அரசு நிறுவனமான ஏர் இந்தியாவை இன்னும் நாம் கட்டிச் சுமக்க வேண்டுமா என்கிற கேள்வி பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு, முடிவெடுக்கப்படாமல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்தியா போன்ற பன்முகத்தன்மையுடைய நாட்டில், போக்குவரத்தும், தகவல் தொடர்பும் அரசு வசம் இருப்பதுதான் பாதுகாப்புக்கு உகந்தது என்பதில் சந்தேகமே இல்லை. அதே நேரத்தில், அந்த ஒரே காரணத்துக்காக, தொடர்ந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட வேண்டுமா என்கிற கேள்வியை ஒதுக்கித் தள்ளவும் முடியாது.
ஏதாவது ஒரு காரணத்துக்காக மாதத்தில் ஒரு தடவையாவது ஏர் இந்தியா செய்தியில் அடிபடுவது கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. எல்லா செய்திகளுமே ஏர் இந்தியா குறித்த பெருமையைப் பேசாமல் அந்த நிறுவனத்தின் குறைபாடுகளையும், தவறுகளையும் வெளிப்படுத்துவதாகவும் அமைகின்றன என்பதுதான் நிஜம். ஏர் இந்தியாவின் தரமற்ற சேவை, பாதுகாப்பில் குறைபாடு, ஊழியர்களின் மெத்தனப்போக்காலோ, செயல்பாடுகளாலோ பயணிகள் அவதிக்கு உள்ளாவது, குறிப்பிட்ட நேரத்திற்கு விமானங்கள் இயக்கப்படாமல் இருப்பது இப்படி எத்தனை எத்தனையோ பிரச்னைகள் ஏர் இந்தியாவை செய்தியில் தொடர்ந்து அடிபட வைத்துக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, ஏர் இந்தியா எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்துச் சொல்லவா வேண்டும்?
"பிளைட் ஸ்டார்ட்ஸ்' என்பது சர்வதேச அளவில் விமான நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளிவிவரங்களை ஆண்டுதோறும் வெளியிடும் நிறுவனம். இந்த நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, குறித்த நேரத்திற்கு செயல்படும் விமான நிறுவனங்களின் பட்டியலில், உலகத்திலேயே மூன்றாவது மிக மோசமான விமான நிறுவனம் என்கிற அவப்பெயரைப் பெற்றிருக்கிறது "ஏர் இந்தியா'. இந்த அறிக்கையை அரசுத் தரப்பு நிராகரித்தாலும், அந்த அறிக்கையில் தரப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
ஏர் இந்தியாவின் நிலைமை குறித்து அரசும், வரி செலுத்தும் நாமும் கவலைப்பட்டாக வேண்டும். அரசு நிறுவனமான ஏர் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகளை நமது வரிப்பணத்தின் மூலம்தான் அரசு ஈடுகட்டுகிறது என்பதையும், இந்த முதலீடு வேறுபல நல்ல திட்டங்களுக்குப் பயன்படும் என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.
1990 வரையில் வேறு போட்டி எதுவும் இல்லாததால், ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் ஆகிய அரசுத்துறை நிறுவனங்கள் வைத்ததுதான் இந்திய விமானத்துறையில் சட்டமாக இருந்தது. அரசியல்வாதிகளின், குறிப்பாக, ஆட்சியாளர்களின் ஏகபோக வசதிக்காகவே இந்த விமான சேவைகள் நடத்தப்பட்டு வந்தன என்று சொன்னால்கூடத் தவறில்லை. பொருளாதார தாராளமயக் கொள்கையை 1991-இல் நரசிம்ம ராவ் அரசு அறிவித்து, தொடர்ந்து பல தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியபோதுதான், நமது அரசுத்துறை விமான நிறுவனங்
களில் எந்த அளவுக்கு சேவையும், நேரக்கட்டுப்பாடும் சீர்குலைந்திருக்கின்றன என்பது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.15,000 கோடிக்கு மேல் நமது வரிப்பணம் அரசால் ஏர் இந்தியாவை நடத்துவதற்காகத் தரப்பட்டிருக்கிறது. அப்படிக் கொடுத்தும்கூட நிலைமை சீரடைந்து, செயல்பாடுகள் மேம்பட்டனவா என்றால் இல்லை. நடப்பு நிதியாண்டையே எடுத்துக்கொண்டால், முதல் காலாண்டில் மட்டும் ஏற்பட்டிருக்கும் இழப்பு ரூ.246 கோடி. அதற்குப் பிறகு நிலைமை மேலும் சீர்குலைந்திருக்கும் நிலையில், இந்த நிதியாண்டின் இழப்பு குறைந்தது ரூ.1,000 கோடியைத் தாண்டும்.
இப்படி இழப்பு ஏற்படுவதில்கூடத் தவறில்லை. இந்த இழப்புக்கு யாருமே பொறுப்பேற்பதில்லை என்பதும், இழப்பைத் தடுப்பதற்கான எந்தவித முயற்சியையும் எடுப்பதில்லை என்பதும்தான் வேதனை. ஆட்சி மாறும்போதெல்லாம் விமானத்துறை அமைச்சர்கள் மாறுகிறார்கள், ஏர் இந்தியா நிறுவன நிர்வாகிகள் மாறுகிறார்கள். நிறுவனத்தின் இழப்புக்கு அவர்கள் அனைவருமே முன்வைக்கும் ஒரே தீர்வு, மக்கள் வரிப்பணத்தைக் கொண்டு இழப்பை ஈடுகட்டுவது என்பதாக மட்டுமே இருந்து வருகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் என்னதான் நடந்து வருகிறது என்பது யாருக்குமே தெரிவதில்லை. "சென்டர் பார் ஏசியா பசிபிக் ஏவியேஷன்' என்கிற நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, 2007 - 2013 காலகட்டத்தில் மட்டுமே ஏர் இந்தியாவின் இழப்பு ரூ.34,635 கோடி. அதன் மொத்த கடன் ரூ.46,500 கோடி. இதை ஈடுகட்ட, அன்றைய மன்மோகன் சிங் அரசு ரூ.30,000 கோடியை அந்த நிறுவனத்திற்குப் பங்குத் தொகையாக எட்டு ஆண்டுகளில் தவணை முறையில் அளித்து, அதன் இழப்புகளை ஈடுகட்ட முடிவெடுத்தது. இப்போதையே நிலைமை என்ன என்பது அடுத்த நிதிநிலை அறிக்கை வந்த பிறகுதான் தெரியும்.
ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரின் வசதிக்காக இன்னும் எத்தனை காலம் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கிக் கொண்டிருக்கப் போகிறோம்? இந்தியாவிலுள்ள 132 விமான நிலையங்களை மேம்படுத்துவதும் அதிகப்படுத்துவதும் அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, இழப்பில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை மக்கள் வரிப்பணத்தை வீணாக்கிக் கட்டிச் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. ஊழியர்களே எடுத்து நடத்துவதாக இருந்தால் அவர்களிடமே விட்டுவிடலாம்! இல்லையென்றால், தனியார்மயமாக்குவதுதான் ஏர் இந்தியா பிரச்னைக்கு ஒரே தீர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.