விடுங்கள் இந்த விவகாரத்தை!

இந்த வழக்கை மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை என்று இப்போது காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. ஏனென்றால், 2012-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான், கேரள கடற்பகுதியில் 2 மீனவர்கள், என்ரிகா லெக்ஸி கப்பலின் காவலர்கள் லடோர், கிரோன் ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Updated on
2 min read

நான்கு ஆண்டுகளாகத் தீர்வு காணப்படாத விவகாரமாக இருந்து வரும் இத்தாலிய வணிகக் கப்பலின் காவலர்கள் மீதான கொலை வழக்கு, இன்னும்கூட பல ஆண்டுகள் நீடிக்கப் போகிறது என்பது தெளிவாகிவிட்டது. இதற்குக் காரணம் நீதித்துறை அல்ல; இந்திய அரசு.
 இந்த வழக்கை மத்திய அரசு சரியாகக் கையாளவில்லை என்று இப்போது காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. ஏனென்றால், 2012-ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான், கேரள கடற்பகுதியில் 2 மீனவர்கள், என்ரிகா லெக்ஸி கப்பலின் காவலர்கள் லடோர், கிரோன் ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.எம். கிருஷ்ணா.
 மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், அரசியல்வாதிகள் தங்களை மீனவர்களுக்கு பாதுகாவலர்கள் எனக் காட்டிக்கொள்வதில் எடுத்துக்கொண்ட அக்கறையை இதுதொடர்பான மற்ற விஷயங்களில் காட்டவில்லை. இந்த வழக்கின் புலன்விசாரணையைத் துரிதப்படுத்தவும், இந்த வழக்கை சர்வதேசக் கடல் குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றுவதிலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இதை ஒரு கௌரவப் பிரச்னையாகக் கருதியது.
 இந்த விவகாரத்தில் இத்தாலியர்களுக்குச் சாதகமாக நடந்தால் அது சோனியா காந்தியின் தலையீட்டால் நடந்தது என்று அரசியலாக்கப்படும் என்று மன்மோகன் அரசு பயந்ததுதான் பிரச்னை இழுத்தடிக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம்.÷
 இந்த சம்பவத்தில் தங்களை நோக்கி நெருங்கி வந்த செயின்ட் ஆன்றணி மீன்பிடிப் படகில் கடற்கொள்ளையர்கள் இருப்பதாகக் கருதியதால் சுட்டோம் என்று என்ரிகா லெக்ஸி காவலர்கள் தெரிவித்தார்கள். அடுத்ததாக, இந்த சம்பவம் சர்வதேச கடல் பரப்பில் நடைபெற்றதால் இதை விசாரிக்கும் உரிமை இந்திய நீதித்துறை வரம்புக்குள் வராது என்றார்கள். இந்த இரு வாதங்களையும் இந்திய அரசு மறுத்தது. ஆனால், இன்றைய தேதி வரையிலும் இந்த இரு கூற்றையும் நிராகரிப்பதற்கான ஆதாரங்களை இந்திய அரசு முன்வைக்கவில்லை. எல்லாக் கொலை வழக்குகளையும் போல இதையும், கடந்த நான்கு ஆண்டுகளாக இழுத்தடித்தது.
 இறந்தவர்கள் குடும்பங்களுக்கு இத்தாலிய அரசு, நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண மேற்கொண்ட முயற்சிகளை கேரள உயர்நீதிமன்றம் ஏற்றபோதிலும், உச்சநீதிமன்றம் அதனை நீதியை மலினப்படுத்தும் முயற்சியாகக் கருதி, ஏற்க மறுத்தது.
 உச்சநீதிமன்றத்தில், இதுதொடர்பான வழக்கில், அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரின் ராவல் வாதாடியபோது (ஏப்ரல் 20, 2012) துப்பாக்கிச் சூடு நடந்த வேளையில், என்ரிகா லெக்ஸி இந்தியக் கடற்பரப்பில் இல்லை என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த வாதத்தை அத்தோடு முடித்துக்கொள்ள வைத்தார்கள்.
