நீதித்துறை முறையாகவும், விரைவாகவும் செயல்படுவது, அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பப் பயன்பாட்டைக் கூடியமட்டும் அதிகரிப்பது என்கிற இரண்டும் நடைமுறை சாத்தியமாக்கப்பட்டால், ஊழலையும் முறைகேடுகளையும் கணிசமாகக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். ஊழல், முறைகேடுகள், காலதாமதம் போன்றவை நீதித்துறையால் அடிமட்டத்திலேயே விரைந்து விசாரித்துத் தீர்ப்பளிக்கப்பட்டால், அரசு நிர்வாகத்தின் முடிவுகள் தட்டிக்கேட்கப்படும் என்கிற பயம் ஏற்பட்டால், அது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தேர்தல் சீர்திருத்தம், நிர்வாகச் சீர்திருத்தம், பொருளாதார சீர்திருத்தம், கல்வித் துறை சீர்திருத்தம் ஆகியவை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது நீதித்துறைச் சீர்திருத்தமும்கூட என்பதை நாம் உணர வேண்டும்.
உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பான சர்ச்சை ஒருபுறம் இருக்கட்டும். கீழமை நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்படும் நீதிபதிகளின் தரமும், தகுதியும் கணிசமாகக் குறைந்து வருகிறது என்பது குறித்தும், அவை கடந்த அரை நூற்றாண்டு காலமாக அரசியல் நியமனங்களாக மாறிவருகின்றன என்பது குறித்தும் போதுமான விவாதமோ, கவலையோ சமுதாயத்தில் இல்லாமல் இருப்பது வேதனைக்குரியது. இந்திய மாநிலங்கள் அனைத்திலுமே கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தகுதியைவிடத் தலையீடுதான் அதிகம் என்பதால் தரம் கணிசமாகக் குறைந்திருப்பதாக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் தனது அறிக்கையில் கூறுகிறது.
சட்டம் குறித்தும், நீதிபரிபாலனம் குறித்தும் சரியான புரிதலே இல்லாதவர்களும்கூட சட்டத்தில் பட்டம் பெற்றிருக்கும் ஒரே காரணத்தால் தங்களது அரசியல் தொடர்பு காரணமாகக் கீழமை நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டு விடுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை முழுமையாக மறுத்துவிட முடியாது. இதுகுறித்த சிந்தனை முதலாவது சட்டக் குழுவின்போதே எழுப்பப்பட்டும் இதுகுறித்து எத்தகைய முயற்சியோ, நடவடிக்கையோ எடுக்கப்படாததற்கு அரசியல்தான் காரணம்.
இந்தப் பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு இந்திய அரசுப் பணி, இந்திய வருவாய்ப் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய அஞ்சலகப் பணி போன்றவற்றிற்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்துவதுபோல, இந்திய நீதித்துறைப் பணிக்கும் அகில இந்திய அளவில் தேர்வு நடத்துவதும், அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அவரவர் மாநிலத்தில் பணியில் அமர்த்துவதுமாகத்தான் இருக்கும். அரசின் எல்லாத் துறைகளுக்கும் மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் இருப்பதுபோல, நீதித்துறைக்கும் தேர்வாணையம் அமைக்கப்பட்டால் மட்டுமே, சட்டம் நன்றாகத் தெரிந்த, தகுதியை மட்டுமே அடிப்படையாகத் கொண்டவர்கள் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த முடியும். இதன்மூலம் தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களை நீதிப் பணிக்கு ஈர்க்க முடியும்.
அகில இந்திய நீதித்துறைப் பணி ஆணையம் என்பது புதிய சிந்தனையொன்றும் அல்ல. சட்டக் குழு தனது முதலாவது, எட்டாவது, 116-ஆவது அறிக்கைகளில் இதைப் பரிந்துரைத்திருக்கிறது. உச்சநீதிமன்றமும் சரி, 1991-லும், 1992-லும் அகிய இந்திய நீதித்துறைப் பணி ஆணையம் அமைப்பதை ஆமோதித்திருக்கிறது. சட்டம், நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தனது 15-ஆவது அறிக்கையில் அகில இந்திய நீதித்துறைப் பணி ஆணையம் அமைப்பதை அங்கீகரித்திருப்பதுடன், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க மத்திய நீதித்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியது.
முதலாவது தேசிய நீதித்துறை ஊதியக் குழுவும் சரி, மத்திய அரசின் தேசிய ஆலோசனைக் குழுவும் சரி இந்தப் பரிந்துரையை ஆதரித்திருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 312, தேசிய அளவிலான நீதித்துறைப் பணி ஆணையம் அமைக்கப்படுவதை வலியுறுத்துகிறது. இத்தனைக்குப் பிறகும், நீதித்துறைப் பணித் தேர்வுக்கான ஆணையம் அமைக்கப்படாததற்குக் காரணம், மாநில அரசுகளின் எதிர்ப்பு. தங்களுக்கு இணக்கமானவர்களையும், கட்சிக்காரர்களையும் கீழமை நீதிமன்றங்களில் நியமித்துக் கொள்ளும் உரிமையை அரசியல் கட்சிகள் விட்டுக்கொடுக்க முன்வராமல் தடுத்து வருகின்றன.
அகில இந்திய நீதித்துறைப் பணி ஆணையம் ஏற்படுத்தப்படாததால், நீதித்துறையின் அனைத்து அடுக்குகளிலும், போதிய அளவு நீதிபதிகள் நியமிக்கப்படாமல் காலியிடங்கள் காணப்படுகின்றன. இந்தியக் கீழமை நீதிமன்றங்களில் இருக்க வேண்டிய 19, 726 நீதிபதிகள் பதவிகளில் 15,438 இடங்கள்தான் நிரப்பப்பட்டுள்ளன. 24 உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,017 இடங்களில், 617 நீதிபதிகள்தான் பணியாற்றுகிறார்கள். 400 நீதிபதி இடங்கள் நிரப்பப்படாமல் தொடர்கின்றன. உச்சநீதிமன்றத்திலாகட்டும், தலைமை நீதிபதி உள்பட அனுமதிக்கப்பட்ட 31 பேர்களுக்கு, இப்போது 26 நீதிபதிகள்தான் இருக்கிறார்கள்.
அகில இந்திய நீதித்துறைப் பணி ஆணையம் அமைக்கப்படுமானால், சட்டம் படித்துவிட்டு தனியார் துறையின் பணிக்குப் போகும் திறமையான இளைஞர்கள், நீதித்துறைப் பணிக்கு வரத் தயாராவார்கள். உயர்நீதிமன்றங்களுக்குக் கீழமை நீதிமன்றங்களிலிருந்து மூன்றில் ஒரு பகுதியினர் தேர்ந்தெடுக்கப்படுவதால், திறமைசாலிகள் மட்டும்தான் நீதித்துறையின் எல்லா அடுக்குகளிலும் பதவி வகிக்கும் நிலைமை ஏற்படும். அரசியல் நியமனங்களுக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைக்க முடியம்.
அந்தந்த மாநிலத்தவர் மட்டுமே கீழமை நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்படுவர் என்கிற வாக்குறுதியுடன் இந்திய நீதித்துறைப் பணி ஆணையம் மூலம் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவது, இனியும் தாமதப்படக் கூடாது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.