குஜராத் மாநிலத்தில் உயர்ஜாதி பிரிவினரில், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாதவர்களுக்காக 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஆனந்தி பென் அறிவித்திருப்பதற்குப் பொதுவாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், இந்த நடைமுறைக்கு அனைத்து மாநிலங்களும் விரைவிலேயே மாற வேண்டிய கட்டாயம் உருவாகும் என்பது உறுதி.
அதற்கு இரண்டு காரணங்கள்: கல்வி வேலைவாய்ப்பில் தற்போதைய இடஒதுக்கீட்டு முறையில் அனுமதிக்கப்படும் வரிசை தாண்டல் (கியு ஜம்பிங்), மற்றும் ஏற்கெனவே பயனடைந்தோரே (கிரீமி லேயர்) மீண்டும் மீண்டும் பயனடைதல் ஆகியவற்றின் காரணமாக, மற்ற சமூகத்தினர் அனைவரும் தங்களைத் தாழ்த்தப்பட்டவராக அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துகின்றனர். இது முதல் காரணம்.
இரண்டாவது காரணம், வேலைவாய்ப்புகளை அதிகரித்துப் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் இருப்பது. கடந்த 15 ஆண்டுகளாகப் பல லட்சம் பேர் விவசாயத்தைத் துறந்து, வேலைதேடி நகரங்களைச் சரணடைந்தவண்ணம் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் கட்டடப் பணியாளர்களாகப் பிழைப்புக்கு வழி தேடுகிறார்கள். கட்டடப்பணியைத் தவிர தொழில் துறையோ, சேவைத் துறையோ குறிப்பிட்ட அளவில் வேலைவாய்ப்புப் பெருக்கத்துக்கு உதவுவதில்லை. இதற்கு அரசியல் கொள்கைகளும்கூட ஒரு காரணம்.
குஜராத் மாநிலத்தில் முன்னேறிய சமூகமாகக் கருதப்படும் படேல் சமூகத்தினரின் போராட்டம் தங்களைத் தாழ்த்தப்பட்டோராக அறிவிக்க வேண்டும் என்பதே. ஒரு முன்னேறிய சமூகத்தை தாழ்த்தப்பட்டோராக ஆணை பிறப்பித்து அவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கச் செய்வதைக் காட்டிலும் உயர்ஜாதியினரில் நலிந்தோருக்கு 10% இடஒதுக்கீடு அளிப்பது எவ்வளவோ மேலானது.
50%-க்கு மேலாக இடஒதுக்கீடு அளிக்க சட்டத்தில் இடமில்லை என்றும், இடஒதுக்கீடு உயர்ஜாதியினருக்குப் பொருந்தாது என்றும், இது தவறான முன்னுதாரணம் என்றும் பலவாறாக விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும், எல்லா ஜாதியினரும் தங்களைத் தாழ்த்தப்பட்டோராக அறிவிக்கக் கோரும் அடிப்படைக் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்ய யாரும் தயாராக இல்லை.
இடஒதுக்கீடு பட்டியலில் இடம்பெறாமல், பொது ஒதுக்கீட்டில் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டிய முன்னேறிய சமூகத்தினர், பொதுப் பிரிவில் தங்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன, அல்லது மற்றவர்கள் எடுத்துக்கொள்வதால் குறைகின்றன என்பதால்தான், தங்களையும் தாழ்த்தப்பட்டோராக அறிவிக்கக் கோருகிறார்கள்.
தமிழகத்தில் இடஒதுக்கீடு 69% ஆக இருந்தாலும், மற்ற மாநிலங்களில் இடஒதுக்கீடு 49% அளவில்தான் உள்ளது. மீதமுள்ள சுமார் 50% இடங்களில் பொதுப் பிரிவில் இடம் கிடைக்கவில்லை என்பது உண்மைதானா? என்று கேட்டால் உண்மையே. இதற்கு உதாரணமாக, மருத்துவம் மற்றும் பொறியியல் கலந்தாய்வுகளைக் குறிப்பிடலாம்.
