திட்டம் மூன்று; நோக்கம் ஒன்று!

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் சந்தைப் பொருளாதார அடிப்படைக் கொள்கையைக் கடைப்பிடிப்பவை என்றாலும்,
Updated on
2 min read

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் சந்தைப் பொருளாதார அடிப்படைக் கொள்கையைக் கடைப்பிடிப்பவை என்றாலும், சராசரி சாமானியக் குடிமகனின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன என்கிற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. அமெரிக்காவில் அரசால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்கள்தான், தனியார் பள்ளிகளைவிடச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதும், அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காத நிலையில்தான் அங்கே மக்கள் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள் என்பதும் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 கல்வி, சுகாதாரம், முதியோர் நலன், ஏழை, எளியோர் நலன் ஆகியவற்றுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கணிசமான நிதியை ஒதுக்குவதுடன், ஊழலோ, முறைகேடோ இல்லாமல் முறையாகச் செயல்படுவதையும் அந்த அரசுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவில்தான், தனியார்மயம், சந்தைப் பொருளாதாரம் என்றால் அத்தனை பொறுப்புகளையும் அரசு தட்டிக் கழிப்பது என்கிற தவறான புரிதல் காணப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சமீபத்தில் மூன்று அத்தியாவசியமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்க முடிவு.
 காப்பீடு, ஓய்வூதியம் தொடர்பான மூன்று சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது தொடர்பாகப் பரவலான வரவேற்பும், இவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகச் சிலருக்கு சந்தேகமும் எழுந்திருப்பது நியாயம்தான். மக்கள் நலத் திட்டம் எதுவாக இருந்தாலும் அதுபற்றி சந்தேகங்கள் எழுப்பப்படுவது புதிதல்ல. இந்தத் திட்டங்கள் எந்த அளவுக்கு அடித்தட்டு மக்களைப் போய்ச் சேரும் என்பதும், இந்தத் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது சாத்தியமா என்பதும்தான் எழுப்பப்படும் சந்தேகங்கள். ஆனால், இந்தத் திட்டங்களின் மூலம் சமச்சீரான வளர்ச்சியும் முன்னேற்றமும் உறுதிப்படும் என்கிற அளவில் நிச்சயமாக இவை வரவேற்புக்குரிய திட்டங்கள்தான்.
 இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) மதிப்பில் காப்பீட்டுத் துறையின் பங்களிப்பு தவணைத் தொகை அடிப்படையில் கணக்கிடும்போது, 2013 புள்ளிவிவரப்படி வெறும் 3.9% மட்டுமே. அந்த ஆண்டுக்கான உலக சராசரி பங்களிப்பு 6.3%. அதேபோல, ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்திருப்பவர்கள், இந்தியாவின் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வெறும் 11% மட்டுமே. எல்லா தரப்பினருக்கும், குறிப்பாக, குறைந்த வருவாய்ப் பிரிவினரும் பங்கு கொள்ளும் வகையில் சமூகப் பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
 பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்பது, ஆண்டுக்கு ரூ.330 மட்டுமே தவணைத் தொகையாக அளித்து 2 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம். வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 18 வயது முதல் 50 வயது வரையிலான யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
 அடுத்ததாக, பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்கிற திட்டத்தின்படி, ஆண்டுத் தவணைத் தொகையாக ரூ.12 கட்டினால் ரூ.2 லட்சத்துக்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. விபத்தில் மரணம் அல்லது உறுப்புகள் இழப்பு ஆகியவை இதன் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது. 18 வயது முதல் 70 வயது வரை வங்கிக் கணக்கு உள்ள யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
 அடல் பென்ஷன் யோஜனா என்பது இன்னொரு திட்டம். மறைந்த தலைவர்களின் பெயரைத் திட்டங்களுக்கு வைப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உயிருடன் இருக்கும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயி பெயரை இந்தத் திட்டத்துக்கு வைத்திருக்க வேண்டுமா என்று பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்கத் தோன்றுகிறது. ஆனாலும்கூடத் திட்டத்தின் மேன்மை கருதி அந்த நெருடலை மன்னித்து விடலாம்.
 அமைப்பு சாராத் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு என்று நல்லதொரு ஓய்வூதியத் திட்டம் இல்லாத நிலைமை இருந்து வருகிறது. இதற்கு முன்னால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2010-11இல் அறிமுகப்படுத்தப்பட்ட "ஸ்வாவலம்பன்' என்கிற ஓய்வூதியத் திட்டத்தில் 60 வயதுக்கு மேல் அந்தத் திட்டம் பயனளிக்காது.
 அடல் பென்ஷன் யோஜனா திட்டப்படி, 18 வயது முதல் 40 வயது வரையிலானவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். அவர்களது 60-ஆவது வயது முதல், அவர்கள் சேர்ந்து கொள்ளும் திட்டம், தவணைத் தொகை அடிப்படையில், ரூ.1,000}த்திலிருந்து ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறுவார்கள். அமைப்பு சாராத் தொழிலாளர்கள், தனியார் நிறுவனங்களில், துணிக் கடை, பாத்திரக் கடை போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் என்று அனைவருக்கும் பயன்படக் கூடிய ஓய்வூதியத் திட்டம் இது. இதற்கு முன்னால் "ஸ்வாவலம்பன்' திட்டத்தில் சேர்ந்திருப்பவர்கள் இந்தத் திட்டத்துக்கு மாறிக் கொள்ளவும் வழிகோலப்பட்டிருக்கிறது.
 முதல் ஏழு நாள்களில் இந்த மூன்று திட்டங்களிலுமாக ஏறத்தாழ 5 கோடிப் பேர் இணைந்திருக்கிறார்கள். இந்த மூன்று திட்டங்களும் வெற்றி பெறுமானால், அதாவது பெருவாரியான இந்தியர்களைப் போய் சேர்ந்து அவர்களை இணைத்துக் கொள்ளுமானால், சாமானியர்களுக்கும் அடிப்படைச் சமூகப் பாதுகாப்பை நாம் உறுதி செய்கிறோம் என்று பொருள். அரசின் நோக்கம் செயல்பாடாக மாறுவதில்தான் இதன் வெற்றி அடங்கி இருக்கிறது. இவை வெற்றி அடைந்தால்தான் இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு உறுதிப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com