பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிஷன்சிங் பேடியின் சுழற்பந்து! | ஜேட்லி சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஷன்சிங் பேடி எழுதிய கடிதம் பற்றிய தலையங்கம்

News image
Updated On :29 டிசம்பர் 2020, 9:23 pm

ஆசிரியர்

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிரபல சுழற்பந்து வீரருமான பிஷன்சிங் பேடி, தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவருக்கு எழுதியிருக்கும் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தக் கடிதம் விவாதப் பொருளாகி இருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவரது கருத்தை ஏனைய பல கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும்கூட பிரதிபலிப்பார்கள்.
 தில்லியிலுள்ள பிரபல கிரிக்கெட் மைதானமான ஃபெரோஸ்ஷா கோட்லா வளாகத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், தில்லி கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அருண் ஜேட்லியின் சிலை சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் திறந்து வைக்கப்பட்டது. அதற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில்தான் பிஷன்சிங் பேடி அந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறார்.
 ஃபெரோஸ்ஷா கோட்லா மைதானம், அருண் ஜேட்லி மைதானம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டபோதே அதற்கு எதிர்ப்பு எழுந்தது. கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அந்த எதிர்ப்பைப் பிசுபிசுக்கச் செய்துவிட்டது. அதனால், அருண் ஜேட்லியின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்திருப்பதில் வியப்பில்லை.
 ஃபெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் ஒரு பகுதிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் என்பதால் பிஷன்சிங் பேடியின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. தனது பெயரை அகற்றும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார் பேடி. அதுமட்டுமல்லாமல், சிலை வைத்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் தில்லி கிரிக்கெட் அசோசியேஷனின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
 உச்சநீதிமன்றம் தலையிடுவதற்கு முன்பு வரை, கிரிக்கெட் சங்கங்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளாலும், தொழிலதிபர்களாலும்தான் நடத்தப்பட்டு வந்தன. அவர்களது நிர்வாகத்தில்தான் கிரிக்கெட் விளையாட்டு பல சலுகைகளைப் பெற்றதுடன், ஆரம்ப கட்டங்களில் மைதானங்கள் நவீனப்படுத்துதல், பயிற்சிக்கான வசதிகள் ஏற்படுத்துதல் போன்றவை சாத்தியமாயின.
 கிரிக்கெட் மைதானங்களுக்கும், ஏனைய விளையாட்டு அரங்கங்களுக்கும் அரசியல் தலைவர்களின் பெயரைச் சூட்டுவது இந்தியாவில் நீண்டகாலமாகத் தொடரும் வழக்கம். இந்தியாவிலுள்ள 25-க்கும் மேற்பட்ட பிரபல கிரிக்கெட் மைதானங்கள் எதுவும் விளையாட்டு வீரர்களின் பெயரில் அமைக்கப்படவில்லை.
 ஐந்தாறு மைதானங்களில், கிரிக்கெட் வீரர்களின் பெயரில் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவ்வளவே!
 அதேபோல, கிரிக்கெட் மைதானங்களில் பிரபல வீரர்களின் சிலை நிறுவப்படுவதும் மிகமிகக் குறைவு. புணே மைதானத்தில் டி.பி. தியோதருக்கும், விசாகப்பட்டினத்தில் சி.கே. நாயுடுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏனைய மைதானங்களில், கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்குத்தான் சிலைகள் உள்ளனவே தவிர, விளையாட்டு வீரர்கள் கெளரவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
 உலகின் பல்வேறு நாடுகளில், விளையாட்டு அரங்கங்களில் பிரபல விளையாட்டு வீரர்கள்தான் சிலையாகவும், புகைப்படங்களாகவும் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் மைதானங்கள், பார்வையாளர் பகுதிகள், நடைபாதைகள், பெவிலியன்கள் என்று அனைத்துக்குமே விளையாட்டு வீரர்களின் பெயர்களைச் சூட்டுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.
 பல வெளிநாட்டு மைதானங்களில், குறிப்பாக, கிரிக்கெட், கால்பந்தாட்ட மைதானங்களில் விளையாட்டு வீரர்களின் சிலைகளும், புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. டபிள்யு. ஜி. கிரேஸ், ஸர் டொனால்ட் பிராட்மேன், ஸர் கேர்பீல்ட் சோபர்ஸ் ஆகியோரின் சிலைகளுக்கு முன் படம் எடுத்துக் கொள்வதை விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் பெருமையாகக் கருதுகிறார்கள்.
 அதையெல்லாம் பார்க்கும்போது, முன்னாள் கேப்டன் பிஷன்சிங் பேடி கூறுவதுபோல, கோட்லா மைதான முகப்பில் அருண் ஜேட்லியின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டிருப்பது தேவையில்லாதது. இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் எவரும் கெளரவிக்கப்படாத நிலையில், தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்த காரணத்துக்காக அருண் ஜேட்லியின் சிலையை அங்கே நிறுவியிருக்க வேண்டாம். தில்லியின் ஏதாவது ஒரு பகுதியிலோ அல்லது சண்டீகரிலோ அவருக்கு சிலை அமைத்திருக்கலாம்.
 கிரிக்கெட் சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் அந்த விளையாட்டின் வளர்ச்சியில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், அவர்கள் கிரிக்கெட்டின் முகமாக இருக்க முடியாது. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசியல்வாதிகளை வழிநடத்துவது அதிகாரிகளாக இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள் அரசியல்வாதிகளே தவிர, அதிகாரிகள் அல்ல. அதேபோல, விளையாட்டிலும் வீரர்கள்தான் முன்னுரிமை பெறவேண்டும்.
 நிர்வாகிகள் விளையாட்டு வீரர்களைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் பெறுவதால்தான் விளையாட்டிலும் அரசியல் நுழைந்து, வீரர்களின் தரமும் அதனால் பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் வீரர்களுக்காகத்தான் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கிறார்களே தவிர, நிர்வாகத்தினருக்காக அல்ல. தாமதமாக எழுப்பப்பட்டாலும், கேப்டன் பிஷன்சிங் பேடியின் எதிர்ப்புக் குரல், மக்கள் மன்றத்தில் எதிரொலிக்க வேண்டிய குரல்.
 விளையாட்டு அரசியலாகக் கூடாது. விளையாட்டு மைதானம் அரசியல் விளையாட்டுக்கான இடமாகிவிடக் கூடாது. கோட்லா மைதானத்தில் அருண் ஜேட்லியின் சிலை, முகம் சுளிக்க வைக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.