உள்ளீடற்ற பூரிப்பு!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 91.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது. மாணவர்களை வாழ்த்துகிறோம். குறிப்பாக, அரசு மேனிலைப் பள்ளிகளில் படித்து, ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுமே பாராட்டுக்குரியவர்கள். இவர்களுக்கு "தினமணி'யின் தனிவாழ்த்து உண்டு.
Updated on
2 min read

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 91.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது. மாணவர்களை வாழ்த்துகிறோம். குறிப்பாக, அரசு மேனிலைப் பள்ளிகளில் படித்து, ஆயிரத்துக்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவர்களுமே பாராட்டுக்குரியவர்கள். இவர்களுக்கு "தினமணி'யின் தனிவாழ்த்து உண்டு.
 தனியார் மேனிலைப் பள்ளிகளில் (மெட்ரிக் மற்றும் தமிழ்வழி) பயின்ற 2,28,410 மாணவர்களில் 98% தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கும் நமது வாழ்த்துகள்.
 அரசுப் பள்ளிகளில் பயின்று தேர்வு எழுதிய 3.42 லட்சம் மாணவர்களில் 85% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் பரவலாக உள்ளன. இந்தப் பள்ளிகள் கிராமப்புறங்களில் நடைபெறுபவை. அதனால், அரசாலும், அதிகாரிகளாலும் தொடர் கண்காணிப்பு சாத்தியமில்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மாநகராட்சிப் பள்ளிகளில் 11,037 மாணவர்களும் நகராட்சிப் பள்ளிகளில் 8,641 மாணவர்களும் பயின்று தேர்வு எழுதியதில் மாநகராட்சி பள்ளிகள் 87%, நகராட்சி பள்ளிகள் 84% மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளன.
 மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் இருக்கும் பள்ளிகளைக்கூட, சரியாகக் கண்காணிக்கவும், கல்வி வழங்கவும் முடியவில்லை என்பது வேதனைக்குரியது. மாநகராட்சி, நகராட்சிகளில் பல்வேறு அமைப்புகள் தாமாகவே முன்வந்து இந்த மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தயாராக உள்ளன. அதற்கான நிதியுதவி மற்றும் நிபுணத்துவம் பெற்ற தனிஆசிரியர்களை நியமிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மாநகராட்சிகளும் நகராட்சிகளும் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பது வேதனையளிக்கிறது.
 கற்பித்தல் பணியில் அர்ப்பணிப்புள்ள, அதிக உழைப்புத் தரக்கூடிய ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் மட்டுமே சாத்தியம் என்ற கருத்தை உடைக்கமுடியவில்லை. அனைத்துப் பாடங்களையும் தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கே அரசின் தர வரிசைப் பட்டியல், பரிசுகள் என்ற நிலையை உருவாக்கவும் தமிழக அரசு தயாராக இல்லை. இதனால், அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து கொண்டே போகிறது. தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. தேசிய அளவிலான தேர்வுகளில் பங்குபெறும் அளவுக்கு நமது கிராமப்புற அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதில் யாருக்குமே அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. கல்வியின் தரம் உயர்த்தப்படாவிட்டால், தனியார் மெட்ரிக் பள்ளிகளும் விரைவிலேயே சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாறும் சூழல் ஏற்படும் என்பதுதான் எதார்த்த உண்மை நிலை.
 அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு மிஷனரி போல, தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும், மழலை வகுப்புகள் முதல் பிளஸ்2 வரை உள்ள ஓர் இலவச மேனிலைப் பள்ளி, ஓர் இலவச கலைக்கல்லூரி, ஓர் இலவச பொறியியல் கல்லூரி தொடங்கியிருந்தாலும் மக்கள் பயனடைந்திருப்பார்கள். தமிழ்வழிக் கல்வியும் வளர்ந்திருக்கும், கட்சிக்கும் வாக்குவங்கி உருவாகியிருக்கும். அதை விட்டுவிட்டு, அரசியல்வாதிகளைப் பள்ளிகள் தொடங்க அரசு அனுமதித்தது; அவர்கள் கல்விச் சாலைகளை வணிகச் சாலைகளாக மாற்றிவிட்டனர். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து விடாமலும் பார்த்துக் கொள்கிறார்கள்.
 கடந்த ஆண்டைவிட 0.8% தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்தத் தேர்ச்சி விகித அதிகரிப்பு - வெறும் உள்ளீடற்ற பூரிப்பு; நுரைப்பு.
 பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய 8,33,682 மாணவர்களில் 7,61,725 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், இத்தேர்வில் 60 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 4,99,463. கருணை மதிப்பெண்களை மறந்துவிட்டு, உண்மையான விடைத்தாள் மதிப்பீடு என்று இவர்களை மட்டுமே கருத்தில் கொள்வதெனில், தேர்ச்சி விகிதம் 57% மட்டுமே. இவர்களால் மட்டுமே உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பெறவும், உயர்கல்வியைத் தொடரவும் சாத்தியப்படும்.
 60%-க்கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்களால் உயர்கல்வியில் இடம் பெறுவது இயலாது. தமிழ்நாட்டில் 1,382 கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளும், 550 பொறியியல் கல்லூரிகளும், 449 பாலிடெக்னிக்குகளும் உள்ளன. இவற்றில் சேர்வதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்தால், 60%-க்கு குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் நிச்சயமாக இடம் கிடைத்துப் பயில்வது சாத்தியமில்லை.
 இந்த உயர்கல்வி நிலையங்களிலும்கூட அதிகபட்சம் சுமார் 3 லட்சம் பேருக்குத்தான் இடங்கள் உள்ளன. ஆக, 60%-க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த 3 லட்சம் இடங்களுக்குப் போட்டி போடுவார்கள். அப்படியானால் மற்ற மாணவர்களின் நிலைமை என்ன?
 பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே வரும் ஒரு மாணவருக்கு பிளஸ் 2 தேர்ச்சி என்பது அவரது உயர்கல்விக்கு அல்லது தொழில்வாய்ப்புக்கு உதவுவதாக இருக்க வேண்டுமே தவிர, வெறும் சான்றிதழாக இருத்தல் கூடாது.
 பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறும் 7.6 லட்சம் மாணவர்களில் வெறும் 3 லட்சம் மாணவர்கள் மட்டுமே உயர்கல்வி பயில முடியும் என்பதும், சுமார் 2.6 லட்சம் மாணவர்கள் வெறுமனே தேர்ச்சி (ஜஸ்ட் பாஸ்) என்ற அளவில் பின்தங்கிவிடுவதும் ஆரோக்கியமான சூழலை உருவாக்காது. 91.4% தேர்ச்சி என்றாலும், 100% தேர்ச்சி என்று, "ஆல்-பாஸ்' என்று சொன்னாலும், இத்தகைய சூழ்நிலை இருக்கும்போது இந்தக் கல்வியின் மீது என்ன மதிப்பு ஏற்படும்?
 தனியார்மயமான பிறகு, கல்வி குறித்த சிந்தனையே இல்லாமல் அரசுகள் இருப்பதுதான் அடிப்படைத் தவறு!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com