அன்றாடம் அமளி; பல முறை அவை ஒத்திவைப்பு; அடிக்கடி கட்சிகள் வெளிநடப்பு - இத்தனைக்கும் இடையில் மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. பல முக்கியமான மசோதாக்கள் சட்டமாகி இருக்கின்றன. நிலம் கையக மசோதா, சரக்கு - சேவை வரி மசோதா ஆகிய இரண்டையும் இந்தக் கூட்டத் தொடரிலும் நிறைவேற்ற முடியவில்லை என்பதைத் தவிர, அவையின் அனைத்து நிரல்களும் செவ்வனே முடிக்கப்பட்டன.
கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்த்தாத சாதனையை இந்தக் கூட்டத் தொடரில் நிகழ்த்தியிருக்கிறோம் என்று அமைச்சர் வெங்கய்ய நாயுடு அவையின் கடைசி நாளில் கூறியதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்தக் கூட்டத் தொடரில் கடந்த நாற்பது ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த வங்கதேசம் - இந்திய நில எல்லை வரையறை மசோதா, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49% அனுமதிக்கும் மசோதா, சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று) திருத்த மசோதா, கம்பெனி சட்டங்கள் திருத்த மசோதா, கருப்புப் பணத் தடுப்பு மசோதா உள்ளிட்ட 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
÷பஞ்சாபில் ஓடும் பேருந்தில் தாயும், மகளும் பாலியல் தொல்லைக்கு ஆளானதும், அவர்களில் மகளான சிறுமி பேருந்துக்கு வெளியே தள்ளப்பட்டு இறந்ததும் ஏற்படுத்திய கோபம், நாடாளுமன்றத்தின் தொடக்கத்தில் மிகப் பெரும் நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. இருப்பினும், மெல்ல நாடாளுமன்றம் தன் இயல்பு நிலைக்குத் திரும்பி விவாதங்களை நடத்தத் தொடங்கியது. திட்டமிட்டபடி தாங்கள் பல மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை என்ற சூழ்நிலையில் கூட்டத் தொடரை 3 நாள்களுக்கு நீட்டிப்பு செய்து, நினைத்தபடி அனைத்து நிரல்களையும் நடத்திக் காட்டிவிட்டது அரசு.
÷மக்களவையில் எதிர்க்கட்சி தனது வாதத்தை முன்வைக்க விதி 193-ன் படி ஒரு முறையும், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர இரண்டு முறையும் அனுமதிக்கப்பட்டது. இதேபோன்று, மாநிலங்களவையில் 4 முறை கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரவும், விதி 176-ன் கீழ் விவாதிக்கவும் எதிர்க்கட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏதாவது ஒரு வகையில் தங்கள் கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் உணர்வு என்பதைப் புரிந்து கொண்டு, அவை எதிர்க்கருத்தாக இருந்தாலும் பேசிக் கொள்ளட்டும் என்று வாய்ப்பு தருவது நல்லதோர் அணுகுமுறை. இனி வரும் கூட்டத் தொடர்களிலும்கூட இதேபோன்ற அணுகுமுறையை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு தொடர வேண்டும்.
÷நிலம் கையக மசோதாவுக்கு காங்கிரஸ் மட்டுமன்றி, வேறு பல எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் கடுமையான எதிர்ப்பை முன்வைத்தன. இந்தச் சூழலில், ஆம்ஆத்மி கட்சி தில்லியில் நடத்திய பேரணியில் விவசாயி கஜேந்திர சிங் தற்கொலை செய்து கொண்டது நாடாளுமன்றத்தின் நேரத்தைப் பெருமளவு விழுங்கியதுடன், நிலம் கையக மசோதாவுக்கு பெரும் தடையாக அமைந்தது. இந்தத் தற்கொலைச் சம்பவம் நடைபெறாது இருந்திருப்பின், ஒருவேளை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டதைப் போல, இரு அவைகளையும் ஒன்றாக அமர்த்தி வாக்கெடுப்புக்கு விட்டிருப்பார்கள். ஆனால், நிலைமை சரியாக இல்லை என்பதால், நிலம் கையக மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
÷இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேறியிருக்க வேண்டிய மற்றொரு மசோதா மனை வணிக மசோதா. ஆனால், அதையும் மாநிலங்களவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. சரக்கு - சேவை வரி மசோதாவில் சில மாநிலங்களின் எதிர்ப்பு மட்டுமே இருந்தாலும், அந்தந்த மாநில முதல்வர்களை மீண்டும் அழைத்துப் பேசி, இதற்கு உடன்பாடான முடிவை மத்திய அரசு எடுக்கும் என்பது நிச்சயம்.
÷இதற்கிடையிலும், மத்திய அமைச்சரவை கூடி புதிய யூரியா கொள்கை, குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் போன்ற முக்கிய முடிவுகளையும் மேற்கொண்டுள்ளது. இவை அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.
÷நிலம் கையக மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாக அவசரச் சட்டம் கொண்டு வரும் குறுக்கு வழிகளை அரசு கையாளக் கூடாது. அவசரச் சட்டம் அளவுக்கதிகமாகக் கையாளப்படுவது மக்களாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்பதை நரேந்திர மோடி அரசு மறந்துவிடக் கூடாது.
÷பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸýம் மாறி மாறி, ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது ஒரு நிலைப்பாடும், எதிர்க்கட்சியாகும்போது நேரெதிர் நிலைப்பாடும் எடுப்பது வேதனைக்குரியது. பொருளாதாரக் கொள்கையில் ஏறத்தாழ ஒரே கொள்கையைக் கடைப்பிடிக்கும் கட்சிகள், எதிர்க்க வேண்டும் என்கிற அரசியல் காரணத்துக்காகப் பல மசோதாக்களை மாறி மாறி எதிர்த்து நிறைவேற்றவிடாமல் இருப்பது ஆரோக்கியமான அரசியல் அல்ல.
÷நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாடாளுமன்றத்தைப் பிரச்னை இல்லாமல் நடத்தும் பொறுப்பு, ஆளும்கட்சிக்குத்தானே தவிர எதிர்க்கட்சிக்கல்ல. எதிர்க்கட்சியினரை அரவணைத்து அல்லது எண்ணிக்கை பலத்தால் தோற்கடித்து எந்த வகையிலாவது மசோதாக்களை நிறைவேற்றி அவையை நடத்தும் பொறுப்பு அரசுடையதுதான். அந்த வகையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மத்திய அரசை முழு மூச்சுடன் எதிர்த்தபோதிலும்கூட நாடாளுமன்றத்தைப் பயனுள்ள வகையில் நடத்தி, இத்தனை மசோதாக்களை நிறைவேற்ற முடிந்திருப்பது அரசின் வெற்றி என்றுதான் குறிப்பிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.