வளர்ச்சி குறித்த அயர்ச்சி!

கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகி இருக்கும் "யுனிசெப்' என்று பரவலாக அறியப்படும் ஐ.நா. சபையின் குழந்தைகள் அவசர உதவி நிதி அமைப்பின் அறிக்கை அதிர்ச்சி தரும் தகவல்களை அளிக்கிறது.
Updated on
2 min read

கடந்த செவ்வாய்க்கிழமை வெளியாகி இருக்கும் "யுனிசெப்' என்று பரவலாக அறியப்படும் ஐ.நா. சபையின் குழந்தைகள் அவசர உதவி நிதி அமைப்பின் அறிக்கை அதிர்ச்சி தரும் தகவல்களை அளிக்கிறது. இந்தியா சர்வதேச அளவில் மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் பொருளாதார நாடுகளில் ஒன்று என்று கருதப்படும் நிலையில், இந்த அறிக்கை வெளிப்படுத்தும் புள்ளி விவரங்கள் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்ததாக மட்டுமே இருக்க முடியாது. மனிதவள மேம்பாடு, கட்டமைப்பு வசதி மேம்பாடு, சுகாதாரம், தனி நபர் வருமானம், வாழ்க்கைத் தரம் வருங்கால சந்ததி

யினரின் ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே அதை வளர்ச்சி என்று கொள்ள முடியும். கடந்த 2015-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஐந்து வயதுக்கு உள்பட்ட சுமார் 12 லட்சம் குழந்தைகளை தக்க முயற்சிகளும் சூழலும் இருந்திருந்தால் மரணத்திலிருந்து காப்பாற்றியிருக்க முடியும் என்கிறது அந்த அறிக்கை.

அந்த அறிக்கையின்படி, கடந்த ஆண்டு உலகில் மரணமடைந்த ஐந்து வயதுக்கு உள்பட்ட 59 லட்சம் குழந்தைகளில் பாதிக்கு மேற்பட்டவர்கள் இந்தியா, காங்கோ, எத்தியோப்பியா, நைஜீரியா, பாகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்தவர்கள். மேலே குறிப்பிட்ட ஐந்து நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், சுற்றுப்புறச் சூழலும் முறையாக இருந்திருந்தால் அந்தக் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்க முடியும் என்று கூறுகிறது அறிக்கை.

குழந்தை பிறந்து 28 நாள்களுக்குள் மரணமடைவது சிசு மரணம் எனப்படுகிறது. குறைப்பிரசவத்திலும், பிரசவத்திலும், சிசு மரணமாகவும் உயிரிழக்கும் குழந்தைகளின் விகிதம் இந்தியாவில் 39%. முறையான பேறுகால முன்னெச்சரிக்கைகளும், பிரசவமும் இந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும். இதைத் தொடர்ந்து, நிமோனியா குளிர்காய்ச்சல் (14.9%), டயரியா வயிற்றுப்போக்கு (9.8%), செல்சிஸ் (7.9%) போன்றவையும் குழந்தை மரணங்களுக்குக் காரணிகளாக அமைகின்றன.

கடந்த 2015-ஆம் ஆண்டில், சர்வதேச அளவிலான குழந்தை மரணங்களில் 45% சிசு மரணமாக அமைந்தன என்பதுதான் வேதனை. இந்தியாவைப் பொருத்தவரை, ஐந்து வயதுக்கு உள்ளிட்ட குழந்தை மரணத்தின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. 1990-இல் 1,000 பிரசவங்களில் 126 குழந்தைகள் ஐந்து வருடங்களுக்குள் இறந்த நிலைமை மாறி, இப்போது 48 குழந்தைகள் என்கிற நிலை வந்திருக்கிறது. ஆனாலும்கூட, 2015-இல் இரண்டரைக் கோடி குழந்தைகள் பிறந்திருக்கும் இந்தியாவில் ஆயிரத்துக்கு 48 என்கிற விகிதம், பெருமைக்குரியதொன்றும் அல்ல.

