ஏமாற்றமளிக்கும் மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார். முக்கியமான துறைகளான உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளிவிவகாரம் ஆகிய துறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இதை விரிவாக்கம் என்றுதான் சொல்ல வேண்டும்.
Updated on
2 min read

பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்திருக்கிறார். முக்கியமான துறைகளான உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளிவிவகாரம் ஆகிய துறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இதை விரிவாக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில், பல முக்கியமான அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்

கிறார்கள், இலாகாக்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் மாற்றம் என்று சொல்லாமலும் இருக்க முடியவில்லை.

பதவிக்கு வந்த 25 மாதங்களில் பிரதமர் நரேந்திர மோடி செய்திருக்கும் இரண்டாவது மாற்றம் இது. அவரது அமைச்சரவை 2014 மே மாதம் பதவி ஏற்றது. அதனையடுத்து, ஆறு மாதத்திற்குப் பிறகு நவம்பர் மாதத்தில் ஏற்படுத்திய சிறிய இலாகா மாற்றம். நரேந்திர மோடி பதவி ஏற்றபின் நிகழ்த்தியிருக்கும் மிகப்பெரிய அமைச்சரவை மாற்றமும், விரிவாக்கமும் இப்போது நிகழ்த்தியிருப்பதுதான்.

25 மாதங்களுக்கு முன்னால், கடந்த 16 ஆண்டுகளில் அமைந்த மிகச்சிறிய அமைச்சரவை என்கிற பரபரப்பான பாராட்டுதல்களுடன் தொடங்கிய நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, இப்போது 28 கேபினட் அமைச்சர்கள், 12 தனியதிகாரம் படைத்த இணையமைச்சர்கள், 38 இணையமைச்சர்களைக் கொண்ட "ஜம்போ' அமைச்சரவையாக மாறியிருக்கிறது.

19 அமைச்சர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். ஐந்து பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள். இத்தனை அமைச்சர்கள் சேர்க்கப்பட்டாலும்கூட, மக்களவையின் மொத்த எண்ணிக்கையில் 15% வரம்பை இன்னும் அமைச்சர்களின் எண்ணிக்கை எட்டவில்லை என்பது சற்று ஆறுதல். அனுமதிக்கப்பட்ட 82 என்கிற அளவை எட்டாமல் 78 அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நிறுத்திக் கொண்டிருப்பதற்கு அவரைப் பாராட்ட வேண்டும். முந்தைய மன்மோகன் சிங் அமைச்சரவையில் 80 அமைச்சர்கள் இருந்தனர். அதைவிடக் குறைவாகத் தனது அமைச்சரவையைப் பிரதமர் மோடி பார்த்துக் கொள்வது வரை மகிழ்ச்சி.

டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இருந்த நெருக்கடியும், கட்டுப்பாடுகளும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கிடையாது. மன்மோகன் சிங்கைப் பொருத்தவரைத் தனது அமைச்சரவையில் யார் யார் இடம் பெற வேண்டும், யார் யார் இடம் பெறக் கூடாது என்று தீர்மானிக்கவோ, திறமையற்றவர்களையும், தனக்கு ஒத்து வராதவர்களையும் அமைச்சரவையிலிருந்து விலக்கவோகூட அவருக்கு அதிகாரம் இருக்கவில்லை. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் நிலைமை அதுவல்ல. தனது சகாக்களைத் தீர்மானிக்கவும், தகுதியும் திறமையும் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து, தான் விரும்பிய விதத்தில் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றவும் அவருக்கு மக்கள் அதிகாரம் அளித்திருக்கிறார்கள். அப்படி இருந்தும், அமைச்சரவையை மாற்றி அமைத்து, அரசின் செயல்பாடுகளை முடுக்கி விடுவதில் அவர் ஏன் காலதாமதம் செய்தார் என்பது புதிராக இருக்கிறது. இந்த மாற்றத்திற்கு இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சேர்ந்திருக்கும் 19 புதிய அமைச்சர்களில் இரண்டு பேர் பழங்குடியினர், ஐந்து பேர் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள். புதிய அமைச்சர்கள் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், தில்லி, உத்தரகண்ட், கர்நாடகம், அஸ்ஸாம் ஆகிய 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அடுத்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடக்க இருக்கும் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களை குறிவைத்துதான் இந்த அமைச்சரவை மாற்றமே நடத்தப்பட்டிருக்கிறதோ என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது, அமைச்சர்களின் தேர்வு.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் யாரும் எதிர்பாராத திருப்பம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இலாகா மாற்றப்பட்டிருப்பதுதான். ஜவுளித் துறைக்கு அவர் மாற்றப்பட்டு, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜாவடேகர் மனிதவளத் துறை அமைச்சராக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். ஜாவடேகர் திறமைசாலி என்பது மட்டுமல்ல, அனைவரையும் அனுசரித்துப் போகவும், பிரச்னைக்கு விவாதங்களின் மூலம் தீர்வு காணவும் அவருக்குத் தெரியும்.

இன்னொரு வரவேற்புக்குரிய மாற்றம், பத்திரிகையாளரும், முன்னாள் காங்கிரஸ்காரருமான எம்.ஜே. அக்பர் வெளிவிவகாரத் துறையின் இணையமைச்சராக்கப்பட்டிருப்பது. வளைகுடா நாடு

களுடன் நெருங்கியத் தொடர்புடைய இவர் நரேந்திர மோடி அரசுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார்.

நரேந்திர மோடி அமைச்சரவையில் உத்தர பிரதேசத்திலிருந்து மட்டும் 16 அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்திலிருந்து ஒருவர்கூட கேபினட் அந்தஸ்து பெற்ற அமைச்சரில்லை. சுதந்திர இந்திய சரித்திரத்தில் இப்படியொரு புறக்கணிப்பு தமிழகத்துக்கு இருந்ததே இல்லை. இத்தனைக்கும் தமிழகத்திலிருந்து பா.ஜ.க. சார்பில் ஒருவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இணையமைச்சராகவும் இருக்கிறார். ஏழு கோடி தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க கேபினட் அந்தஸ்துள்ள ஓர் அமைச்சர்கூட இல்லாத நிலையில், நரேந்திர மோடி தனது அமைச்சரவையை விரிவாக்கம் செய்தால் என்ன, மாற்றி அமைத்தால் என்ன, நமக்கு அதனால் லாபம் ஒன்றும் இல்லை!

மாற்றமோ, விரிவாக்கமோ, எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். தமிழகத்தைப் பொருத்தவரை பிரதமர் நரேந்திர மோடியின் இப்போதைய அமைச்சரவை ஏமாற்றம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com