இவையெல்லாம் போதாதென்று இன்னொருபுறம் உணவுப் பொருள்களின் விலைவாசி ஏற்றம் கவலையளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு பொது முடக்கம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சில்லறைப் பொருள்களின் விலைவாசி ஏற்றம் 6.1% அதிகரித்தது. உணவுப் பொருள்களின் விலைவாசி 7.3%, பருப்பு வகைகள் 16.7%, மீன்- இறைச்சி வகைகள் 16.2% என்கிற அளவில் அதிகரித்திருக்கின்றன. சரக்குப் போக்குவரத்து செலவினங்களும், டீசல் - பெட்ரோல் வரி உயர்வால் அதிகரித்திருக்கின்றன. பழங்கள், காய்கறிகளின் விலைவாசி அதிகரிக்கவில்லை என்றாலும், போதுமான உணவுப் பதனக் கிடங்குகள் இல்லாததால் அழுகி வீணாகிப் போனவை மிக அதிகம். வரப்போகும் மாதங்களில் உணவுப் பொருள்களின் விலையை அரசு எப்படிக் கட்டுக்குள் வைத்திருக்கப் போகிறது என்பதைப் பொருத்துத்தான் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.