தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறியிருப்பதுடன், சுமார் 1,000 மெகாவாட் காற்றாலை மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் நிலைமையும் உருவாகியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
இரு நாள்களுக்கு முன்னர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, காற்றாலை மூலம் உபரியாகக் கிடைக்கும் 1,000 மெகாவாட் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல பசுமை வழித்தடம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இத்தகைய பசுமை வழித்தடம் அமைப்பதற்கு மத்திய எரிசக்தி நிறுவனம் ஏற்கெனவே திட்டம் வைத்துள்ளது. அதை விரைவுபடுத்த வேண்டும் என்பதே இந்தக் கடிதத்தின் நோக்கம்.
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்திக்கான வாய்ப்பு அதிகம். தமிழகத்தில் அமைந்துள்ள காற்றாலை மின்உற்பத்தித் திறன், இந்திய அளவில் 34%. காற்றாலை மின்உற்பத்தியில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் ஆடி மாதம் தொடங்கி, மூன்று மாதங்களுக்கு காற்றின் வேகம் பலமாக வீசும்போது, இறக்கைகள் வேகமாகச் சுழலவும் அதிக மின்உற்பத்தி கிடைக்கவும் வாய்ப்பு பெருகுகிறது. அந்த மின்சாரம் முழுவதையும் தமிழ்நாடே பயன்படுத்திக் கொள்ளவும் இயலாது. அதற்காக, காற்று பலமாக வீசும் காலத்தில் மின்உற்பத்தி செய்யாமல் இருக்கவும் முடியாது. ஆகவே காற்றாலை மின்உற்பத்தியில் தமிழகம் பயன்படுத்தும் மின்சாரம் போக, மீதியை கேரளம் மற்றும் கர்நாடகத்துக்கு விற்பனை செய்வதே சரியாக இருக்கும்.
அண்மையில் சட்டப் பேரவையில் பேசிய ஆளுநர் தனது உரையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகம் மேலும் கூடுதலாக 16,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் என்றார். இதில் கூடுதலாக 13,000 மெகாவாட் அனல் மின்நிலையங்கள் மூலமாகவும் 3,000 மெகாவாட் சூரியஒளி மூலமாகவும் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
2012-13ஆம் ஆண்டில் தமிழகத்தின் மின்தேவை 7,208 மெகாவாட். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவை ஆண்டுதோறும் சுமார் 2,000 மெகாவாட் வீதம் வளர்ந்துகொண்டே வந்து, தற்போது 15,000 மெகாவாட் அளவைத் தொட்டிருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 10,000 மெகாவாட் மின்தேவை ஏற்படலாம். ஆக, ஆளுநர் அறிவித்துள்ள 16,000 மெகாவாட் கூடுதல் மின்உற்பத்தியில் 10,000 உறுதியாகக் கிடைத்தாலும் தமிழகம் மின்வெட்டு இல்லா மாநிலமாக நீடிக்கும்.
அனல் மின்நிலையங்கள், காற்றாலைகள் மூலம் தற்போதைய மின் தேவையை (15,000 மெகாவாட்) சமாளிக்கிறார்கள். நிகழாண்டில் கோடைகாலம் மின்வெட்டு இல்லாமல் கடந்து சென்றபோதிலும், ஆண்டுதோறும் சுமார் 2,000 மெகாவாட் மின்தேவை கூடிக்கொண்டே போவதைப் பார்க்கும்போது, இந்த நிலைமையே வருங்காலத்திலும் தொடருமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது.
தற்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-ஆவது அலகு உற்பத்தியைத் தொடங்கிவிட்டதால் அதன் மூலம் தமிழகத்துக்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். கூடங்குளம் அணுமின் நிலையங்களின் மற்ற 3, 4-ஆவது அலகுகளும் செயல்படு
மானால், தமிழகத்துக்கு மேலும் 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அதன்மூலம், மின்வெட்டு இல்லாத மாநிலமாகத் தமிழகம் திகழும் என்பது உறுதி.
தமிழ்நாட்டில் புனல் மின்சாரத்துக்கான வாய்ப்புகளே இல்லை. அனல் மின்நிலையங்களின் செயல்பாடும் புவிவெப்ப ஒப்பந்தங்களால் பிரச்னைகளை எதிர்கொள்ளும். அவை புவிவெப்பத்துக்கு காரணமான கரியமிலவாயுவை வெளியிடாமல் இருக்க புதிய தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும். இது மிகவும் பொருட்செலவை ஏற்படுத்தும். அனல் மின்சாரத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிரக் குறையாது. உற்பத்திச் செலவு அதிகரிக்கும்போது, மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதும் சாத்தியமில்லை. ஆகவே தமிழகத்துக்கு ஆதரவான மின்உற்பத்திச் சூழல் என்பது காற்று, சூரியஒளி இரண்டும்தான்.
தற்போது உபரியாகக் கருதப்படும் காற்றாலை மின்சாரம் நமக்கே போதாது என்று சொல்லும் நிலையும் அடுத்த 5 ஆண்டுகளில் உருவாகும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை.
மின்தேவை என்பது தொழில்வளர்ச்சிக்கானதாக இருக்கும்வரை, தமிழக மின்சார பகிர்மானம் மற்றும் கட்டணம் எல்லாமும் ஏற்புடையதாக அமையும். ஆனால், தொழில்முறை சாரா மின்பயன்பாடு, குறிப்பாக வீட்டுப் பயன்பாடு அதிகரிக்குமானால், மின்சாரம் போதுமான அளவு கிடைத்தாலும்கூட, மின்கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகிவிடும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடாமல், மாதம் தோறும் கணக்கிடும் முறை தேவை என்கின்ற வழக்கில் நீதிமன்றம் தரப்போகும் தீர்ப்பும்கூட, கட்டண அடுக்கில் (ஸ்லாப்) மாற்றம் ஏற்படுத்தும். தமிழக அரசு அறிவித்திருக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்கின்ற திட்டம் தொடரவும், மின்கட்டணம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உயராமலும் இருக்க வேண்டும் என்றால், வீடுகள் அனைத்திலும் சூரியஒளி மின்ஆற்றலைப் பயன்படுத்தும் போக்கு அதிகரிக்க வேண்டும்.
மின்உற்பத்தியில் 20% சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளே எடுத்துக்கொள்கின்றன. சென்னை மாநகரின் அனைத்துக் கட்டடங்கள் மற்றும் கூவம், அடையாறு நதியின் மேற்பரப்பில் குஜராத் மாநிலத்தில் செய்யப்பட்டதைப்போல, சூரியத்தகடுகள் விரித்து மின்சாரம் தயாரித்தால் சென்னை தனது மின்தேவையை தானே உற்பத்தி செய்துகொள்வது எளிது.
தமிழகத்தின் பெருகும் மின்தேவையை ஈடுசெய்யப்போவது அனலும் புனலும் அல்ல. வளி(காற்று)யும் ஒளியும்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.