விலங்குகளை நேசிப்போருக்கு மிகவும் வேதனை தரும் காலம் இது. தமிழகத்தில் கடந்த 15 நாள்களில் ஆறு யானைகள் பல்வேறு காரணங்களால் இறந்துள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்து யானைகள்!
ஜூன் 20-ஆம் தேதி, மதுக்கரை அருகே விரைவு ரயில் மோதியதில் ஒரு யானை இறந்தது. அடுத்ததாக, மதுக்கரை அருகே அடங்க மறுத்து அட்டகாசம் செய்த "மதுக்கரை மகராஜ்' என்கிற யானைக்கு மயக்க மருந்து செலுத்தி, அதை வால்பாறைக்குக் கொண்டு சென்றார்கள். ஆனால், கொண்டு செல்லப்பட்ட அடுத்தநாளே அந்த யானை (ஜூன் 21) இறந்தது. அதற்கான காரணம், மிகையாக மயக்க மருந்து செலுத்தியதுதான் என்று புகார்கள் எழுந்தன. ஆனால் வனத் துறை அதை மறுத்துவிட்டது.
ஜூன் 25-ஆம் தேதி கேரள வனப்பகுதியிலிருந்து வந்துவிட்ட ஆண் யானை ஒன்று, கோயம்புத்தூர் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்தது. ஜூலை 3-ஆம் தேதி பவானி சாகர் அணையின் பின்புறத்தில் ஒரு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது. ஜூலை 5-ஆம் தேதி, கோயம்புத்தூர் நரசீபுரம் அருகே உள்ள மூங்கில்பாலம் பகுதியில் ஒரு பெண் யானை இறந்து கிடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூர் அருகே லாரி மோதி காயமடைந்த யானையும் இறந்தது. திருப்பதி அருகே தலக்கோணா வனப்பகுதியில், மாந்தோப்பு மின்வேலியில் சிக்கிய யானை ஒன்று இறந்தது. கோயில் யானைகளும் கடந்த சில மாதங்களில் இறந்துள்ளன. ஆனால், அவை வயது முதிர்ச்சியால் நேரிட்ட மரணங்கள்.
சாலைவிபத்தில் காயமடைந்த யானையை சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ள முதுமலைக்கு கொண்டுசென்றிருக்கக் கூடாது என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் இப்போது குறை கூறுகின்றனர். அத்தனைத் தொலைவுக்கு அடிபட்ட யானையைக் கொண்டு செல்வது அதனை சித்திரவதை செய்வதற்கு ஒப்பானது என்று கூறுகிறார்கள். அதேவேளையில், அடிபட்ட நாய், குரங்கு, மயில் போன்றவற்றுக்குச் சிகிச்சை அளிப்பதைப்போல அடிபட்ட யானைக்கு சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல என்கிற உண்மையையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
யானை மிதித்து இறந்தவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக பத்துக்கும் மேலாக இருக்கிறது என்றாலும், மனிதர்களைத் தேடிவந்து யானைகள் கொல்வதில்லை. தங்களைத் தாக்க முற்படுவோரை திரும்பித் தாக்கும் தற்காப்பு முயற்சியில் பல மனித மரணங்கள் யானையால் நேரிடுகின்றன, அவ்வளவே!
தமிழ்நாட்டைப் பொருத்தவரை மூன்று நிலப்பரப்பில் மூன்று குழுக்களாக யானைகள் நடமாடுகின்றன. நீலகிரி வனப்பகுதியில் சுமார் 860 யானைகளும், கோயம்புத்தூர் வனப்பகுதியில் சுமார் 330 யானைகளும், ஆனைமலை வனப்பகுதியில் சுமார் 180 யானைகளும் மூன்று குழுக்களாக, தங்களுக்கே உரித்தான பாதையில் (எலிபண்ட் காரிடார்) நடமாடுகின்றன. அவற்றின் நடமாட்டம் அந்தந்தப் பகுதிகளின் கோடைகாலம், குளிர்காலம், இளவேனிற்காலத்துக்கு ஏற்ப, இயல்பான அட்டவணைப்படுத்தப்பட்ட நடவடிக்கையாக இருக்கிறது.
