பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானதில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களை 773 பேர் பிடித்துள்ளனர். இவர்களில் 41 பேர் முதலிடம். 192 பேர் இரண்டாம் இடம். 540 பேர் மூன்றாம் இடம். சாதனைகள் நிகழ்த்திய, தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ - மாணவியருக்கும் "தினமணி'யின் வாழ்த்துகள்.
1,164 அரசு உயர்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்திருப்பினும், சிறப்பிடம் பெற்ற 773 பேரில் அரசுப் பள்ளி மாணவர்கள் 19 பேர்தான். அரசுப் பள்ளிகளில் 4.53 லட்சம் பேரும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2 லட்சம் பேரும் தேர்வு எழுதினர். தனியார் பள்ளிகளில் 2.6 லட்சம் பேர் எழுதினர்.
அதுமட்டுமல்ல, இந்த 773 பேரும் தமிழை முதல் பாடமாக எடுத்துப் படித்தவர்கள் என்றாலும், இவர்களில் தமிழ் வழியில் படித்தவர்கள் 23 பேர் மட்டுமே. 19 அரசுப் பள்ளி மாணவர்களிலும்கூட, 5 பேர் மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்கள்.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மிக அதிகமான சம்பளத்தை மக்கள் வரிப் பணத்திலிருந்து வாரிக் கொடுத்து இலவசக் கல்வி தரப்படுகிறது. ஆனால், அங்கே போதிய அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில்லை என்பதை நேரடியாகப் பார்க்கும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். இதனால், அரசுப் பணம் வீணாகிறது. பள்ளி உள்கட்டமைப்பு பாழாகிறது.
தனியார் பள்ளிகளில் சேர்த்து, அவர்கள் சொல்லும் அபரிமிதமான கட்டணத்தை மக்கள் கொடுக்கிறார்கள். தனிநபர் வருமானத்தின் பெரும் பகுதியை கல்வி வணிகர்கள் பிடுங்குகிறார்கள். மக்கள் இரு வகையான இழப்புக்கு ஆளாகிறார்கள்.
அரசுப் பணமும், தனிநபர் வருவாயும் ஏற்படுத்தும் இழப்பு ஒருபுறம் இருக்க, தமிழ் வழிக் கல்வி மறைந்தொழிகிற, புறக்கணிக்கப்படுகிற அவலமும் உடன்நிகழ்வாக அமைகிறது. ஆங்கில வழிக் கல்வி மட்டுமே தரமானது என்கிற எண்ணத்தை மக்கள் மனதில் இது விதைக்கிறது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் என்பது முதல் மொழிப் பாடம் மட்டுமே! ஓர் இனம் தன் மொழிக்குச் செய்யும் பேரவலம் இதைவிட வேறொன்றும் இல்லை.
773 மாணவர்களில் ஆங்கில வழியில் பயின்ற 750 மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை குறித்து தனிப்பட்ட முறையில் ஒரு தேர்வு நடத்தினால், இவர்களில் பெரும்பாலானோர் அதில் தேர்ச்சி அடைவதுகூடச் சந்தேகமே. ஏனென்றால், பல பள்ளிகளும் பாடங்களை தமிழில் நடத்தி ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்து, விடைத்தாளில் ஓர் இயந்திரம் போலக் கொட்டித் தீர்க்கும் வல்லமையை உருவாக்குகின்றன. இந்த மாணவர்கள் ஆங்கில வழியில் படித்தாலும் இவர்களால் ஆங்கிலத்தில் எளிமையாக உரையாடவோ, பிழையின்றி எழுதுவதோ இயலாததாக, மேலும் தனிப் பயிற்சி தேவைப்படுவதாகவே இருக்கிறது.
தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகள் உருவாகும் முன்புவரை, எஸ்.எஸ்.எல்.சி. படிப்புவரை எல்லா மாணவர்களும் தமிழ் வழியில்தான் படித்தார்கள். அவர்கள் புகுமுக வகுப்பில் (பி.யு.சி.) சேரும்போது கல்லூரியில் முதல் மூன்று மாதங்களுக்கு விரிவுரையாளர்கள் ஆங்கிலத்தில் நடத்தும் பாடத்தைப் புரிந்து கொள்ளவும், மீட்டெழுதவும் இயலாமல் திணறவே செய்தனர். ஆனால், பெரும்பகுதியான மாணவர்கள் அந்த மொழித் தடையை இரண்டே மாதங்களில் வென்று, அடுத்தக் கட்டத்துக்கு நகர முடிந்தது.
மாணவர்கள் தட்டுத்தடுமாறித் தாங்களாகவே ஆங்கிலப் புலமைக்கு மாறியதை, இன்று ஜப்பான், ரஷியா, சீனா, கொரியா போன்ற நாடுகள், தங்கள் கல்லூரியில் சேருகின்ற அயல்நாட்டு மாணவர்களுக்காக முதல் 4 அல்லது 6 மாதங்களுக்கு அந்தப் பாடத் திட்டத்துக்கு தேவையான அடிப்படை மொழிப் பயிற்சி தந்து பிறகு பாடங்கள் நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டுக் கல்லூரிகளிலும் இந்த ஆங்கிலப் புலமைக்குத் தேவைப்படும் காலம் வெறும் 6 மாதங்கள்தான். வி.ஐ.டி. போன்ற தனியார் பல்கலைக்கழகங்கள் இத்தகைய துறை சார்ந்த ஆங்கிலப் பயிற்சி மற்றும் எண்ணப்பகிர்தல் ஆகியவற்றுக்காக ஆங்கிலப் பயிற்சிச் சாலை (இங்கிலீஷ் லேப்) வைத்துள்ளன. இங்கே மாணவர்கள் கணினி உதவியுடன் பிழையற்ற உரையாடல், ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்பு ஆகியவற்றை மிகச் சில நாள்களில் பழகிவிட முடிகிறது. விரைவுரையாளர், பேராசிரியர்களின் உரையாடலைப் புரிந்துகொள்ளவும் பதில் சொல்லவும் கேள்வி கேட்கவும் தயக்கம் இல்லா நிலையை உருவாக்குகிறது.
இந்த 6 மாதங்களில் கடந்துவிடக்கூடிய ஆங்கில அடிப்படை அறிவுச் சிக்கலுக்காக நாம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கில வழியில் குழந்தைகளைப் படிக்க வைத்து, அவர்கள் புரிந்துகொள்ளாமல் படிப்பது ஒருபுறம் இருக்க, இந்தப் பள்ளிகளின் பணப் பேராசைக்கும் நமது பெற்றோர் கொட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தேவை, மறு சிந்தனை...
தமிழ் வழிக் கல்வியில் மக்கள் ஆர்வம் கொள்ள வேண்டுமானால், தமிழ் வழியில் படித்து மாநிலத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 23 மாணவர்களை மட்டுமே அரசு பாராட்டிப் பரிசுகள் வழங்க வேண்டும். தாய்மொழியான தமிழ் வழியில் படித்தால்தான் பரிசும் பாராட்டும் என்கின்ற நிலை ஏற்பட வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் கற்கும் திறனும் படிக்கும் பாடத்தைப் பற்றிய முழுமையான புரிதலும் இருக்கும். மேல்படிப்புக்குச் செல்லும்போது அவர்கள் ஆங்கிலப் பயிற்சியும் சுலபமாகப் பெற்று முதன்மையானவர்களாக வாழ்க்கையில் உருவாக முடியும்.
அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதும், ஆசிரியர்கள் நியமனத்தில் திறமை மட்டுமே தகுதியாக இருப்பதும், உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டிய அணுகுமுறை. இனியும் காலம் தாழ்த்துவது தமிழ்ச் சமுதாயத்திற்கு செய்யும் துரோகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.