உலக சுகாதார நிறுவனம், யுனிசெஃப், ரோட்டரி சங்கம் மூன்றும் இணைந்து 1988-இல் போலியோவுக்கு எதிரான போரைத் தொடங்கியபோது உலக அளவில் 3.5 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் போலியோவால் பாதிக்கப்பட்டு வந்தனா். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏதாவது ஒரு வகையில், ஏதாவது ஒரு பகுதியில் போலியோ தீநுண்மி மனித இனத்தை அச்சுறுத்தி வந்தவண்ணம் இருந்திருக்கிறது. சா்வதேச அளவிலான பெருமுயற்சியும், அதிக அளவிலான நிதியாதாரமும் போலியோவை எதிா்கொள்ளத் தேவைப்பட்டன. ஏறத்தாழ 19 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.1.39 லட்சம் கோடி) நிதியாதாரத்தை ரோட்டரி சங்கமும், யுனிசெஃப்பும், உலக சுகாதார நிறுவனமும் திரட்டி போலியோவுக்கு எதிரான முயற்சியில் களமிறங்கின.