தமிழ்நாட்டில் 8% தாழ்த்தப்பட்டவர்களுக்கும், 27% பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 13% மிகவும் பின்தங்கியவர்களுக்கும், 1% பழங்குடியினருக்கும் ஒதுக்கப்படுகிறது. இவர்களில் "கட்-ஆஃப்' மதிப்பெண் அதிகம் பெற்று கலந்தாய்வில் வருவோர், தங்களுக்கான பிரிவில் இடம் பூர்த்தியாகி இருந்தால் அதே கல்லூரியில் பொதுப்பிரிவில் இடத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
முதலில் இது பெரிய பிரச்னையாக இல்லை. ஆனால், கடந்த 60 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் அரசு உயர் அதிகாரிகளும் வசதி படைத்தவர்களும் அதிகரித்து, அவர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்கும் வசதியும் இருப்பதால், மருத்துவம், பொறியியல் பயில வருவோரின் வாய்ப்புகளை இடஒதுக்கீட்டில் இருப்போரே பொதுப் பிரிவிலும் எடுத்துக்கொள்வது அதிகரித்தது. இது தொடர்பான புள்ளிவிவரங்களை வெளிப்படையாக விவாதித்தால், பொதுப் பிரிவினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இந்தச் சிக்கலுக்கு இரண்டு தீர்வுகள் மட்டுமே உள்ளன.
விண்ணப்பிக்கும்போதே, எந்த இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கிறாரோ அந்தப் பிரிவில் இடம் இல்லை என்றால், வேறு கல்லூரியில் உள்ள அதே பிரிவுக்கான இடத்தைத் தேர்வு செய்யலாமே தவிர, அதே கல்லூரியில் பொதுப் பிரிவில் இடத்தைத் தேர்வு செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதாவது, வரிசை தாண்டுதல் (கியு ஜம்பிங்) தடுக்கப்பட வேண்டும். இதன் மூலம், பொதுப் பிரிவினர் தங்களுக்கான 50% விழுக்காடு இடத்தைக் குறைவின்றி பெற முடியும்.
மேலும், இடஒதுக்கீடு ஜாதிப் பட்டியலில் இடம்பெற்ற மாணவர், தனக்குப் பொதுப் பிரிவில் வாய்ப்பு இருக்கும் என்று கருதினால், அவர் தாராளமாக பொதுப் பிரிவில் விண்ணப்பித்து, அந்த வரிசையில் தனக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
அடுத்ததாக, "கிரீமி லேயரை' அறிவிக்க வேண்டும். கல்வி வேலைவாய்ப்புகளில் ஒரு முறை இடஒதுக்கீட்டுச் சலுகை பெற்று, பொருளாதார நிலையில், சமூக அந்தஸ்த்தில் உயர்ந்திருக்கும் குடும்பத்தினர் மீண்டும் இடஒதுக்கீடு சலுகை பெறுவதைத் தவிர்க்கச் செய்யும் நடைமுறையை உருவாக்க வேண்டும். இந்த நடைமுறையால், இட ஒதுக்கீடு பெற்று முன்னேறியவர்களே மீண்டும் மீண்டும் தொடர்ந்து சலுகைகளை அனுபவிப்பதும், இதனால் இட ஒதுக்கீட்டுச் சலுகை பெறாத குடும்பங்கள் பயனடைய முடியாமல் போவதும் தடுக்கப்படும்.
இத்தகைய சிறிய நிபந்தனைகள் இருக்குமானால், எந்த ஒரு முன்னேறிய சமுதாயமும் தங்களை பின்தங்கிய சமுதாயமாக அறிவிக்கக் கோரும் போராட்டங்களை நடத்தாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

30 மி.மீ. ஆளில்லா பீரங்கிகள்: டிஆா்டிஓ தயாரிப்பு

இன்றைய ராசி பலன்கள் (26 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு நன்மை!

மேஷ ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

