பாரீஸ் நகரில் நடந்துள்ள பயங்கரவாதத் தாக்குதல் உலகம் முழுவதையும் உலுக்கியிருக்கிறது. அப்பாவி மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டுள்ள தாக்குதலைக் கண்டித்து, இத்தகைய வன்முறையைத் தொடரவிடக் கூடாது என்று எல்லா நாடுகளிலும் ஒருமித்தக் குரல் ஒலிக்கிறது. இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் 129 பேரின் உயிரிழப்பு அளித்துள்ள வேதனையின் வலியும் ஆற்றொணாது அழுத கண்ணீரும் நீங்க வெகு நாளாகும்.
இனிமேல் மத்திய ஆசிய அகதிகளை ஐரோப்பா அனுமதிக்குமா? ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே எந்தச் சோதனையும் இல்லாமல் பயணிக்கும் முறை தொடருமா? இன்னும் எத்தனை எத்தனை அப்பாவிகளின் உயிர்கள் பலியாகப் போகின்றன? - இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகளை எழுப்பி இருக்கிறது இந்தத் தாக்குதல். இதன் எதிரொலியாக, ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டால், எதிர் விளைவாக ஐரோப்பாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரிக்கக் கூடும்.
தற்போதைய பாரீஸ் படுகொலை மூலம், அல்-காய்தாவுக்கு அடுத்த நிலையில் இவர்கள்தான் ஆகப்பெரும் பயங்கரவாதிகள் என்பதை உலகுக்கு அப்பட்டமாக நிரூபித்துள்ள ஐ.எஸ். அமைப்பினர் உலக நாடுகள் அனைத்துக்கும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளனர். இந்தியாவில் பல இடங்களில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அல்லது அவர்களுடன் பேசியதாக சிலரை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், பாரீஸில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்டதைப் போன்று, இந்தியாவில்கூட ஐ.எஸ். தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பீதி அனைவர் மனதிலும் எழவே செய்கிறது.
பாரீஸ் நகரில் இசை அரங்கில் ராக் இசை கேட்டு மயங்கிய ரசிகர்கள் கூட்டத்துள் இந்தப் பயங்கரவாதிகள் நுழைந்து, ஏகே 47 துப்பாக்கியில் சுடுவார்கள் என்பதை யாரும் கனவிலும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இந்த இசையரங்கில் மட்டுமே அதிகபட்சமாக 87 பேர் இறந்துள்ளனர். இவர்களைப் பிணைக் கைதிகளாக்கிப் பேசிய ஒரு பயங்கரவாதி, "சிரியா விவகாரத்தில் பிரான்ஸ் அதிபர் தலையிட்டதற்குப் பதிலடிதான் இந்தத் தாக்குதல்' என்று ஒலிபெருக்கியில் பேசிய பிறகு சுடத் தொடங்கியிருக்கிறார்கள். நடந்து போனவர்கள் மீது, கால்பந்தாட்ட மைதானத்தில் என்று பொது இடங்களைக் குறி வைத்து, மக்கள் இனி இந்த இடங்களில் நடமாடத் தயங்கச் செய்யும் விதத்தில் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதலை பிரான்ஸ் அரசும், மக்களும், ஊடகங்களும் எதிர்கொண்ட விதம் மெச்சத் தகுந்தது. பொதுமக்கள் உள்பட அனைவரும் பொறுப்புணர்வுடன் சம்பவத்தை எதிர்கொண்டனர். பெரிய களேபரம், கூக்குரல், அழுகை எதுவும் இல்லை. ஊடகங்கள் இறந்தவர்களின் சடலங்களையும் அவலத்தையும் படம் பிடித்துப் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகள் அரசைக் குற்றம் கூறி அரசியல் ஆதாயம் தேடவில்லை. தேசத்துக்கு நேரிட்ட பேரிடரை தேச நலனை முன்னிறுத்தி எதிர்கொண்டார்கள்.
மெட்ரோ ரயில், வாகனங்கள் அனைத்தும் ஸ்தம்பித்துவிட்ட நிலைமை. பாரீஸ் நகர மக்கள் தங்கள் வீடுகளைத் திறந்துவிட்டு நடுத் தெருவில் தவித்த மக்களுக்கு அடைக்கலம் அளித்தனர். பயங்கரவாதிகள் நுழைந்து விடுவார்களோ என்கிற அச்சத்தில் கதவை மூடிக் கொள்ளவில்லை. இன்னும் மனிதாபிமானம் அழிந்துவிடவில்லை என்பதையும், பயங்கரவாதிகளால் பொது மக்களின் மனதை வென்றுவிட முடியாது என்பதையும் அது நிரூபித்தது.
ஐரோப்பாவிலேயே இஸ்லாம் மத நம்பிக்கையுள்ளவர்கள் அதிகம் வாழும் நாடு பிரான்ஸ்தான். இதற்கு முந்தைய பயங்கரவாதத் தாக்குதல்களும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களால்தான் நடத்தப்பட்டன. ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் போராடத் தங்களை இணைத்துக் கொண்ட ஐரோப்பிய இளைஞர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். பயங்கரவாதச் சிந்தனையால் மூளைச் சலவை செய்யப்பட்ட பிரான்ஸ் முஸ்லிம் இளைஞர்களால்தான் இந்தத் தாக்குதல் நடந்திருக்க வேண்டும் என்பதில் ஐயப்பாடே இல்லை.
சிரியாவைத் தாக்கிய "ஐ.எஸ். பயங்கரவாதிகள்' மீது பதிலடித் தாக்குதல் நடத்தியது என்பது ஒருபுறம் இருக்க, பிரான்ஸ் தன்னை இஸ்லாத்துக்கு எதிரான நாடாகக் காட்டிக்கொண்டதே இத்தகையத் தாக்குதலுக்குக் காரணம் என்று விளக்கம் சொல்வோரும் இருக்கிறார்கள். இதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணம், முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் பர்தா அணிவதற்கு பிரான்ஸ் தடை விதித்தது என்பதே. அதற்காக இப்படியொரு தாக்குதலா?
இந்தப் பயங்கரவாத அமைப்புக்கு பின்புலத்தில் யாரெல்லாம் நிதியுதவி அளிக்கிறார்கள் என்பது வளர்ச்சி அடைந்த நாடுகள் அனைத்துக்கும் தெரியும். உலக நாடுகள் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களும் இஸ்லாமிய நாடுகளும் இந்தப் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவிகள் அளிக்க முன்வரக் கூடாது. தங்கள் குழந்தைகள் இத்தகைய அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளாதபடி தடுப்பதும், கண்டித்து, பாதுகாப்பதும் உலக நன்மைக்கு செய்யும் உதவியாகக் கருத வேண்டும்.
இத்தாக்குதலை அனைத்து நாடுகளும் எதிர்ப்பதைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது ஐ.எஸ். அமைப்பு, இஸ்லாத்துக்கு ஆதரவானது அல்ல. இஸ்லாத்தின் அடிப்படை நோக்கத்துக்கு எதிரானது என்பதை முதலில் இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும், "பிஸ்மில்லா அல்-ரகுமான் அல்-ரஹீம்' (நிகரற்ற பேரருளாளனும் எல்லையற்ற கருணையாளனுமாகிய அல்லாவின் பெயரால்..) எனப் புரிதல் உள்ள இஸ்லாமியன் பயங்கரவாதியாக இருக்க முடியாது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.