பராக் ஒபாமா 2008-இல் அமெரிக்க அதிபராக முடிந்தது என்றால் அதற்கு கேஷியஸ் மார்செலஸ் க்ளே என்கிற இயற்பெயர் கொண்ட குத்துச்சண்டை வீரர் முகமது அலியும் ஒரு காரணம் என்று சொன்னால் தவறில்லை. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நீதிபதி துர்குட் மார்ஷல் ஆகியோரைப்போலவே அமெரிக்க நிறவெறி சமூகத்தை மாற்றிய பெருமை முகமது அலிக்கும் உண்டு.
பார்க்கின்சன் நோயால் தாக்கப்பட்டிருந்த முகமது அலி, கடந்த வாரம் தனது 74-ஆவது வயதில் இயற்கை எய்தினார். அவர் வெறும் குத்துச்சண்டை வீரராக மட்டும் இருக்கவில்லை. அநீதிக்கும், நிறவெறிக்கும் எதிரான போராளியாக மல்யுத்தக் களத்துக்கு வெளியே அவர் ஆற்றிய பணிகள்தான் அனைவரையும் அவரை அண்ணாந்து பார்க்க வைத்தன.
நிறவெறிக்கு எதிரான அவரது கொள்கைப்பிடிப்பும், போராடும் குணமும் மரபணுவிலேயே ஊறியது. அவரது கொள்ளுத்தாத்தா கேஷியஸ் க்ளே 19-ஆம் நூற்றாண்டில் நிறவெறி எதிர்ப்புப் போராளிகளில் ஒருவர். அவரது பெயர்தான் முகமது அலிக்கு சூட்டப்பட்டது.
ஆரம்ப காலங்களில் அமெரிக்காவில் கறுப்பர்களுடன் வெள்ளையர்கள் குத்துச்சண்டையோ, மல்யுத்தமோ, ஏன் எந்தவொரு விளையாட்டிலும் கலந்து கொள்வதில்லை என்கிற நிலைமை இருந்து வந்தது. முகமது அலி களமிறங்கும்போது, அந்த அவலம் அகன்று விட்டிருந்தது. நிறவெறிகொண்ட அமெரிக்கர்கள் மீதான அவரது கோபமும் ஆத்திரமும்தான் கேஷியஸ் க்ளேயை இஸ்லாமுக்கு மதம்மாறச் செய்தன.
1960-இல் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தொழில்முறை வீரராக அல்லாமல் தங்கப் பதக்கம் வென்றிருந்த முகமது அலியின் முதல் பரபரப்பு வெற்றி 1964-இல், அன்றைய உலக ஹெவிவெய்ட் சாம்பியன் சன்னி லிஸ்டனைத் தோற்கடித்தபோது நிகழ்ந்தது. அதுமுதல் தொழில்முறை குத்துச்சண்டை உலகில் முகமது அலியின் சகாப்தம் தொடங்கி விட்டது.
புகழின் உச்சியில் இருக்கும்போது வியத்நாம் போருக்கு எதிராக அவர் எடுத்த முடிவு அமெரிக்காவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1967-இல் அமெரிக்கர்கள் அனைவரும் வியத்நாமில் நடக்கும் போரில் பங்குபெறக் கட்டாயப்படுத்தப்பட்டபோது, முகமது அலியிடமிருந்து எதிர்ப்புக் குரல் எழுந்தது. ""முடியாது! பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு ஏழை நாட்டின் மக்களைக் கொன்று குவித்து உலகமெல்லாம் கறுப்பு இனத்தவரை வெள்ளையர்கள் அடிமைகளாக்குவதற்காக நான் போரிடத் தயாராக இல்லை. எனக்கும் வியட்காங்க் கொரில்லா போராளிகளுக்கும் எந்த விரோதமும் இல்லை. அவர்கள் என்னை "நீக்ரோ' என்று கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தவில்லை. பிறகு நான் எதற்காக அவர்களைக் கொன்று குவிக்கப் போரிட வேண்டும்'' என்று முகமது அலி எழுப்பிய கேள்வி அமெரிக்காவின் வெள்ளை வர்க்கத்தினரை ஆத்திரமூட்டியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. உலகமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது முகமது அலியின் கேள்வி.
அவரது எதிர்ப்புக்காக அவர் கொடுத்த விலை மிகமிக அதிகம். அவர் கைது செய்யப்பட்டார். அவரது பதக்கங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. அவர் குத்துச்சண்டையில் கலந்துகொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகள் எதுவும் செய்யாமல் அவர் அடைந்து கிடக்க நேர்ந்தது.
குத்துச்சண்டை வீரராக புகழின் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் வேளையில், நிறவெறிக்கு எதிரான தனது கொள்கைப் பிடிப்புக்காக முகமது அலி செய்த மிகப்பெரிய தியாகம் அது. வேறு எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் அந்தத் துணிவும், பிடிவாதமும், மனஉறுதியும் இருந்திருக்காது. ஆனால், அவரது பொறுமை வென்றது. 1971-இல் அமெரிக்க உச்சநீதிமன்றம் அவரது மனசாட்சியின் குரலை அங்கீகரித்து அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.
முகமது அலி மீண்டும் குத்துச்சண்டை மேடையில் புயலாக நுழைந்தார். 1974-இல் காங்கோவில் நடந்த போட்டியில் ஜார்ஜ் போர்மனையும், 1975-இல் பிலிப்பின்ஸ் நாட்டில் நடந்த போட்டியில் ஜோ பிரேஸியரையும் வென்று, குத்துச்சண்டை மாவீரன் தான்தான், தான் மட்டுமே என்று நிரூபித்தார் அலி. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அவரது அந்த வெற்றிகள் உலகளாவிய அளவில் எத்தகைய பரபரப்பை ஏற்படுத்தின என்பது.
1981-இல் குத்துச்சண்டைக் களத்திலிருந்து முகமது அலி ஓய்வுபெற்றபோது, மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தியிருந்தார்.
61 முறை ஹெவிவெய்ட் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று அதில் 56 முறை வென்றிருக்கிறார். அதில் 37 முறை நாக்-அவுட் வெற்றிகள். அதாவது எதிராளி எழுந்திருக்கவே முடியாத அளவிலான "பஞ்ச்' கொடுப்பது.
குத்துச்சண்டைப் போட்டிகளில் முகத்திலும் தலையிலும் பலமுறை பலமான குத்துக்கள் விழுந்திருந்ததால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பார்க்கின்சன் நோயால் தாக்கப்பட்ட நிலையிலும் அவரது பொதுவாழ்க்கை தடைபட்டுவிடவில்லை. நிறவெறிக்கு எதிராக, போதை மருந்துகளுக்கு எதிராக, உலக சமாதானத்துக்காக முகமது அலியின் பணி தொடர்ந்தது. சதாம் உசேனுக்கு எதிரான "பாலைவனப் புயல்' தாக்குதலை அமெரிக்கா தொடங்குவதற்கு முன்னால், முகமது அலி சமாதானத் தூதுவராகச் சென்று இராக்கில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 15 அமெரிக்கர்களை விடுவித்ததை உலகம் ஒருநாளும் மறக்காது.
இன்று கறுப்பினத்தவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் உலக சாதனை படைக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு லட்சிய நாயகனாகவும் முன்னோடியாகவும் திகழ்ந்தவர் முகமது அலி. வெறும் குத்துச்சண்டை வீரரல்ல, சரித்திரத்தில் மறக்க முடியாத இடத்தைப் பிடித்த சமூகப் போராளி முகமது அலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.