தனது ஐக்கிய நாடுகள் சபை உரையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீண்டும் காஷ்மீர் பிரச்னையை எழுப்பி இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இது பாகிஸ்தான் வழக்கமாகக் கையாளும் உபாயம் என்பதும், இந்தியாவைக் குற்றம் சுமத்துவதன் மூலம், பயங்கரவாத உற்பத்தியின் ஊற்றுக்கண்ணாகத் தனது நாடு திகழ்வதை மறைக்க பாகிஸ்தான் பிரதமர் முயல்கிறார் என்பதும் உலகம் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் உண்மை.
இரு நாடுகளுக்கு இடையேயான உறவை சுமுகமாக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் முன்வைத்திருக்கும் நான்கு அம்ச யோசனையும்கூடப் புதிதோ, புதுமையானதோ அல்ல. சமாதானப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் எட்டப்பட வேண்டிய இலக்குகளாக அவற்றை எடுத்துக் கொள்ளலாமே தவிர, நிலைமையை சுமுகமாக்கும் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளாக அவை தோன்றவில்லை.
பாகிஸ்தானும் இந்தியாவும் 2003-இல் செய்து கொண்ட எல்லையோரப் பகுதியில் அமைதி காக்கும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது; இரு நாடுகளும் எந்தவிதமான அச்சுறுத்தல் அல்லது தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பது; காஷ்மீரத்தில் முழுமையாக ராணுவம் இல்லாத நிலையை இந்தியா ஏற்படுத்துவது; சியாச்சினிலிருந்து இரு தரப்பினரும் நிபந்தனைகளில்லாமல் தத்தம் படைகளை விலக்கிக் கொள்வது - இவைதான் நவாஸ் ஷெரீஃப் முன்வைத்திருக்கும் நான்கு ஆலோசனைகள்.
எல்லையோரப் பகுதியில் 2003 நிலைமையை உறுதிப்படுத்துவது என்பதைத் தவிர, ஏனைய மூன்று யோசனைகளும் பாகிஸ்தானின் நிலைப்பாட்டைப் பொருத்துக் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள். எல்லையோரத்தில் தாக்குதல், அச்சுறுத்தல் என்கிற வார்த்தைகள் பாகிஸ்தானுக்கு இந்தியா சொல்ல வேண்டியவையே தவிர, பாகிஸ்தான் அவற்றைக் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது.
அதேபோலத்தான், காஷ்மீரில் ராணுவம் முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும் என்கிற பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசனை. காஷ்மீரத்தில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் பாகிஸ்தானின் பிரதமர் இதைக் கூறுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இப்படி ஒரு யோசனையை முன்வைப்பதற்கு முன்னால், பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரப் பகுதியில் நடக்கும் அடக்குமுறைக்கும், வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
அந்தப் பகுதியில் நடந்தேறும் மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகள் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. சமீபத்தில் வெளியாகி இருக்கும் சில விடியோ காட்சிகள், பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரத்தில் அந்த அரசு எத்தகைய அடக்குமுறையைக் கையாள்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அங்கிருக்கும் காஷ்மீர இளைஞர்களை பாகிஸ்தானிய ராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு ஊடுருவ ஊக்குவிப்பதை உறுதிப்படுத்துகின்றன.
காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியிலிருந்து இந்துக்களான பண்டிட்டுகள் முழுமையாக விரட்டி அடிக்கப்பட்டு, சொந்த நாட்டிலேயே சொத்து சுகத்தை இழந்து அகதிகளாக இருக்கும் நிலை பற்றி நாம் யாரும் பேசுவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த நிலையிலும்கூட, இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து யாரையும் நாம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் குடியேற அனுமதிப்பதில்லை என்பது மட்டுமல்ல, சட்டப்படி குடியேறவும் முடியாது. அதுவல்ல, பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீரத்தின் நிலைமை.
பாகிஸ்தானில் பஞ்சாப் பகுதியிலிருந்து பெருமளவில் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியில் குடியேற்றம் ஊக்குவிக்கப்படுகிறது. இன்னும் பத்து ஆண்டுகளில் ஆக்கிரமிப்புக் காஷ்மீரப் பகுதியில் ஏறத்தாழ 35%க்கும் மேல் பாகிஸ்தானிய பஞ்சாபிகள் குடியேறிவிட்டிருப்பார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அவர்களும் முஸ்லிம்கள் என்பதால் அந்தக் குடியேற்றம் வெளிப்படையாகத் தெரியவில்லை என்றாலும், இந்தியாவில் காஷ்மீரிகள் தங்களுக்கு என்று தங்கள் மொழி பேசும் காஷ்மீரத்தில் வசிப்பதுபோல, ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் வாழ முடியாது. இதுபற்றிக் கேள்வி கேட்கக் காஷ்மீர பயங்கரவாத, பிரிவினைவாத இயக்கங்களும் தயாராக இல்லை.
நவாஸ் ஷெரீஃப் குறிப்பிடுவதுபோல, 2003-இல் இருந்த எல்லைப்புற நிலைமை மறுபடியும் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 2003-இல் பிரதமர் வாஜ்பாயியும் அதிபர் முஷாரபும் சந்தித்து அமைதிக்கு வழிகோல முற்படுவதற்கு முன்னால், அவ்வப்போது எல்லைப்புறத்தில் நடக்கும் தாக்குதலின் விளைவாக ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான படை வீரர்களை இரண்டு நாடுகளும் இழந்து கொண்டிருந்தன.
படை வீரர்கள் மட்டுமல்ல, எல்லைப்புறத்தில் வாழ்ந்து வந்த பொதுமக்களும், இரு படைகளுக்கும் இடையே அடிக்கடி நடக்கும் தாக்குதலில் பாதிக்கப்பட்டனர். பலரும் அங்கிருந்து வெளியேறினார்கள். ஏனைய சிலர் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பில்லாத நிலையில் வாழ்ந்து வந்தனர்.
2003-க்குப் பிறகு, எல்லைப்புறத்தில் தாக்குதல்கள் அறவே இல்லாத நிலைமை 2009 வரை நீடித்தது. 2012 முதல் மீண்டும் பழையபடி அடிக்கடி தாக்குதல்கள் நடைபெறத் தொடங்கிவிட்டன. பாகிஸ்தான் இதுபோன்ற தாக்குதல்களை நடத்துவதே, பயங்கரவாதக் குழுக்களை இந்தியாவுக்குள் அனுப்புவதற்காகத்தான் என்பதும், இது பயங்கரவாத ஊடுருவலுக்கான நாடகம் என்பதும், அதன்மூலம் காஷ்மீரத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதுதான் பாகிஸ்தானின் நோக்கம் என்பதும் வெளிப்படை.
பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உண்மையாகவே சமாதானத்தை விரும்புவதாக இருந்தால், பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரத் தாக்குதலில் ஈடுபடாமல் இருப்பதையும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்காமல் இருப்பதையும் முதலில் உறுதிப்படுத்த வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.