சிசு மரணத்துக்கும், குழந்தைகள் மரணத்துக்குமான அடிப்படைக் காரணிகள் முறையான முனைப்பு இருந்தால் களையப்படக் கூடியவைதான். இந்தியாவில் 40% பேருக்குத்தான் முறையான கழிப்பறை வசதி உள்ளது. சுத்தமான கழிப்பறை வசதி உறுதிப்படுத்தப்பட்டால் டயரியா என்கிற வயிற்றுப்போக்கு தடுக்கப்பட்டு 9.8% குழந்தை மரணங்கள் தவிர்க்கப்படும்.

தடுப்பூசி குறித்து இத்தனை விழிப்புணர்வுப் பிரசாரம் செய்தும், இந்தியாவில் 65% குழந்தைகள் மட்டுமே, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. உத்தரப் பிரதேசம் (27%), பிகார் (11%), மத்தியப் பிரதேசம் (6%), நாகாலாந்து (6%), ராஜஸ்தான் (5%) ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் இருக்கிறார்கள்.

தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மட்டுமா நம்மால் ஏற்படுத்த முடியவில்லை? அங்கன்வாடி மழலையர் பள்ளிக்கு அனுப்புவதைக்கூட அல்லவா நம்மால் இன்னும் உறுதிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். பெரிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம் (56%), ராஜஸ்தான் (46%), பிகார் (40%) மாநிலங்களில் மழலையர் பள்ளிக்கு அனுப்பப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இதில்கூட அந்த மாநிலங்களின் அரசுகள் முனைப்புக் காட்டாமல் இருப்பதை, யுனிசெப் அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மகளிருக்குப் பேறுகால மருத்துவக் கண்காணிப்பு, முறையான பிரசவ மருத்துவம், சிசுவுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தினால், குழந்தை மரணத்தைக் கணிசமாகக் குறைக்கலாம் என்று கூறுகிறது அந்த அறிக்கை. இந்தப் பிரச்னையில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கிறது தமிழகம் என்கிற அளவில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். பேறுகால மரணம், சிசு மரணம், குழந்தைகள் மரணம், ஊட்டச்சத்துக் குறைவு ஆகிய அனைத்து பிரச்னைகளிலும் ஏனைய இந்திய மாநிலங்களைவிடத் தமிழகமும் கேரளமும் மிகப்பெரிய அளவில் கவனமாக செயல்பட்டு, பாதிப்புகளைத் தடுத்து விட்டிருக்கின்றன.

இப்போது காணப்படும் நிலைமை தொடருமானால் அடுத்த 15 ஆண்டுகளில், ஏறத்தாழ 16.7 கோடி குழந்தைகள் மோசமான வறுமையில் வாழ்வார்கள் என்றும், 69 லட்சம் குழந்தைகள், தடுக்க முடிந்தும் தடுக்கப்படாமல் ஐந்து வயதுக்குள் மடிவார்கள் என்றும் "யுனிசெப்' அறிக்கை எச்சரிக்கிறது. அதில் இந்தியாவின் பங்கு 17%-ஆக இருக்கும் என்கிறது அந்த அறிக்கை.

சுற்றுப்புறச் சூழலை ஆரோக்கியமானதாக்குவது, அனைவருக்கும் கழிப்பறை வசதியை அளிப்பது, பேறுகால, பிரசவகால வசதிகளை உறுதிப்படுத்துவது, தடுப்பூசி போடுவதைக் கட்டாயப்படுத்துவது, குழந்தைகளுக்குத் தரமான மருத்துவ வசதியையும், ஊட்டச்சத்துள்ள உணவையும் வழங்குவது - இதையெல்லாம் செய்யாமல் பொருளாதாரம் 6% வளர்ந்தால் என்ன, 16% வளர்ந்தால்தான் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com