தமிழுக்கு இழப்பு!

ஆளுமைகள் ஏதாவது ஒரு

ஆளுமைகள் ஏதாவது ஒரு துறையில் தன்னிகரற்று விளங்குவது உலக வரலாற்றில் புதிதல்ல. ஒரு சிலருக்கு மட்டும்தான் தாங்கள் செயல்படும் எல்லா துறைகளிலும் தனி முத்திரை பதிப்பதும், தடம் பதிப்பதும் சாத்தியமாகியிருக்கிறது. அப்படிப்பட்ட பல்துறை ஆளுமைகளில் ஐராவதம் மகாதேவனும் ஒருவர். "தினமணி'யின் முன்னாள் ஆசிரியரும், கல்வெட்டு ஆய்வாளரும், தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவருமான ஐராவதம் மகாதேவனின் மறைவை தமிழுக்கே ஏற்பட்டிருக்கும் பேரிழப்பு என்று கூறுவதில் எந்தவிதத் தயக்கமும் இருக்க முடியாது. 

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகத் தேர்வு பெற்றவர் ஐராவதம் மகாதேவன். அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவால் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியாகப் பணியேற்கப் பணிக்கப்பட்டபோது, அதை ஏற்றுக்கொள்ளாமல் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாகப் பணியாற்றத்தான் தனக்கு விருப்பம் என்று துணிந்து கூறி அரசு நிர்வாகத்தில் தனி முத்திரை பதித்தவர் அவர். ஐராவதம் மகாதேவனின் நிர்வாகத்தில் கண்டிப்பும் நேர்மையும் சமரசம் செய்து கொள்ள முடியாத இரண்டு இயல்புகள். இந்த இயல்புகளுடன் தொடர்வது நடைமுறை சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அடுத்த நொடியில், அவர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து விலகிவிட்ட அவரது துணிவு, இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளால் இன்றும்கூட நினைவு கூரப்படுகிறது. 

'தினமணி' ஆசிரியராக ஐராவதம் மகாதேவன் நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். அந்த நான்கு ஆண்டுகளில் இதழியல் பணியிலும் அவர் தனது முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. எந்த ஒரு காரணத்துக்காகவும் தனக்கு சரி என்று பட்ட கருத்தைத் துணிந்து, பதிவு செய்ய அவர் தவறவில்லை. அதுவரை "தலையங்கம்' என்று அழைக்கப்பட்டு வந்ததை, "ஆசிரியர் உரை' என்று அவர் அழைக்க முற்பட்டது காரணமல்லாமல் அல்ல. ஆசிரியரின் கருத்தை பிரதிபலிக்கும் பகுதி "ஆசிரியர் உரை' என்றுதான் அழைக்கப்பட வேண்டும் என்பதில் அவருக்குக் கருத்துத் தெளிவு இருந்தது. 

அதேபோல, நாளிதழுக்கு மொழியின் வளர்ச்சியில் அக்கறை இருந்தாக வேண்டும் என்பதில் ஐராவதம் மகாதேவன் உறுதியாக இருந்தார். அதனால்தான் "தமிழ்மணி' என்கிற பகுதி அவர் ஆசிரியராக இருந்தபோது தொடங்கப்பட்டது. அவருக்குப் பிறகு பல ஆண்டுகள் அந்தப் பகுதி கைவிடப்பட்டபோது மிகுந்த வேதனையும், மீண்டும் தொடங்கப்பட்டபோது அதீத மகிழ்வும் அவருக்கு ஏற்பட்டதற்குக் காரணம், தமிழ் மீது கொண்ட தாளாப்பற்று என்பதை பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

