உயரப் பறக்கும் ஊழல்!

இந்திய விமானப் படையில் முன்னாள் தளபதி சுசீந்திரபால் தியாகி (எஸ்.பி.தியாகி) அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் ஊழலில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Updated on
2 min read

இந்திய விமானப் படையில் முன்னாள் தளபதி சுசீந்திரபால் தியாகி (எஸ்.பி.தியாகி) அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் ஊழலில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராணுவத்தில் உயர் பதவியில், அதிலும் தலைமைப் பதவியில் இருந்த ஓர் அதிகாரி கைது செய்யப்படுவது என்பது சாதாரண நிகழ்வல்ல.
2013 மார்ச் 25 ஆம் தேதி, அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, இந்திய விமானப்படைக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதை நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொண்டு, இது தொடர்பாக மத்தியப் புலன் விசாரணைத் துறை விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் ஊழல் என்பது, நமது புலனாய்வுத் துறையினரால் வெளிக்கொணரப்பட்ட ஊழல் அல்ல. அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் ஊழலில் ஈடுபட்டதாக இத்தாலியில் வழக்கு வந்தபோதுதான், இந்தியாவில் அப்படியொரு ஊழல் நடைபெற்றிருப்பதும், நமது ராணுவ உயர் அதிகாரிகளும், ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் இந்த ஊழலில் தொடர்பு கொண்டிருப்பதும் நமக்குத் தெரியவந்தது.
பின்மெக்கானிக்கா என்கிற இத்தாலிய நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டாவும், இங்கிலாந்தைச் சேர்ந்த வெஸ்ட்லேண்ட் நிறுவனமும் இணைந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்கிற ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தை ஏற்படுத்தின. இந்த நிறுவனம் ராணுவ மற்றும் பொது சேவைக்கான ஹெலிகாப்டர்களைத் தயாரித்து வந்தது.
கார்கில் போரின்போது நமது ஹெலிகாப்டர்கள் சியாச்சின் பனிப்பாறைகளைத் தாண்டி பறக்க முடியாததாக இருப்பது தெரிந்தது. அதுவரை நமது விமானப்படை பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டர், உயர் அதிகாரிகள், பிரமுகர்கள் பயன்படுத்தத்தக்க வசதி இல்லாமல் இருப்பதும், அதிக உயரத்தில் பறக்க முடியாமல் இருந்ததும்தான் புதிய ஹெலிகாப்டர்களை வாங்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தின.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்கள் 4500 மீட்டர் உயரம் மட்டுமே பறக்கக்கூடியவை என்பதால் முதலில் விமானப்படை அதை நிராகரித்தது. ஹெலிகாப்டர்களில் விமானப் படை உயர் அதிகாரிகளுக்கு மட்டுமல்லாமல், குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களையும் ஏற்றிச் செல்வதற்கேற்ற வசதிகள் கொண்டதாக இருப்பது மட்டுமே போதாது. அதன் உள்பகுதி 1.80 மீட்டர் உயரம் இருப்பதுடன், லே பள்ளத்தாக்கிற்கு ஸ்ரீநகரிலிருந்து சியாச்சின் பனிச்சிகரத்தைக் கடந்து செல்லும் வகையில் 6000 மீட்டர் உயரத்தில் பறக்கும் திறனும் இருக்க வேண்டும்"" என்றது விமானப்படை.
இந்த நிலையில்தான் எஸ்.பி. தியாகி விமானப்படையின் தலைமைத் தளபதியாகிறார். அவர் உயரத் தகுதியை 4500 மீட்டராகக் குறைத்ததுடன், ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கையையும் எட்டிலிருந்து 12 ஆக அதிகரித்து உத்தரவு பிறப்பிக்கிறார். அதுமட்டுமல்ல, ஒப்பந்தப்புள்ளி கோரி, பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தத்தை இறுதி செய்யாமல், ஒரே நிறுவனத்திடம் வாங்கிக் கொள்ளலாம் என்று நிபந்தனைகள் ஒன்றன் பின் ஒன்றாக மாற்றப்படுகின்றன.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு நெருக்கமான தளபதி எஸ்.பி.தியாகியின் உறவினர்கள் சஞ்ஜீவ், ராஜீவ், சந்தீப் ஆகியோர்தான் இந்தப் பேரத்தில் ஈடுபட்டவர்கள். ஆலோசனைக் கட்டணம் என்கிற பெயரில் 2004-இல், 1,26,000 யூரோக்களும், 2005-இல் 2 லட்சம் யூரோக்களும் இவர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. அதில் ஒரு பகுதி நேரிடையாக தளபதி தியாகிக்கே தரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தாலிய நீதிமன்றத்தில் அந்த நாட்டைச் சேர்ந்த பின்மெக்கானிக்கா நிறுவனம் கையூட்டு கொடுத்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருப்பது வழக்கானது. அப்போதுதான் இதுகுறித்தே இந்தியாவில் தெரிய வந்தது. உடனே, அப்போதைய மன்மோகன் சிங் அரசு, மத்திய புலன் விசாரணைக்கு உத்தரவிட்டதுடன், அகஸ்டா வெஸ்ட்லேண்டுக்கு அளித்த முன்பணத்தில் 45 சதவிகிதத்தைத் திரும்பப் பெற்றது.
விஷயம் அத்துடன் முடிந்து மூடி மறைக்கப்பட்டிருக்கும். ஆனால், இத்தாலிய நாட்டின் மிலன் மேல் முறையீடு நீதிமன்றத்தில் அகஸ்டா வெஸ்ட்லேண்டின் தலைமை அதிகாரி க்ளுசெப்பே ஓர்கி இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள், விமானப் படைத் தளபதிகளுக்கு 30 மில்லியன் யூரோ கையூட்டுக் கொடுத்ததற்காக நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறார். அந்த வழக்கு தொடர்பாக, இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் என்கிற அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழியர் ஒருவர் சோனியா காந்திக்கு நெருக்கமான முக்கிய தலைவர்களின் பெயரைக் குறிப்பிட்டு. அவர்கள் உதவியால் இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்துக் கொள்ளவும் என்று எழுதிய கடிதமும் சாட்சியமாக இருந்தது.
இந்தப் பின்னணியில்தான் இப்போது விமானப் படையின் முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி.தியாகி கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு இரண்டு ஆண்டுகள் கடந்திருக்கின்றன. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும் என்பதில் கருத்து மாறுபாடில்லை. அதே நேரத்தில், சட்டம் தனது கடமையை விரைந்து செய்ய வேண்டும். தகுந்த ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும்.
இது அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல, ஊழலுக்கு எதிரான பாரபட்சமில்லாத நடவடிக்கை என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு மோடி அரசுக்கு உண்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com