ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதை நமது ஆட்சியாளர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். இந்த விஷயத்தில் காங்கிரஸýம், பா.ஜ.க.வும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாகக் காட்சியளிக்கின்றன.
அதிகார வர்க்கமும் சரி, அரசியல் தலைமையும் சரி தங்களை எந்தெந்த விதத்தில் எல்லாம் குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியுமோ அதையெல்லாம் சட்டத்தின் துணையோடு செய்து கொள்கின்றன என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதா. கடந்த ஆண்டு மே மாதம் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கடைசிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் 2014-இல் (Whistleblower Protection Act - 2014),இப்போது பல திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் முந்தைய ஆட்சியில் முனைப்புக் காட்டிய அதே பா.ஜ.க. இப்போது ஆட்சியில் அமர்ந்ததும் அந்தச் சட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் திருத்தங்களைக் கொண்டுவர முற்பட்டிருப்பதுதான் வேதனை.
தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் நடைபெற்ற ஊழலைப்பற்றி பிரதமர் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தார் சத்யேந்திர துபே என்கிற நேர்மையான அதிகாரி. இந்த மெகா ஊழல் தன்னால் வெளிப்படுத்தப்பட்டது என்பது தெரிந்தால் தனது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றும், அதனால் தனது பெயரோ அடையாளமோ வெளியில் தெரியாமல் பிரதமர் அலுவலகம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சத்யேந்திர துபே வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அப்படியிருந்தும், பிரதமர் அலுவலகத்திலிருந்து அவர் பெயர் பாதுகாக்கப்படாமல் கசிய விடப்பட்டு விட்டது. அதன் விளைவாக, 2003-இல் சத்யேந்திர துபே, தங்க நாற்கரச் சாலைத் திட்ட ஊழல் பெருச்சாளிகளால் படுகொலை செய்யப்பட்டார். சத்யேந்திர துபேயின் மரணத்தைத் தொடர்ந்து எழுந்த நாடு தழுவிய ஊழலுக்கு எதிரான எழுச்சியும், இடித்துரைப்பாளராகத் திகழும் நேர்மையான அதிகாரிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் போதிய பாதுகாப்புத் தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கையும்தான் "இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்ட மசோதா 2014' என்று வடிவம் பெற்றது.
கடந்த 2014 மே மாதம் இந்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெற்றுவிட்டது. அதற்குள் தேர்தல் வந்து விட்டதால் அறிவிப்பு வெளியிடப்படவில்லை, அவ்வளவே. தேர்தல் முடிந்து நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவி ஏற்றும்கூட இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டம் 2014 நடைமுறைக்கு வராததற்குக் காரணம், அந்தச் சட்டத்தில் தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட சில திருத்தங்களை உள்ளடக்கித்தான் சட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்று அரசு பிடிவாதமாக இருப்பதுதான்.
கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இடித்துரைப்பாளர் பாதுகாப்பு திருத்தச் சட்ட மசோதாவின்படி, தேசியப் பாதுகாப்பு, அரசின் நிர்வாக ரகசியச் சட்டம் (Official Secrets Act) ஆகியவை தொடர்பான முறைகேடுகள் பற்றி இடித்துரைப்பாளர்கள் அரசுக்குத் தகவல் தெரிவிப்பது தடுக்கப்படுகிறது. அதுமட்டுமன்று, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறக்கூடியவை தொடர்பானவற்றின் மீது மட்டுமே இடித்துரைப்பாளர்கள் அரசுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றும், அதற்குத்தான் பாதுகாப்புக் கோர முடியும் என்றும் திருத்த மசோதா கூறுகிறது.
பொதுமக்களால் தகவல் பெற முடியாத, உயர்மட்ட ஊழல்கள், முறைகேடுகள் பற்றித் தங்களது மேலதிகாரிகளின் அதிகார வரம்பையும், பார்வையையும் கடந்து நேர்மையான அதிகாரிகள் அரசுக்குத் தகவல் தெரிவிக்க ஏதுவாகத்தான் இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டமே நிறைவேற்றப்பட்டது. அதிகார வர்க்கம், அரசியல் தலைமை, வியாபாரிகள் ஆகியோரின் வலிமையான கூட்டணிக்கு எதிராக, நேர்மையாளர்கள் முறைகேடுகளை வெளிக்கொணரவும், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கொண்டுவரப்பட்ட மசோதாவை இப்படி நீர்த்துப்போக வைப்பதைவிட நிறைவேற்றாமல் கைவிட்டு விடுவதுதான் மேல்.
மத்தியப் பிரதேச அரசில் நடந்த ஊழியர் பணி நியமனம் தொடர்பான தொழில் நெறித் தேர்வு வாரிய (வியாபாம்) முறைகேட்டில், அதை வெளிக்கொணர்ந்த இடித்துரைப்பாளர் பிரசாந்த் பாண்டேயின் குடும்பத்தினருக்குத் தரப்பட்டிருந்த பாதுகாப்பை தில்லி காவல் துறை திரும்பப் பெற்று விட்டிருக்கிறது. நரோடா பாட்டியா வழக்கில் 32 பேருக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி ஜோத்சானா யாக்னிக்குக்கு, கொலை மிரட்டல் இருக்கிறது என்பது தெரிந்தும் பாதுகாப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. அஸ்ராம் பாபு வழக்கில் பல முக்கிய சாட்சிகள் ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்யப்படுகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், முறைகேடுகளை வெளிச்சம்போட எந்த நேர்மையான அரசு அதிகாரிக்குத்தான் துணிவு வரும்? நல்லவேளையாக, மாநிலங்களவையில் அரசுக்குப் பெரும்பான்மை இல்லை. எதிர்கட்சிகள் இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதை அனுமதித்துவிடக் கூடாது. சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இந்தப் பிரச்னையை விவாதப் பொருளாக்கி மக்கள் மன்றத்தில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியாக வேண்டும்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தை முனை மழுங்கச் செய்யும் இடித்துரைப்பாளர் பாதுகாப்புச் சட்ட (திருத்தம்) மசோதா நிறைவேறக் கூடாது. அதை நிறைவேற்ற நாம் அனுமதிக்கக் கூடாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