இன்று பரவலாகப் "பெரியார் எழுத்து' என்று அழைக்கப்படும் எழுத்துச் சீர்திருத்தம், உண்மையில் ஐராவதம் மகாதேவன் ஏற்படுத்திய இதழியல் சீர்திருத்தம். தமிழகத்தில் முதன்முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தை "தினமணி' நாளிதழில் அன்றைய ஆசிரியராக இருந்த ஐராவதம் மகாதேவன்தான் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்துதான் அனைத்து இதழ்களும் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தின என்பது வரலாற்று உண்மை.
ஐராவதம் மகாதேவனின் மிகப்பெரிய பங்களிப்பு கல்வெட்டியல் துறையில்தான். "தமிழ்த்தாத்தா' உ.வே. சாமிநாதைய்யர் வீதி வீதியாக, வீடு வீடாக ஓலைச் சுவடிகளைத் தேடிச்சென்று தமிழகத்தின் தலைசிறந்த சங்கத் தமிழ் இலக்கியங்களை அடையாளம் கண்டு பதிப்பித்த தொண்டுக்கு இணையான பங்களிப்பு, ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பு. உ.வே.சா-வை, தனது வழிகாட்டியாகவும், குருநாதராகவும் போற்றி வழிபட்ட ஐராவதம் மகாதேவன் காடு, மலை, கோயில், குளம் எல்லாம் சுற்றித் திரிந்து கல்வெட்டுகளைத் தேடி ஆய்வு செய்து தமிழுக்கு ஆற்றியிருக்கும் பணி அளப்பரியது. 

தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைப்பதற்கு உ.வே.சா.வின் பங்களிப்பு எந்தளவுக்கு இன்றியமையாததாக இருந்ததோ, அதே அளவு முக்கியமானது தமிழின் தொன்மைக்குச் சான்று பகரும் ஐராவதம் மகாதேவனின் கல்வெட்டியல் கண்டுபிடிப்புகள். "தமிழ் பிராமி' என்கிற எழுத்தை  அடையாளம் கண்டு, அதற்கு ஆய்வாளர்களின் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்த பெருமை அவருடையது. சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் பண்டைய தமிழர் நாகரிகத்துக்கும் இடையேயான தொடர்பை உறுதிப்படுத்தும் சான்றுகள் ஐராவதம் மகாதேவனின் கல்வெட்டியல் ஆய்வால்தான் கிடைக்கப்பெற்றன.

30 ஆண்டுகளுக்கு முன்பு கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக "தினமணி' நாளிதழின் மூலம் முதல் குரல் எழுப்பிய பெருமை அன்றைய ஆசிரியர் ஐராவதம் மகாதேவனையே சாரும். தன்னை இதழியலாளராக, தமிழறிஞராக, கல்வெட்டு ஆய்வாளராக மட்டுமே கருதாமல் ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலன் பேணும் சிந்தனையாளராக அவர் செயல்பட்டார் என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு.  

அவர் "தினமணி' ஆசிரியராகப் பதவி வகித்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்திலும் இந்தியாவிலும் நடைபெற்ற ஒவ்வொரு நிகழ்வு குறித்தும் தனது கருத்தைத் துணிந்து பதிவு செய்திருக்கிறார். அவற்றை மீள்பார்வை பார்க்கும்போது, ஐராவதம் மகாதேவனுக்கு இருந்த தொலைநோக்குப் பார்வையின் தீட்சண்யம் நம்மை வியக்க வைக்கிறது. அடிப்படையில் தான் ஒரு சமூக சிந்தனாவாதி என்பதைத் தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது அவரது இதழியல் பங்களிப்பு. 

"தமிழ்த்தாத்தா' உ.வே. சாமிநாதையரைப் போலவே, ஐராவதம் மகாதேவனை அகற்றி நிறுத்திவிட்டு தமிழின் பெருமை குறித்துப் பேசவோ, பெருமிதப்படவோ எந்த ஒரு தமிழனாலும் இயலாது. முன்னாள் ஆசிரியருக்கு, தன்னிகரற்ற தமிழ்த் தொண்டனுக்கு "தினமணி' அஞ்சலி செலுத்தி, அவர் இட்டுத்தந்த பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி பூணுகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com