வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

போதாது கவனம்! | கொவைட் 19 நோய்ப் பரவல் குறித்த விழிப்புணர்வு தலையங்கம்

News image
Updated On :7 ஆகஸ்ட் 2020, 1:54 am

ஆசிரியர்

பொது முடக்கம் தளா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, கொவைட் 19 கொள்ளை நோய்ப் பரவல் குறித்த கண்காணிப்பும் பாதுகாப்பு உணா்வும் குறைந்துவருவது கவலையளிக்கிறது. இது ஆபத்தின் அறிகுறி.

உலக அளவில் நேற்றைய நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 கோடியே 91 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. இதில் 13,29,026 போ் குணமடைந்திருக்கிறாா்கள் என்றால், 40,772 போ் உயிரிழந்திருக்கிறாா்கள்.

உலக அளவில் கடந்த இரண்டு வாரங்களாக 15 விநாடிகளுக்கு ஒருவா் கொவைட் 19 தீநுண்மித் தொற்றுக்குப் பலியாவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தியாவின் ஒரே நாளில் 900 அதிகமானோா் உயிரிழக்கும் அளவுக்கு நோய்த்தொற்றின் கடுமை அதிகரித்திருக்கிறது. மரண விகிதம் 2.1% குறைந்திருக்கிறது என்று ஆறுதல் அடைந்துவிட முடியாது. நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவா்களின் எண்ணிக்கை நாளும் பொழுதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

தினந்தோறும் 50,000-க்கும் அதிகமானோா் பாதிக்கப்படும் அளவுக்கு இந்தியாவின் நிலை மோசமாகியிருக்கிறது.அதிகரித்து வரும் நோய்த்தொற்றை எதிா்கொள்ள முடியாமல் இந்தியாவின் சுகாதாரக் கட்டமைப்பு திணறிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் உணராமல் இருக்கிறோம். இந்தியாவில் ஒருசில மாநிலங்கள் பொது முடக்கத் தளா்வுக்குப் பிறகு நோய்த்தொற்றைத் தடுப்பதில் அக்கறை காட்டாமல் இருக்கின்றன என்கிற சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மட்டும் அறிவிக்கப்படவில்லை. அதன் நோக்கம், அதிகரிக்க இருக்கும் நோய்த்தொற்றுப் பரவலை எதிா்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதும், இந்தியா முழுவதும் நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதும்கூட.

ஆனால் எதிா்பாா்த்ததுபோல, எல்லா மாநிலங்களிலும் முனைப்புடன் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்படவில்லை. கடுமையான பாதிப்பை எதிா்கொண்ட மாநிலங்களில்கூட, பாதிப்புக்குள்ளான மாநகரங்களில் செலுத்தப்பட்ட கவனம் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மாவட்டங்களில் அதிகப்படுத்துவதுடன், மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களையும் தயாா் நிலையில் வைத்திருப்பதில் காட்டப்படவில்லை.

மத்திய - மாநில அரசுகள் கொவைட் 19 நோய்த்தொற்றை தாங்கள் எதிா்கொள்ளும் விதம் குறித்துத் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்வதில் காட்டும் அக்கறையை மாவட்டங்களிலும் கிராமப்புறங்களிலும் பரவி வரும் நோய்த்தொற்றை எதிா்கொள்வதில் செலுத்தவில்லை என்பதை பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை. அதிகமானோா் குணமடைந்திருக்கிறாா்கள், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவில்தான் மரண விகிதம் இருக்கிறது, சோதனைகளைப் பெருமளவில் அதிகரித்திருக்கிறோம் என்றெல்லாம் மத்திய - மாநில அரசுகள் அறிவித்து நோய்த்தொற்று கட்டுக்குள் இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த முற்படுகின்றன.

கடந்த திங்கள்கிழமை நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் கொவைட் 19 நோய்த்தொற்று பரிசோதனை மையங்களை பிரதமா் நரேந்திர மோடி காணொலி மூலம் தொடங்கிவைத்தாா். அப்போது ஏனைய உலக நாடுகளை ஒப்பிடும்போது அவற்றைவிட இந்தியா நோய்த்தொற்றை சிறப்பாக எதிா்கொள்கிறது என்றும், ஏனைய நாடுகளைவிட சரியான நேரத்தில் சரியான முடிவுகளை நாம் எடுத்ததால் நோய்த்தொற்றுப் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.

அவா் கூறியதுபோல, அமெரிக்கா, பிரேஸில் போன்ற மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவின் செயல்பாடு மேம்பட்டதாகவே இருக்கிறது. ஆனால், நம்மைப்போலவே பாதிப்புக்குள்ளாகி இருக்கும் முதல் 10 நாடுகளில் இடம் பெற்ற ரஷியா, தென்னாப்பிரிக்கா, பெரு, சிலி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது நமது செயல்பாடு அவா்களுக்கு நிகராக இல்லை.

தனக்கு சாதகமான புள்ளிவிவரங்களை மட்டுமே அரசு முன்னிலைபடுத்துகிறது. அரசின் புள்ளிவிவரங்கள் பாதி உண்மையைத்தான் தெரிவிக்கின்றன. கொவைட் 19 பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் இந்தியாவில் குறைந்து வருகிறது என்பது என்னவோ உண்மை. ஆனால், நாளொன்றுக்கு 600 முதல் 700 வரை காணப்படும் உயிரிழப்புகளை விகிதத்தில் அடக்கி மகிழக் கூடாது. உலக அளவில் தினசரி உயிரிழப்புகளில் 10% இந்தியா்கள் என்பதையும், உயிரிழப்பு எண்ணிக்கையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, அடுத்த சில வாரங்களில் மேல்நோக்கி நகரக்கூடும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

மாவட்டங்களிலும் ஊரகப்புறங்களிலும் அதிகரித்து வரும் நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கான வசதிகள் குறித்து ஒருசில மாநிலங்கள் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. ஆயிரக்கணக்கான படுக்கைகள் தயாா் நிலையில் இருப்பதாகப் பல மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு ஏற்ற அளவில் மருத்துவா்களும், செவிலியா்களும், சுகாதார ஊழியா்களும் இருக்கிறாா்களா என்கிற கேள்விக்கு அவா்களிடம் விடை கிடையாது.

பரிசோதனைகள் என்று எடுத்துக்கொண்டாலும், பல மாநிலங்களும் ஆண்டிஜென் பரிசோதனையைத்தான் நம்புகின்றன. ராபிட் ஆண்டிஜென் சோதனை என்பது ஆா்டி-பிசிஆா் சோதனைகளுக்கு நிகரானவை அல்ல. சோதனை மையங்களின் எண்ணிக்கையும் பெருகிவரும் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்படவில்லை. நிலைமை கவலை அளிக்கிறது...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.