 சம்பவத்தில் இறந்த மீனவர்கள் ஜெலஸ்டின், அஜிஸ் பிங்கி மற்றும் உடன் இருந்த 3 பேரும் ஏன் அந்தக் கப்பலின் அருகில் 50 மீட்டர் இடைவெளிக்குள் செல்ல நேர்ந்தது? தொடர்ந்து 2 நிமிடம் துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில், ஏன் அவர்களது படகு விலகிச் செல்லவில்லை, அல்லது சரணடைந்து "தாங்கள் மீனவர்கள் மட்டுமே, கொள்ளையர்கள் அல்ல' என்பதை நிரூபிக்க எத்தனிக்கவில்லை? இந்த விசாரணையையும் கேரள அரசோ அல்லது இந்திய அரசோ முறையாகச் செய்யவில்லை.
 இறந்தவர் குடும்பங்களுக்கு கேரள அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. ஒருவரது குடும்பத்தினருக்கு வேலையும் அளிக்கப்பட்டது. தமிழக அரசும், இறந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் குடும்பத்துக்கு கருணைத்தொகை அறிவித்தது. ஆனால், என்ரிகா லெக்ஸி அருகே செல்ல வேண்டிய தேவை என்ன என்பதை விசாரிக்கவில்லை.
 கடற்கொள்ளையர்கள் என்பதால் சுட்டதுதான் காரணம் என்றால், துப்பாக்கிச்சூடு நடந்தவுடனே இத்தகைய சம்பவங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைப்படி, உடனடியாக இந்திய கடற்படை மற்றும் சர்வதேச கடற்கொள்ளை தடுப்புப் பிரிவுக்கு ஏன் தகவல் கொடுக்கவில்லை? 70 கி.மீ. தொலைவு கடந்த பிறகுதான் இது குறித்து என்ரிகா லெக்ஸி தகவல் கொடுத்துள்ளது என்கிற வாதத்தை முன்வைத்த இந்திய அரசு, பிப்ரவரி 6, 2014-இல், இவர்கள் மீதான கொலைக் குற்றத்துக்கு "மரண தண்டனைக்கான குற்றம்' என்ற பிரிவைத் தளர்த்தியது ஏன்?
 இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா, இத்தாலி இரு நாடுகளின் பிரதமர்கள், வெளியுறவுத் துறை அமைச்சர்கள் எல்லாரும் பேசிப் பேசி முடியாத பிரச்னைக்கு ஐ.நா. சர்வதேச தீர்ப்பாயம் ஒரு தீர்வாக, இந்தியாவில் இருக்கும் இத்தாலி வீரரை அவரது நாட்டுக்குத் திரும்புவதற்கு இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.
 இந்தத் தீர்ப்பிலும்கூட, தனது கௌரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறது இந்தியா. "சம்பவம் நடந்த இடம் இந்தியாவின் அதிகார எல்லை என்பது நிரூபணமானால், என்ரிகா லெக்ஸி காவலர்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்ப்பாயம் சொல்லியிருப்பதே, இந்திய நீதிமன்றத்துக்குக் கிடைத்த வெற்றி' என்று சொல்கிறது வெளியுறவுத் துறை.
 செயற்கைக்கோள், தகவல் தொழில்நுட்பம் எல்லாமும் இருந்தும், சம்பவத்தின்போது என்ரிகா லெக்ஸி இந்திய கடல் எல்லையில் இருந்ததா, இல்லையா என்பதை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தீர்மானிக்க முடியவில்லை என்றால், அது இந்தியாவின் பலவீனமா அல்லது மெத்தனமா? உலக அளவிலான உறவைப் பாதிக்கும் ஒரு விவகாரத்தை சர்வதேச தீர்ப்பாயமே தீர்ப்பளிக்க விட்டுவிடுவதில் என்ன நட்டம்?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com