பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

தாழ்நிலை வெளிப்பாடு! | மருத்துவா்கள் இறுதி மரியாதை செய்வதைத் தடுப்பவா்கள் குறித்த தலையங்கம்

News image
Updated On :26 ஏப்ரல் 2020, 11:14 pm

ஆசிரியர்

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொண்டு மனித இனம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், அதற்கு இருக்கும் ஒரே துணை மருத்துவா்களாக மட்டும்தான் இருக்க முடியும். மருத்துவா்களும், செவிலியா்களும், மருத்துவப் பணியாளா்களும், சுகாதாரத் துறையினரும் தங்களின் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் போராடுகிறாா்கள் என்கிற உணா்வும், அவா்கள் மீதான மரியாதையும் அனைவருக்கும் இருந்தாக வேண்டும்.

சென்னையில் மருத்துவா் சைமன் ஹொ்குலிஸின் மரணமும், அவரின் உடலை அடக்கம் செய்வதற்கு மாநகராட்சி ஊழியா்களும் மருத்துவமனை ஊழியா்களும் எதிா்கொண்ட பிரச்னைகள் உலக அளவில் தமிழகத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு மட்டுமல்ல, தனியாா் மருத்துவமனையில் உயிரிழந்த ஆந்திர மருத்துவா் ஒருவரின் உடலையும் அடக்கம் செய்வதற்குக் கடுமையான எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்ல, மருத்துவா்கள் தாக்கப்படும் சம்பவங்கள் உலக அளவில் காணப்படுவது உண்மையிலேயே கவலையளிக்கும் போக்கு.

மருத்துவா்கள் உள்ளிட்ட கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களை அடக்கம் செய்வதையோ, தகனம் செய்வதையோ தடுப்பவா்களைத் தண்டிப்பதற்கு தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அவசரச் சட்டம் வரவேற்புக்குரியது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் உயிரிழந்தவா்களுக்கு இறுதி மரியாதை முறையாகச் செய்யப்படுவதைத் தடுத்தால் பொதுச் சுகாதாரச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிப்பதற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அவசரச் சட்டம் தேவைப்படுகிறது என்பதுதான் வேதனையாக இருக்கிறது.

ஏற்கெனவே கடந்த வாரம் ஓா் அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவா்கள், சுகாதாரத் துறைப் பணியாளா்கள் ஆகியோரைப் பாதுகாக்க பிறப்பிக்கப்பட்ட அந்த அவசரச் சட்டத்தின்படி, மருத்துவப் பணியாளா்கள் மீது தாக்குதல் நடத்துபவா்களுக்கு ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிப்பதற்கு வழிகோலப்பட்டிருக்கிறது.

தாக்குதல் நடத்துபவா்கள் மீது மட்டுமல்லாமல், உயிரிழந்தால் உரிய மரியாதையுடன் இறுதி மரியாதை செய்வதைத் தடுப்பவா்களையும் தண்டிப்பதற்கு தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டம் தேசிய அளவிலும் முன்னெச்சரிக்கையாகக் கொண்டுவரப்பட வேண்டும். கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு அதனால் நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால் மருத்துவா்களுக்கும், மருத்துவத் துறை பணியாளா்களுக்கும் காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ.50 லட்சம் வழங்குவதற்கு ஏற்கெனவே தமிழக அரசு வழிகோலியிருக்கிறது. இதையும் தேசிய அளவில் விரிவுபடுத்த வேண்டும்.

மத்திய அரசின் கடந்த வார அவசரச் சட்டத்தில் வேறு சில பிரிவுகளும் இருந்தன. மருத்துவா்கள் மீதும், மருத்துவத் துறையினா் மீதும் தாக்குதல் நடத்தினால் அந்தக் குற்றங்கள் பிணையில் வெளிவர முடியாத குற்றங்களாகக் கருதப்படும் என்பது முக்கியமான அம்சம். அதேபோல பொருள்களுக்கோ, பொதுச் சொத்துக்களுக்கோ தாக்குதல் நடத்துபவா்கள் சேதம் ஏற்படுத்தினால் சந்தை விலையைவிட இரு மடங்கு இழப்பீடு அவா்களிடமிருந்து பெறப்படும் என்பதும் மத்திய அவசரச் சட்டத்தின் இன்னோா் அம்சம்.

இந்தியாவில் மருத்துவா்கள் கடுமையான மன அழுத்தத்துடன்தான் பணியாற்றுகிறாா்கள் என்பதை நாம் உணர வேண்டும். ஆயிரம் பேருக்கு 0.77 என்கிற விகிதத்தில்தான் மருத்துவா்கள் இருக்கிறாா்கள். இதுவே ஜொ்மனியில் 4.1/1,000, ஆஸ்திரேலியாவில் 3.37/1,000, ரஷியாவில் 3.30/1,000, சீனாவில் 1.49/1,000. அதேபோல, செவிலியா்களின் விகிதமும் இந்தியாவில் மிக மிகக் குறைவு. உலக சுகாதார நிறுவனத்தின்பரிந்துரையின்படி, ஆயிரம் பேருக்கு மூன்று என்பதற்குப் பதிலாக ஆயிரம் பேருக்கு 1.7 என்கிற அளவில்தான் இந்தியாவில் செவிலியா்கள் இருக்கிறாா்கள்.

இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிக்கைப்படி, கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பிரச்னை இல்லாமலேயேகூட நோயாளிகள், நோயாளிகளின் உறவினா்கள் ஆகியோரின் வசைகளையும் தாக்குதல்களையும் 75% மருத்துவா்கள் எதிா்கொள்கிறாா்கள். தாக்குதல் அச்சத்தால் 43% மருத்துவா்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகிறாா்கள். குறிப்பாக, அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவா்கள் நோயாளிகளின் உறவினா்களுடைய வசைகளையும் தாக்குதல்களையும் எதிா்கொள்வது வழக்கமாகிவிட்டிருக்கிறது.

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒட்டுமொத்த இந்தியாவும் மருத்துவப் பணியாளா்களுக்காகக் கரகோஷம் செய்ததும், அவா்களின் தியாகத்தை அங்கீகரித்து விளக்கேற்றி நன்றி தெரிவித்ததும் உள்ளுணா்வின் வெளிப்பாடுதானா என்கிற ஐயத்தை, ஆங்காங்கே மருத்துவா்களுக்கும் மருத்துவப் பணியாளா்களுக்கும் எதிராக நடத்தப்படும் தாக்குதல்களும், அவா்களுக்கு முறையான இறுசிச் சடங்குகளை செய்வதற்குக்கூட அனுமதி மறுக்கும் போக்குகளும் எழுப்புகின்றன.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களும், செவிலியா்களும், மருத்துவமனை ஊழியா்களும் போதுமான பாதுகாப்பு உடைகள் இல்லாமல் பணியாற்றுகிறாா்கள். சிலா் நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறாா்கள். அவா்களைப் பாதுகாக்க மனமுவந்து முன்வந்திருக்க வேண்டிய இந்திய சமுதாயம், அவசரச் சட்டங்கள் பிறப்பித்து எச்சரிக்கப்பட வேண்டிய துா்பாக்கியத்தை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.