மெட்ரோ ரயில் திட்டப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் இது குறித்துப் பிரதமரிடம் வலியுறுத்தியிருந்த போதிலும், வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் (விம்கோ நகர்) இடையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் மீண்டும் இதனை வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த ஒப்பந்தம் தி.மு.க. ஆட்சியின்போது கையெழுத்தானது என்று தமிழக முதல்வர் குறிப்பிடுவதாலேயே இதை அரசியலாகப் பார்க்க வேண்டிய தேவை இல்லை. இந்த ஒப்பந்தத்தில் அவர் முன்வைக்கும் குறைகள் என்ன என்பதைப் பார்ப்பது மட்டுமே சரியான பொருளாதாரப் பார்வையாக இருக்க முடியும். மத்திய அரசுக்கு ஒரு கூடுதல் அழுத்தம் தருவதற்காகத்தான் மேடையில் அதைக் குறிப்பிட்டிருக்கக் கூடும்.
மேடையில் பேசிய முதல்வர், இந்த ஒப்பந்தத்தில் சில ஷரத்துகள் மாநில நலன்களுக்கு எதிராக இருக்கின்றன என்பதை மட்டுமே குறிப்பிட்டார். அவை எத்தகையவை என்பதை அவர் மேடை நாக
ரிகம் கருதி விரிவாக விளக்கவில்லை.
பொதுவாக அரசு ஒப்பந்தங்கள் பலவும் அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த ஆவணமாக அமைகிறது. மக்களும் அவற்றின் பல ஷரத்துகளை அறிந்துகொள்ள முற்படுவதே இல்லை. பொதுப் பணம் செலவிடும் முறை குறித்து அறச்சீற்றம் கொள்ளும் நுகர்வோர் அமைப்புகளிலும்கூட மிக சிலவே இத்தகைய ஒப்பந்தங்களில் எல்லா ஷரத்துகள் குறித்தும் அறிய ஆர்வம் காட்டுகின்றன. அரசு அதிகாரிகளுக்கு இது குறித்து எந்தக் கவலையுமே கிடையாது. தற்போதைய மெட்ரோ ரயில் ஒப்பந்தத்தில் மாநில நலன்
களுக்கு எதிரான ஷரத்துகள் எவை என்று கேட்டால், அதைத் தெரிந்து வைத்திருக்கும் அரசு அதிகாரிகள் மிகச் சிலர் மட்டுமே.
சென்னை மெட்ரோ ரயில் திட்டமானது மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டம். திட்டத்துக்கான மொத்தத் தொகையில் 59 விழுக்காட்டினை ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை கடனாக வழங்குகிறது. 30 சதவீதத் தொகையை மத்திய - மாநில அரசுகள் சமமாக ஏற்க வேண்டும். இது நீங்கலாக, மீதமுள்ள தொகையான 11 விழுக்காட்டினை மத்திய - மாநில அரசுகள் சார்நிலைக் கடனாக ஏற்கின்றன.
மேடையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளபடி, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.2,383 கோடி பங்கு மூலதனமாகவும், ரூ.1,854 கோடி சார்நிலைக் கடனாகவும், ரூ.82.3 கோடி மானியமாகவும் மாநில அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசு ரூ.1,950 கோடியை பங்கு மூலதனமாகவும், ரூ.365 கோடியை சார்நிலைக் கடனாகவும் வழங்கியுள்ளது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ரூ.7,095 கோடி கடன் வழங்கியுள்ளது. இந்த புள்ளிவிவரத்தைப் பார்த்தாலே மத்திய அரசைக் காட்டிலும் மாநில அரசுதான் அதிகமாக செலவிட்டுக்கொண்டிருக்கிறது என்பது புரியும்.
தற்போதைய ஒப்பந்தத்தின்படி, நிலம் கையகப்படுத்தல், நிவாரணத் தொகை, மறுவாழ்வுத் திட்டங்கள் அனைத்தும் மாநில அரசைச் சார்ந்தது என்பதோடு, இதற்காக மாநில அரசு செலவிடும் தொகை முழுவதும் சார்நிலைக் கடன் கணக்கில் சேர்க்கப்படும். மேற்சொன்ன புள்ளிவிவரத்தின்படி மாநில அரசின் சார்நிலைக் கடன் அளவு, சற்றொப்ப பங்கு மூலதனத்துக்கு இணையாக இருப்பதைக் காண முடியும். இதற்குக் காரணம், இந்த ரயில் திட்டம் முழுவதும் சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் என எல்லா செலவுகளும் மாநில அரசையே சாரும். மத்திய அரசுக்கு சொந்தமான இடங்களைக் கையகப்படுத்தினால் அச்செலவை மட்டுமே மத்திய அரசு சார்நிலைக் கடனாக ஏற்கும்.
சார்நிலைக் கடன் என்பது என்ன? ஒரு ஒப்பந்தத்தின் கீழ் ஒரு திட்டத்துக்காகப் பெறப்படும் முதன்மைக் கடன் முழுவதும் அடைக்கப்பட்டதன் பிறகுதான் சார்நிலைக் கடனைத் திருப்பிச் செலுத்தும் நடைமுறை தொடங்கும். இத்திட்டத்தின் மிகவும் இன்றியமையாப் பணிகள் என்பவை நிலம் கையகப்படுத்துதல், மறு
குடியமர்த்தல், நிவாரணம் இவைதான். இது இல்லாமல் இத்திட்டத்தை நடத்திச் செல்வது இயலாது. ஆனால், இதற்கான செலவு முழுவதும் சார்நிலைக் கடனாகக் கருதப்படும்.
அப்படியானால் திட்டத்துக்கான முதன்மைக் கடனை ஜப்பான் பன்னாட்டு வாரியத்துக்கு முழுமையாகச் செலுத்திய பிறகுதான் மாநில அரசுக்கு இத்தொகை கிடைக்கும். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும். அதற்காக, இந்தச் செலவுகளை மத்திய அரசே ஏற்க வேண்டும் என்பதில்லை. மாறாக, நிலம் கையகப்படுத்தல், மறுகுடியமர்வு, நிவாரணம் ஆகிய செலவுகளையும் முதன்மைக் கடனில் சேர்த்துவிடுவதன் மூலம் மாநில அரசுக்குப் பெரும் நிதிச்சுமை குறையும்.
மேலும், திட்டம் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் திட்டச்செலவு அதிகரிப்பு, டாலர் மதிப்பு வேறுபாடு ஆகியவற்றையும் மாநில அரசே ஏற்க வேண்டும் என்பதும், திட்டத்தில் நஷ்டம் ஏற்பட்டால் ஒன்றும் தர வேண்டியதில்லை என்றாலும் லாபம் வந்தால் மத்திய அரசுக்கு பங்குத்தொகை அளிக்க வேண்டும் என்பதும்கூட மறுபரிசீலனைக்கும் மாற்றத்திற்கும் உள்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் முதல்வரின் நியாயமான கோரிக்கை.
வடசென்னைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதோடு, இத்திட்டத்தை ஒரு வட்டப்பாதையாக மாற்றும் எண்ணமும் முதல்வருக்கு இருப்பதால் இந்த ஒப்பந்தத்தில் மாநில அரசுக்கு பாதகம் இல்லாத வகையில் சில திருத்தங்கள் அவசியம்தான். நியாயமான கோரிக்கை. ஏற்கப்படும் என்றே நம்புவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

