்டிர மாநிலம், தாணேயைச் சேர்ந்த அவர்கள் தங்கள் முகநூலில் பரிமாறிக்கொண்ட கருத்துகளின் அடிப்படையில் காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தபோது, தேசமே அதிர்ந்தது. அப்போதுதான் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-த்தின் பிரிவு 66(அ) எவ்வளவு பயங்கரமானது என்பது வெளியுலகுக்குத் தெரிந்தது.

இந்தச் சட்டப் பிரிவையும், சமூக வலைதளங்களில் தெரிவிக்கும் கருத்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எதிர்த்து ஒன்பது பேர் உச்சநீதிமன்றத்தை நாடினார்கள். ஷிரேயா சிங்கார் என்கிற சட்டக் கல்லூரி மாணவி தொடுத்த வழக்கில் திலிப்குமார், துளசிதாஸ் ஷா, தஸ்லிமா நஸ்ரேன், மனோஜ் ஆஸ்வால், எம்.கே அனூப் ஆகியோரும், காமன் காஸ், பீப்பிள்ஸ் யூனியன் பார் சிவில் லிபர்டீஸ், மெளத் ஷட் டாட் காம், இண்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் தங்களை இணைத்துக் கொண்டன. 2012-இல் இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது.

2009-இல் சட்டப் பிரிவு 66(அ) கொண்டு வரப்பட்டபோது, எதிர்க்கட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி அதை வன்மையாகக் கண்டித்தது. எதிர்த்துக் குரல் எழுப்பியது. இப்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நிலையில், இந்த விஷயத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிலைப்பாடு என்ன என்று பார்த்தால் திடுக்கிட வைக்கிறது. இணையதளக் குற்றங்களை எதிர்கொள்ள இந்தச் சட்டப் பிரிவு தேவைதான் என்கிற நிலைப்பாட்டை அரசு எடுத்திருப்பதுதான் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு இந்தப் பிரச்னையில் திறந்த மனதுடன் இருப்பதாகவும், நீதிமன்றம் வழங்கும் அறிவுரையின்படி புதிய வழிகாட்டுதலை உருவாக்க அரசு தயாராக இருப்பதாகவும் அரசின் தரப்பில் கூறப்பட்டது.

"இந்திய குற்றவியல் சட்டத்தைப்போல, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் 66(அ) பிரிவு எப்போது, எந்தெந்த வார்த்தைகளுக்காகக் கையாளப்பட வேண்டும் என்கிற தெளிவான வழிமுறை காணப்படவில்லை. ஒருவருக்கு எரிச்சலூட்டுகிறது என்கிற காரணத்துக்காகக்கூட ஒருவர் கைது செய்யப்படலாம் என்றால், அது காவல் துறையின் கையில் கொடுக்கப்படும் வரம்பு மீறிய அதிகாரம். அதை காவல் துறையின் சாதாரண அதிகாரிகூட துஷ்பிரயோகம் செய்யலாம்' என்று வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செலமேஸ்வரும், எம்.ஏ. போப்டேயும் தெரிவித்தனர்.

காவல் துறை தலைமை இயக்குநர், காவல் துறை ஆணையர் நிலையிலுள்ள அதிகாரியின் உத்தரவு அல்லது அனுமதியுடன் மட்டுமே, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(அ) பிரிவின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்ய முடியும் என்று உத்தரவும் பிறப்பித்தனர்.

அண்மையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்தச் சட்டப் பிரிவு தனி மனிதப் பேச்சுரிமை, கருத்துரிமையைப் பாதிக்கும் என்கிற அச்சத்திற்காக அகற்றப்பட்டுவிடக் கூடாது. இணையதளக் குற்றங்களை எதிர்கொள்ள இந்தச் சட்டப் பிரிவு அவசியம்' என்று வாதிட்டிருப்பது மேலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது.

அரசியல் மேடைகளில் யார் வேண்டுமானாலும் அநாகரிகமாகவும் தரக்குறைவாகவும் பேச உரிமை இருக்கும்போது, முகநூலின் மூலமாகவோ, குறுஞ்செய்தி வழியாகவோ கருத்துப் பரிமாறிக்கொள்ள சுதந்திர நாட்டில் உரிமை இல்லை என்பது என்ன நியாயம்? விமர்சனங்களை வரவேற்பதும், கருத்துகளை விவாதத்தின் மூலம் எதிர்கொள்வதும்தான் ஜனநாயகம். ஜனநாயகத்தில் சட்டப் பிரிவு 66(அ)-க்கு இடமில்லை. இடமிருக்கக் கூடாது. அது அகற்றப்பட்டாக வேண்டும். அதற்காக, சுதந்திர உணர்வுள்ளவர்கள் குரலெழுப்பியாக வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com