இப்போது யானைகளுக்கும் மனிதருக்குமான மோதல் என்பது, போக்குவரத்து மற்றும் வேளாண்மை இரண்டிலும்தான். யானைகள் தங்கள் பாதையைவிட்டு விலகி, உணவுக்காக ஊருக்குள் வந்து கரும்புத் தோட்டத்தையும் வாழைத் தோட்டத்தையும் அழிக்கின்றன. இந்தச் சூழலை மாற்றுவதற்கு, கரும்பு, வாழை பயிரிடுவதைத் தவிர்க்கவும் மாற்றுப்பயிர் சாகுபடி செய்யவும் விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டார்கள். யானைகள் வராதபடி ஊருக்கு வெளியே அகழி போன்று பள்ளம் வெட்டும் திட்டத்தையும்கூட தமிழக அரசு அறிவித்தது. ஆனால் எந்தத் திட்டமும் பயனளிக்கவில்லை. யானைகள் பாதுகாப்புத் திட்டம் (புராஜெக்ட் எலிபண்ட்) நடக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
யானைகள் தங்கள் பாதையைவிட்டு விலகாதபடி, அவை நடமாடும் பகுதியிலேயே அவற்றிற்கான உணவு கிடைக்கும் வகையில், வனத் துறையே கரும்பு, வாழையை குறிப்பிட்ட தொலைவில் பயிரிட வேண்டும். அப்படிச் செய்தால், அவற்றின் உணவுத்தேவை பூர்த்தியாகும் நிலையில், ஊருக்குள் வரவேண்டிய தேவை யானைகளுக்கு இருக்காது. இன்றைய செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், அவை மனித வசிப்பிடங்களுக்கு வருவதற்கு முன்பாகவே அவற்றை விரட்டிவிடவும் இயலும்.
இரண்டாவதாக, யானைகள் சாலைகளை, ரயில் பாதைகளை கடக்கும்போது நேரிடும் விபத்துகளைத் தவிர்க்கும் நடவடிக்கை தேவை. ஒசூர் - கிருஷ்ணகிரி இடையே ஆறு வழிப்பாதையை யானைகள் எளிதாகக் கடக்கும் வகையில் மூன்று இடங்களில் அகன்ற, செடி, மரங்கள் கொண்ட இயற்கை மேம்பாலம் அமைக்க முடிவு செய்துள்ளனர். இது நல்ல முயற்சி. இதேபோன்று, யானைகள் கடக்கக்கூடிய வகையில் ரயில் பாதைகளிலும் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும்.
பூமிப்பந்து என்பது மனித இனத்துக்கு மட்டுமே சொந்தமானதல்ல. இங்கே வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் பொது
வானது. நாம் வனப் பகுதிகளை அழித்துத் தோட்டங்களாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றும்போது, விலங்கினங்களும் பறவை இனங்களும் இரைதேடி வருவது இயற்கை. விலங்கு, பறவையினங்கள் இல்லாமல்போனால், மனித இனம் அழிந்துவிடும் என்கிற உண்மையை நாம் உணர்ந்து, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கண்டாக வேண்டும்.
"வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா' என்று கம்பன் சொல்கிறபோது ஏற்படும் பெருமிதம், யானைகள் ரயிலிலும் வாகனங்களிலும் அடிபட்டுச் சாகிறபோதும், நாய்கள் மாடியிலிருந்து வீசப்படும்போதும், மயில்கள் விஷம் வைத்துக் கொல்லப்படும்போதும் காணாமல் போகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோலாகலமாக நடைபெறும் பூரம் திருவிழா! | Pooram festival
பாசிப்பயறு தேங்காய்ப் பால் மலாய்

மேட்டுப்பாளையம்: தாயைப் பிரிந்து சுற்றித்திரியும் குட்டியானை ஆற்றில் உற்சாக குளியல்!

எப்பவும் தனி வழிதான்: தனுஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

